Published : 05 Jan 2021 08:22 am

Updated : 05 Jan 2021 10:19 am

 

Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 10:19 AM

2020 கல்வி நூல்கள்

educational-books

2020ஆம் ஆண்டில் வெளியான கல்வி தொடர்பான சில குறிப்பிடத்தக்க நூல்கள்:

கல்வியைத் தேடி


மைசூரில் உள்ள ஜே.எஸ்.எஸ். அறிவியல் - தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் லெ.ஜவகர்நேசன்

கல்விக்கொள்கை குறித்து எழுதிய ‘இன் சர்ச் ஆஃப் எஜுகேஷன்’ (In Search of Education) புதிய கல்விக் கொள்கை வரைவு வெளியிடப்பட்ட 2019இல் வெளியானது. 2020இல் புதிய கல்விக்கொள்கை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கும் சூழலில், அதன் தமிழ் வடிவம் வெளியாகியுள்ளது. நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் புதிய கல்விக் கொள்கையில் உள்ள பிரச்சினைகளை குறித்து இந்த நூல் விரிவாக விவாதிக்கிறது. சந்தையின் தேவையை அல்லாமல் சமூகத்தின் தேவையைத் தீர்க்கும் கருவியாக கல்வியை உருமாற்றுவதற்கான கல்விக் கொள்கையை உருவாக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

லெ.ஜவகர்நேசன், தமிழில்: கமலாலயன்; பாரதி புத்தகாலயம் தொடர்புக்கு: 044-24332924

இமயத்தில் விவேகானந்தர்

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ இந்தியில் எழுதிய ‘ஹிமாலய் மே விவேகானந்த்’ என்னும் நூலின் தமிழாக்கம். சுவாமி விவேகானந்தர் குறுகிய காலமே வாழ்ந்தாலும் பல முறை இமயச் சிகரங்களுக்குப் பயணித்தார். தியானத்தின் மூலம் தன் சுயத்தை அறியவும் பிரபஞ்சம் குறித்த ஆழமான புரிதலைப் பெறவும் இமயமலைப் பயணங்கள் அவரிடம் முக்கியப் பங்களித்தன. இந்தப் பயணங்களை விவரிப்பதன் வழியே நரேந்திர தத் என்னும் சாமானிய மனிதர் விவேகானந்தராக உருவான வரலாற்றை இந்நூல் பதிவுசெய்கிறது.

ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட் தொடர்புக்கு: 044-28252663

குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம்

இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்ட 1,465 பக்கங்கள் கொண்ட இந்த நூல் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கொண்டுவர எத்தனித்த குலக்கல்வித் திட்டம் எத்தகையது, அதை தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் ஏன் எதிர்த்தார்கள், குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பெரியார் தலைமையில் அவருடைய இயக்கத்தினர் நடத்திய போராட்டம் எப்படிப்பட்டது, அதில் கையாளப்பட்ட உத்திகள், போராட்டத்தின் விளைவாக குலக்கல்வித் திட்டம் கைவிடப்பட்டது ஆகியவற்றின் விரிவான வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது.

கா.கருமலையப்பன், ந.பிரகாசு, இரா.மனோகரன்; வெளியீடு – தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடர்புக்கு: 97883 24474/98941 22488

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி

சங்ககாலத் தமிழர்களின் கல்வி குறித்து 1950-களில் தமிழ் கல்ச்சர் இதழில் சேவியர் தனிநாயகம் அடிகள் எழுதிய நான்கு ஆங்கிலக் கட்டுரைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. பொ.ஆ.மு. (கி.மு.) 50 முதல் பொ.ஆ. (கி.பி.) 200 வரையிலான காலகட்டத்தில் தமிழ்ச் சமூகத்தில் பெண் புலவர்கள் இருந்ததையும் வணிகர்கள், வேளாண்மையில் ஈடுபட்டோர், கைவினைக் கலைஞர்கள், தச்சர். கொல்லர், மண்பாண்டம் செய்வோர் உள்ளிட்டோரும் பாடல் இயற்றும் அளவுக்கு சிறப்பான கல்வி அறிவைப் பெற்றிருந்ததை இந்த நூலில் உள்ள கட்டுரைகள் சான்றுகளுடன் பதிவுசெய்துள்ளன.

சேவியர் தனிநாயகம் அடிகள், தமிழில் – ந.மனோகரன்; வெளியீடு- பரிசல் தொடர்புக்கு: 93828 53646

‘இந்து தமிழ்’ வெளியீடு

மனசு போல் வாழ்க்கை 2.0

மனிதவளப் பயிற்றுநர் டாக்டர்.ஆர்.கார்த்திகேயன், ‘இந்து தமிழ் வெற்றிக்கொடி’ இணைப்பிதழில் எழுதிய கட்டுரைகள், வாசகர் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் ஆகியவற்றின் தொகுப்பு. மாணவர்கள், இல்லத்தரசிகள், மென்பொருள் பொறியாளர்கள், முதியோர் என பல தரப்பினர் தம் மனம் விடுத்த சவால்களை கேள்விகளாக அனுப்ப, அவற்றுக்குத் தன் அனுபவ அறிவோடு கார்த்திகேயன் பதலளித்துள்ளார்.

