பள்ளி, கல்லூரி திறப்பு: கவனிக்க வேண்டியவை

பள்ளி, கல்லூரி திறப்பு: கவனிக்க வேண்டியவை
Updated on
1 min read

கடந்த மார்ச் மாதம் தொடங்கி கரோனா பெருந்தொற்றுப் பேரிடரால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது தீபாவளி முடிந்ததும் நவம்பர் 16 பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்னும் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அநேகமாக பெற்றோரின் ஒப்புதல் கடிதத்துடன் வரும் மாணவர்களே பள்ளி, கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரம் பள்ளி, கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயும் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்கு பரிசோதனைக் கூடங்களில் பயிற்சிகள் நடைபெறலாம். இதுபோன்று பள்ளியில் பயன்படுத்தப்படும் கருவிகளை தகுந்தமுறையில் கிருமிநாசினி மூலம் நாள்தோறும் சுத்தப்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் வகுப்புகள் நடைபெறும் இடங்களில் போதுமான அளவுக்கு காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இடையே தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவதை உறுதிசெய்வது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். பள்ளிகளில் இருக்கும் விளையாட்டு மைதானங்களிலும் திறந்தவெளி வராண்டாக்களிலும் வகுப்புகளை நடத்துவது மாணவர்கள், ஆசிரியர்கள் இருவருக்குமே நன்மை அளிப்பதாக இருக்கும்.

என்.சி.இ.ஆர்.டி. தயாரித்து அளித்துள்ள மாற்றுக்கல்வி அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு, முழுக் கல்வி ஆண்டுக்கும் விரிவான அட்டவணையை பள்ளிகள் உருவாக்க வேண்டியது அவசியம். அவசரகால உதவிக் குழு, பொதுப் பாதுகாப்புக் குழு, சுகாதாரப் பரிசோதனைக் குழு போன்ற செயல்பாட்டுக் குழுக்கள் பள்ளிகளில் உருவாக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

இதுவரை ஆறு மாதங்களுக்கு மேலாக வீட்டிலிருந்தபடி இணையத்தின் மூலமாக கல்வி கற்ற மாணவர்கள், மீண்டும் பள்ளியில் நேரடியாக ஆசிரியரிடம் கல்வி கற்கும் முறைக்கு மாறுவதற்கு சிறிது கால அவகாசத்தை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உடல்நலனுக்கு உதவும் ஊட்டச்சத்தான மதிய உணவை தகுந்த முறையில் அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in