

அக். 15: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே. சண்முகத்தின் பணிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது. அதன்படி 2021 ஜனவரி 31-ம் தேதி வரை அவர் பணியில் இருப்பார்.
அக். 15: தமிழகத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான அத்னான், கேசவன், அருண் ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கிய ‘இந்திய சாட்’ என்ற சோதனை செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நாசாவால் ஏவப்பட உள்ளது. இது உலகின் மிகச்சிறிய, இலகுவான செயற்கைக்கோளாகக் கருதப்படுகிறது.
அக் 16: அதிவேக ரயில்களில் குளிர்சாதன வசதியற்ற படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் அனைத்தையும் குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகளாக மாற்ற இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன்படி மணிக்கு 130 கி.மீ அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் செல்லும் மெயில், விரைவு ரயில்கள் குளிர்சாதன வசதியை மட்டுமே கொண்டிருக்கும் வகையில் மேம்படுத்தப்பட உள்ளன.
அக்.16: போலந்து நாட்டின் கடற்படை நடத்திய பயிற்சியில், இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டு நீருக்கடியில் வெடித்தது. 5 டன் எடைகொண்ட இந்தக் குண்டு ‘Tall boy' என்று அழைக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு கண்டறியப்பட்டிருந்தது.
அக். 17: பிறப்பு, இறப்புப் பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. மக்கள் தாமாக முன்வந்து ஆதார் அட்டையை வழங்கினாலும், அந்தத் தகவல்களை எந்த ஆவணத்திலும் பதியக் கூடாது; அந்தத் தகவல்களை எந்தத் தளத்திலும் சேமிக்கக் கூடாது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
அக். 17: நீலகிரி மாவட்டத்தில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் படுகர் இன மக்களைப் பூர்வகுடியினருக்கான பட்டியலில் சேர்த்து ஐ. நா. மலைகளுக்கான கூட்டமைப்பு அறிவித்துள்ளது. முன்னதாக ‘நீலகிரி ஆவண மைய காப்பகம்’சார்பில் உலக பூர்வகுடியினருக்கான பட்டியலில் நீலகிரி படுகர் சமுதாயம் இடம்பெற வேண்டி, அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பம் அளித்திருந்தது.