ஐ.ஏ.எஸ். கனவை நிறைவேற்றும் இணைய வகுப்புகள்

ஐ.ஏ.எஸ். கனவை நிறைவேற்றும் இணைய வகுப்புகள்
Updated on
2 min read

பொதுவாகக் கல்லூரி மாணவர்களின் அதிகபட்சக் கனவு ஐ.ஏ.எஸ். படிப்பதாகத்தான் இருக்கும். இந்த கரோனா காலத்தில் வெளியில் செல்வது சாத்தியமில்லாததால், ஐ.ஏ.எஸ். கனவில் மிதக்கும் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகியிருக்கக்கூடும். இந்த மாணவர்களுக்கான தீர்வை இணையவழிக் கல்வி அளிக்கிறது.

ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுவது சவாலானது. Prelims, Mains, Interview என மூன்று நிலைகளைக் கொண்டது அதன் தேர்வு முறை. பல இணையவழி வகுப்புகள் இவற்றுக்கு உள்ளன. இலவசமாகவே பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அத்தகைய இணைய வகுப்புகளில் ஒன்றே www.clearias.com. சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த பயத்தை முற்றிலும் களையும் வகையிலும் அமைந்துள்ள இதன் வகுப்புகள், எளிதாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் உள்ளன. சிவில் சர்வீஸ் தேர்வு எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு பருந்துப் பார்வையில் நமக்குத் தெளிவாக உணர்த்துவது இதன் சிறப்பு அம்சம்.

தேர்வு வடிவமைப்பு

எடுத்துக்காட்டுக்கு, Prelims தேர்வில் இரண்டு நிலைத் தேர்வுகள் உள்ளன. ஒவ்வொரு தேர்வுக்கும் தலா 200 மதிப்பெண்கள். முதல் தேர்வில் 100 கேள்விகள் இந்திய அரசியலமைப்பு, இந்திய வரலாறு, சுற்றுச்சூழல், பொது அறிவியல், பொருளாதாரம், புவியியல் ஆகிய துறைகளிலிருந்து கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் இரண்டு மதிப்பெண்கள். இந்த 100 கேள்விகளுக்கும் இரண்டு மணி நேரத்துக்குள் பதிலளித்து முடிக்க வேண்டும்.

திட்டமிடல்

இதற்குப் பின் ஒவ்வொரு கேள்வியும் எப்படிக் கேட்கப்படும், அதற்கு விடையளிக்க நாம் என்னென்ன படிக்க வேண்டும் என்பதை எளிதான முறையில் இந்த இணைய வகுப்பு விளக்குகிறது. பின் அதற்கான இணைய வகுப்புகளைப் பற்றி அறிமுகப்படுத்தி, அந்தப் பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறது. இந்த இணைய வகுப்பின்படி, Prelims தேர்வில் முதன்முறையில் தேர்ச்சிபெற ஆறு மாதங்கள் முழு ஈடுபாட்டுடன் படிக்க வேண்டும். அந்த வகையில் வகுப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வெல்வது எப்படி?

ஐ.ஏ.எஸ். தேர்வில் முதன்முறையிலேயே தேர்ச்சிபெறுவது என்பது சவாலானது. இந்த இலவச இணைய வகுப்பு அதை சாத்தியப் படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, தகவல்களையும் புத்தகங்களையும் முந்தைய கேள்வித்தாள்களையும் தேடி நூலகம் நூலகமாக இனி செல்ல வேண்டிய அவசியமில்லை. எல்லாமே இந்த இணைய வகுப்பில் முறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

வகுப்புகள் முடிந்தபின், ஐ.ஏ.எஸ். மாதிரித் தேர்வுகளை இணையதளமே நடத்துகிறது. இந்த வகுப்பின் சிறப்பே இந்தத் தேர்வுகள்தாம். இவை மாணவர்களுக்குத் தேவைப்படும் உந்துதலையும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் ஒருங்கே அளிக்கின்றன.

ஆட்சியராவது சாத்தியமே

அரசு ஊழியர்களில் முதன்மையானவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதும் குறைகளைக் களைவதும் தலைவர்கள் போடும் திட்டங்களைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதும் இவர்கள்தாம்.

கலெக்டர் ஆகும் கனவு, பள்ளிப் பருவத்தில் பலருக்கு இருந்திருக்கும். அந்தக் கனவின் மீது உறுதியான பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டவர்கள் மட்டுமே, கல்லூரி படிப்புக்குப் பின் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய வெகுசிலர் மட்டுமே கனவு நிறைவேறி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக முடிகிறது. இந்த இலவச இணைய வகுப்புகள் ஐ.ஏ.எஸ். கனவை சாத்தியப்படுத்த உதவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in