

கற்பித்தலைவிடத் தன்னலமற்ற பணி இவ்வுலகில் எதுவுமில்லை. ஒரு மாணவனின் வாழ்வை மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதும் பொறுப்பு ஆசிரிய சமூகத்திடம்தான் இருக்கிறது. இதை நிரூபித்துக் காட்டி யிருக்கிறார் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங் டிசாலே.
உலக அளவில் சிறந்த பங்களிப்பை ஆற்றிவரும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், 2014 ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதை லண்டனைச் சேர்ந்த ‘வர்க்கி டிரஸ்ட் ’வழங்கி வருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த 10 ஆசிரியர்களைத் தேர்வுசெய்து, அவர்களில் ஒருவருக்கு ’உலகின் மிகச்சிறந்த ஆசிரியர்’ என்கிற விருதை வழங்குகிறது அந்த நிறுவனம். ஆசிரியர் பணியில் ஈடுபாடு, கடின உழைப்பு, மாணவர்களின் திறன் மீதான நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் இந்த விருதுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மதிப்புமிக்க இந்த விருதை சோலாபூர் மாவட்டம் பரிதேவாடி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் சிங் டிசாலே (32) இந்த ஆண்டு பெற்றிருக்கிறார்.
சாதனைகள்
பரிதேவாடி கிராமத்தில் மாவட்ட ஆரம்பப் பள்ளியில் ரஞ்சித் சிங் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்தப் பள்ளியில் 2009-ஆம் ஆண்டு அவர் ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது மிகவும் பாழடைந்த கட்டடத்தில் அந்தப் பள்ளி இயங்கிவந்தது. பள்ளியைச் சுற்றி மாட்டுக் கொட்டகை, தீவன சேமிப்பு அறை என மிக மோசமான சூழல் இருந்தது. தன்னலமற்ற கடின உழைப்பின் மூலம், இந்தச் சூழலை ரஞ்சித்சிங் மாற்றியமைத்தார்.
பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்தார். பாடப் புத்தகத்தில் சிறப்பு கியூ.ஆர். குறியீடு முறையை அறிமுகம் செய்தார். மாணவர்கள் அதை கிளிக் செய்தால் பாடங்களை ஒலி வடிவில் கேட்கவும், பாடங்களையும் கதைகளையும் காணொலி வழியில் பார்க்கவும் ஏற்பாடு செய்தார்.
பரிதேவாடி கிராமத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெண் குழந்தைகளைச் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கும் வழக்கமும் அவர்களிடையே இருந்தது.
பள்ளிப் பாடப்புத்தங்கள் அந்தக் குழந்தைகளின் தாய்மொழியான கன்னடத்தில் இல்லை. பெருமுயற்சி எடுத்து ரஞ்சித் சிங் கன்னடத்தைக் கற்றுக்கொண்டார். பின்னர் 1 முதல் 4 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பாடப்புத்தங்களை கன்னட மொழியில் வடிவமைத்தார்.
இவருடைய பள்ளியில் பாடப் புத்தக கியூ.ஆர். குறியீடு முன்னோட்டத் திட்டம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும் இந்த நடைமுறையை மகாராஷ்டிர அரசு அறிமுகம் செய்தது. அதுபோல், தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி (என்.சி.இ.ஆர்.டி.) கவுன்சிலின் அனைத்து பாடப் புத்தகங்களில் கியூ.ஆர். குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நனவான கனவு
இவரது முயற்சிகள் பெருமளவில் வெற்றி கண்டன என்பதற்கு, அந்த கிராமத்தில் தற்போது சிறுவயதில் திருமணம் செய்துவைக்கும் வழக்கம் கைவிடப்பட்டதே சான்று. இன்று 100 சதவீத மாணவிகள் பள்ளிக்கு வருகின்றனர். இவருடைய பள்ளியே மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக தற்போது திகழ்கிறது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பழங்குடி பெண் தற்போது பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். ரஞ்சித்சிங் இந்த கிராமத்திற்கு வந்தபோது இவையெல்லாம் அந்த மக்களின் கனவிலும் சாத்தியமில்லாத நிகழ்வாக இருந்தன.
உண்மையான மாற்றம்
இந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் பரிசை வென்ற ரஞ்சித் சிங், தனது பரிசுத்தொகையில் 50 சதவீதத்தை, இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வான மற்ற 9 பேருடன் சமமாகப் பகிர்ந்து கொள்ளப் போவதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மாணவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியர்கள்தான், உலகின் உண்மையான மாற்றத்தை உருவாக்குபவர்கள். அந்த வகையில், நான் கொடுப்பதிலும், பகிர்ந்தளிப்பதிலும் நம்பிக்கைக் கொண்டுள்ளேன். எனவே, எனது பரிசுத் தொகையில், 50 சதவீதத்தைப் பிற இறுதிப் போட்டியாளர்களுடன் பகிர்ந்துகொள்வேன். இதனால் அவர்கள் சார்ந்த நாட்டின் மாணவர்கள் பயனடைவார்கள் என்று நம்புகிறேன்' என்று கூறினார்.
இந்த விருதைப் பெறுவதற்கு இதைவிட வேறு என்ன தகுதி அவருக்கு வேண்டும்?