அவருடைய பதில்களும் கட்டுரைகளும் மனித மனம் குறித்த அலசல்களாகத் திகழ்கின்றன. பயம், பதற்றம், மன அழுத்தம், கோபம், வருத்தம், ஏமாற்றம், குற்ற உணர்வு போன்ற மன ஆர்ப்பாட்டங்ளை ஆற்றுப்படுத்தும் பக்குவத்தை வாசகர்களுக்கு வழங்குகின்றன.


டாக்டர் ஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை தொடர்புக்கு: 74012 96562 ஆன்லைனில் புத்தகங்களை வாங்க: store.hindutamil.in/publications

தமிழ்ச் சமூகத்துக்கான தகவல்-அறிவுப் பொக்கிஷம்

‘இந்து தமிழ் இயர்புக் 2021’

‘இந்து தமிழ் இயர்புக் 2021’ தமிழ் மக்களுக்கான அறிவு - தகவல் சார்ந்த ஒரு பொக்கிஷம். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு ஏற்ற அருமையான களஞ்சியமாக இதைக் கருதுகிறேன். இந்த நூலில் கலை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம், நோய்கள், பொருளாதாரம் சார்ந்து மக்கள் சந்தித்த துன்பங்கள் ஆகியவை தொடர்பாக நிறைய தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

அவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது 2020இல் மக்களை பெரிதும் பாதித்த கரோனா வைரஸ் குறித்த தகவல்கள். அவற்றை மிக எளிமையாக அனைவருக்கும் புரியும்படி எழுதிய டாக்டர் கு.கணேசன் பெரிதும் பாராட்டுக்குரியவர். அவருடைய கருத்துகள் தமிழ் சமுதாயத்துக்கு குறிப்பாக தமிழ் அறிவியல் சமுதாயத்துக்கு, ஒரு கண் திறப்பாக அமைந்திருக்கின்றன.

கரோனா குறித்து மற்றவர்கள் எழுதியுள்ள கட்டுரைகளும் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும் சிறப்பாகவும் எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அறிவியல் சார்ந்து கரோனா வைரஸின் தன்மைகள், வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள், தடுப்பூசிகள் - அவற்றின் பயன்பாடு குறித்த விளக்கங்கள், தேசியத் தடுப்பூசித் திட்டங்கள் குறித்த தகவல்கள் ஆகியவை விரிவாக தரபட்டுள்ளன.

இந்த புத்தகம் பொதுமக்களை குறிப்பாக இளைஞர்களைச் சென்றடைய வேண்டும். பொதுசுகாதாரம் என்பது மருத்துவம் தொடர்பானது மட்டுமல்ல பொருளாதாரம், சமூகவியல், உளவியல் எனப் பலவற்றை உள்ளடக்கியது. இவை அனைத்தையும் ஒன்றாக உள்ளடக்கிய ஒரு சிறந்த புத்தகமாக ‘இந்து தமிழ் இயர்புக் 2021’ஐக் கொண்டுவந்திருப்பது ஒரு பொதுசுகாதாரத் துறை நிபுணர் என்கிற முறையில், எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக ‘இந்து தமிழ் இயர்புக்’ குழுவினரை மனதாரப் பாராட்டுகிறேன்.

- டாக்டர் பி.குகானந்தம், தொற்றுநோயியல் நிபுணர். தமிழக அரசின் கோவிட் - 19 நோய்த் தடுப்பு - கண்காணிப்புக்கான நிபுணர் குழுவின் மூத்த உறுப்பினர்

‘இந்து தமிழ் இயர்புக் 2021’ இல் பல பயனுள்ள
கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 800 பக்கங்கள், விலை ரூ. 250. ஆன்லைனில் பதிவு செய்ய: store.hindutamil.in/publications
புத்தகங்களை அஞ்சல்/கூரியர் மூலம் பெற:
‘KSL MEDIA LIMITED’ என்கிற பெயரில்
DD, Money Order, Cheque
அனுப்ப வேண்டிய முகவரி: இந்து தமிழ் இயர் புக் 2021,
இந்து தமிழ் திசை, 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.
தொடர்புக்கு: 7401296562 / 7401329402


கல்வி நூல்கள்Educational BooksBooksகல்வியைத் தேடிவிவேகானந்தர்பெரியார் இயக்கம்பண்டைத் தமிழ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

weekly-news

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x