

நவ.26: லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய மலையாளத் திரைப்படமான ‘ஜல்லிக்கட்டு’ வெளிநாட்டு மொழி திரைப்படப் பிரிவில் ஆஸ்கார் விருதுக்குப் போட்டியிட அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டது. குறும்படப் பிரிவில் கீத்கோம்ஸ் இயக்கிய ‘ஷேம்லெஸ்’ தேர்ந்தெடுக்கப்பட்டது.
நவ.27: சர்வதேச கிரிக்கெட் கவுன்சலின் புதிய தலைவராக நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்லே நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சஷாங் மனோகரின் பதவிக்காலம் முடிவடைவதால், அவருக்குப் பதில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நவ.27: தொடர்ந்து ஆறாவது முறையாக உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் என்கிற விருதை தமிழகம் பெற்றது.
நவ.28: மிசோராம் எம்.எல்.ஏ. லால்டுஹோமா சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுயேச்சை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டபோதிலும் ஒரு கட்சியின் சார்பாக தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்திக்கொண்டதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நவ.30: உத்தரப்பிரதேசத்தில் கட்டாய மத மாற்றத்துக்கு எதிராக மாநில அமைச்சரவை ஓர் அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்தின்படி மதமாற்றத்துக்காக நடத்தப்படும் திருமணங்கள் செல்லாதவை என அறிவிக்கப்படும்.
டிச.1: உலகில் அதிக அளவில் விமான இணைப்பை கொண்ட நகரமாக ஷாங்காய் நகரை சர்வதேச வான்வெளிப் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமாக லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் தேர்வாகியுள்ளது.
டிச.4: தெற்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல் இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. பின்னர் இந்தப் புயல் தமிழகத்தின் கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையே வலுவிழந்து கரையைக் கடந்தது. இதனால், தென் மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது.