

ஜன.18: அருணாசலப்பிரதேசத்தில் தாரி சூ நதிக் கரையில் ஒரு புதிய கிராமத்தை சீனா கட்டமைத்துள்ளதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தக் கிராமம் சர்வதேச எல்லைக் கோடான மக்மோகன் கோட்டுக்குத் தெற்கே அமைந்துள்ளது.
ஜன.19: சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா (93) காலமானார். புற்றுநோயியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். டாக்டர் முத்துலட்சுமி 1954ஆம் ஆண்டில் அமைத்த அடையாறு புற்றுநோய் மையத்தில் 1955-ஆம் ஆண்டு முதல் சாந்தா பணியற்றிவந்தார்.
ஜன.19: கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளிகள், 10 மாதங்களுக்குப் பிறகு திறக்கப் பட்டன. முதல் கட்டமாக 10, 12-ஆம்
வகுப்புகள் செயல்படத் தொடங்கி யுள்ளன.
ஜன.19: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. அனுபவமற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றது புதிய சாதனை யானது. 2018-19-ஆம் ஆண்டைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியாவில் இந்தியா தொடரை வென்றுள்ளது.
ஜன.20: இந்தியாவில் 2022-ஆம் ஆண்டிலிருந்து ராணுவப் படைப் பிரிவில் பெண்கள் விமானிகளாகச் சேர்க்கப்பட உள்ளனர். தற்போதுவரை பெண்கள் விமானப் படைப் பிரிவில் அலுவலகப் பணி களையே கவனித்து வருகிறார்கள்.
ஜன.20: அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அமெரிக்காவில் அதிக வயதில் அதிபரானவர் என்கிற சாதனையை ஜோ பைடன் படைத்தார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்றார். அமெரிக்க வரலாற்றில் துணை அதிபராகப் பதவியேற்ற முதல் பெண் இவர்.
ஜன.21: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப் பட்டது. இதன்படி தமிழகத்தில் 6,26,74,446 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றனர். இவர்களில் ஆண் வாக்களர்கள் 3,08,38,473 பேர். பெண் வாக்காளர்கள் 3,18,28,727 பேர். மூன்றாம் பாலினத்தவர் 7,473 பேர்.