

பிரச்சினைகளையும் சிக்கல்களையும் உள்ளடக்கியதே வாழ்க்கை. சூழல் கடினமாக இருந்தாலும், பிரச்சினைகள் சவால்மிக்கவையாக இருந்தாலும், அவற்றைச் சமாளிக்கும் தெளிவும் மனோதிடமும் நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம். இவற்றை நமக்கு அளிப்பதே உண்மையான தலைமைப் பண்பு. அப்படியானால் தலைமைப் பண்பு என்பது பிறரை வழிநடத்துவதும் ஆள்வதும் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்? தன்னை ஆள முடியாதவன் ஒரு தலைவனாக முடியாது என்பதுதான் இதற்குப் பதில்.
தலைமைப் பண்பைப் பயில்வதற்குப் பள்ளிக்கூடங்கள்தாம் மிகச் சிறந்த இடம். வெளியுலகுடனான முதல் தொடர்பை நமக்கு அளிப்பவை அவைதான். அங்கு கல்வியைக் கற்பதோடு நம்மைச் சுருக்கிக்கொள்ளக் கூடாது. பின்னால், நாம் சந்திக்கப்போகும் சவால்களை எதிர்கொள்ளத் தேவைப்படும் தலைமைப் பண்பையும் நாம் அங்கே வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒழுக்கம் இயல்பாக வேண்டும்
ஒழுக்கம் என்பது வெளியிலிருந்து நம் மீது திணிக்கப்படும் ஒன்றாக இருக்கக் கூடாது. எந்த நிர்ப்பந்தமுமின்றி நம் உள்ளேயிருந்து வெளிப்படும், இயல்பாக அது இருக்க வேண்டும். சின்னசின்னப் பயிற்சிகள் மூலம் இதை இயல்பாக மாற்றிக்கொள்ளலாம். நேரம் தவறாமை, குறித்த நேரத்தில் தூங்கி எழுதல், ஆசிரியர் சொன்ன நேரத்துக்குள் படித்து முடித்தல், அன்றாடம் சுத்தமான உடையணிதல், அன்றாடம் உடற்பயிற்சி செய்தல் ஆகியவை இந்த இயல்பை உருவாக்க உதவும்.
பொறுப்புகளை ஏற்போம்
நிறையப் பொறுப்புகளை விரும்பி ஏற்பது தலைமைப் பண்பை வளர்ப்பதற்கான சிறந்த வழிமுறை. படிப்பதற்கே நேரமில்லை, இதில் எங்கே கூடுதல் பொறுப்புகளை ஏற்பது என்று கேட்கத் தோன்றலாம். இப்படி யோசித்துப் பாருங்கள். 100 மீட்டர் தொலைவுக்கு வேகமாக ஓடுவது என்பது நமக்குச் சிரமமாகத் தோன்றலாம். ஆரம்ப நாள்களில் உசேன் போல்ட்டுக்கும் அவ்வாறுதான் இருந்திருக்கும். ஆனால், அதையும் மீறித் தன் திறனை அவர் சவாலுக்கு அழைத்தார். அதனால்தான் அவரால் 100 மீட்டர் தொலைவை 9.58 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைக்க முடிந்தது.
பொறுப்புகளின் அளவுக்கு ஏற்றவண்ணம் நம் திறனின் அளவும் அதிகரிக்கும். நமக்குக் கிடைக்கும் பொறுப்புகளை விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். வகுப்புக்குத் தலைமை வகிப்பது, விளையாட்டு அணிகளில் பங்கேற்பது, சாரணர் அணியில் இணைவது, சமூக சேவையில் ஈடுபடுவது, வீட்டு நிர்வாகத்தை ஏற்றுப் பழகுவது போன்றவை நம் திறனை அதிகரித்துக்கொள்ள உதவும்.
திறமையை மதிப்போம்
கண்மூடித்தனமாக யாரையும் பின்பற்றுவது மடமை. ஆனால், சில விஷயங்களில் நம்மைவிடச் சிறந்தவர்கள் பலர் இருப்பார்கள். அந்த மாதிரி சூழ்நிலைகளில் அவர்களை பின்பற்றி நடக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அதை இழுக்கென்று கருத வேண்டியதில்லை. முக்கியமாக அவர்களைப் போட்டியாளராகக் கருதாமல் உரிய மதிப்பளித்துப் பழக வேண்டும். கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு என்ற பழமொழியை மறக்காமல், தொடர்ந்து மற்றவர் களிடமிருந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்பது நம் அறிவைப் பட்டை தீட்டும். நம் திறனை மேம்படுத்தும். எந்தப் பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தகுந்த உத்தியை அளிக்கும்.
சூழல் அறிவோம்
சூழ்நிலைகளை முழுமையாக உணர்வதன் மூலம் பிரச்சினைகள் வரும் முன்னே அவற்றை ஊகிப்பவன்தான் உண்மையான தலைவன். சூழ்நிலையை உணர்ந்து பழகும் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் அதை நாம் சாத்தியப்படுத்தலாம். எப்போதும் உங்களுடைய சூழல் குறித்து விழிப்புடன் இருங்கள்.
அதில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளையும் கவனித்துப் பழகுங்கள். பின் அந்தப் பிரச்சினைகளையும் சூழலையும் இணைத்துச் சிந்தித்துப் பாருங்கள். அவ்வாறு நேராமல் இருப்பதற்கு ஏதும் வழியுண்டா என்று யோசித்துப் பாருங்கள். பின் அந்த வழிமுறையை அடுத்த முறை பிரச்சினை வரும்முன் செயல்படுத்திப் பாருங்கள்.
ஊக்கம் நன்று
தன் வேலையை மட்டும் சிறப்பாகச் செய்வது ஒரு தலைவனின் வேலை அல்ல. தன் குழுவில் உள்ளவர்களை ஊக்குவித்து அவர்களிடமிருந்து சிறப்பான திறனை வெளிப்படுத்த வைப்பதுதான் அவரின் முக்கியப் பணி. எனவே, யாரையும் போட்டியாகக் கருதாதீர்கள். பொறாமை கொள்வதைத் தவிர்த்து அனைவரின் திறமைகளையும் அங்கீகரித்து ஊக்குவித்துப் பழகுங்கள்.
சில நேரம் உங்களின் சிறிய ஊக்குவிப்பு அவர்களின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாக இருக்கலாம். நீங்கள் ஏதேனும் ஒரு குழுவின் தலைவனாக இருந்தால், உங்கள் அதிகாரத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளித்துப் பழகுங்கள். இது உங்கள் பணியை மட்டும் சுலபமாக்காது, அந்த நபரின் தன்னம்பிக்கையையும் பன்மடங்கு அதிகரிக்கும்.
வெற்றி நிச்சயம்
வீட்டில் நம்மைக் கடிந்து பேசுவதற்கு யாருமே இல்லாமல் இருக்கலாம். ஆனால், வெளி உலகம் கண்டிப்பாக இதற்கு நேரெதிரானது. தொட்டாற்சிணுங்கியாக இருந்தால் உலகம் உங்களைக் கடந்து போய்க் கொண்டேயிருக்கும். எனவே, உலகை எதிர்கொள்வதற்கு அவசியமற்ற விமர்சனங்களைப் புறந்தள்ளும் திறனும், கீழே விழுந்தால் தானே எழுந்து நிற்கும் திறனும் தேவை. தலைமைப் பண்பை வளர்த்துக்கொண்டால், இத்தகைய இயல்புகள் உங்களைத் தானே வந்தடைந்து வெற்றிக்கு இட்டுச் செல்லும்.