

இ. இனியன் இளவழகன்
தொல்லியல் எச்சங்கள் என்பவை நம்முடைய மூதாதையரின் மரபுவழிப் பண்பாட்டுத் தொடர்புகளாக உள்ளதுடன், ஆக்கபூர்வமான தொல்லியல் ஆய்வின் அங்கமாகவும் பண்பாட்டுத் தொடர்ச்சியின் படிநிலையாகவும் அறியப்படுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் கல்வியைத் தொலைநிலையில் கற்பதன்மூலம் வரலாற்று ஆய்வு மேலும் பரவலாகும்.
தொலைநிலை எனும் வரப்பிரசாதம்
பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள், தன்னார்வத்தால் தொல்லியலை முறைப்படிக் கற்று அறிவாற்றலைப் பெற நினைப்பவர்கள், பணியில் இருப்பவர்கள், மாணவர்கள், தொல்லியல் ஆர்வம் மிகுந்த இல்லத்தரசிகள், தொல்லியல் ஆர்வலர்கள், தொன்மைச் சின்னங்களைப் பாதுகாக்க விருப்பமுள்ளவர்கள் ஆகியோருக்குத் தொல்லியல் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பைத் தொலைநிலைக் கல்வி வழங்குகிறது.
தொல்லியல் கவன ஈர்ப்பு
அச்சு, காட்சி ஊடகங்கள் தொல்லியல் அகழாய்வு பற்றிய செய்திகளை நாள்தோறும் ஒளிபரப்புகின்றன, அதன் வெளிப்பாடாக வரலாற்றின் மீதான ஆர்வம் இயல்பாகவே மக்களிடம் அதிகரித்துள்ளது. தொலைநிலைக் கல்வியில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் நேரடித் தொடர்புகொள்ள முடியாத நிலையில், தொலைநிலைக் கல்வி சார்ந்து உருவாக்கப்படும் பாடத்திட்டம், பன்முகப்பட்ட வரலாற்று எச்சங்களை, அவற்றின் ஆதார அம்சங்களை எளிதாக உணர்ந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
அத்துடன் இந்தத் துறையில் முன் அனுபவம் இல்லாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் சரியான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, தொல்லியல் கள ஆய்வு மேற்கொள்ள வழிகாட்டப்படுகிறது. அகழாய்வின் ஒவ்வொரு நிலையையும் எளிய முறையில் விளக்கும்விதமாகப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொலைநிலையில் தொல்லியல் கல்வியைப் பெறுவதன்மூலம் ஏற்கெனவே அதைப் பற்றிய அறிவும் ஆற்றலும் இருந்தும் அங்கீகரிக்கப்படாத ஆய்வாளர்களும் மாணவர்களும் முறையான அங்கீகாரத்தைப் பெறுகிறார்கள். அத்துடன் ஆய்வின் அடுத்த கட்டத்துக்கும் நகர்கிறார்கள்.
தொழில்நுட்பப் பயன்பாடு
பண்பாட்டு எச்சங்களைப் பாதுகாக்கும் பணியில் உள்ள ஆர்வலர்கள், நுணுக்கமான தொழில்நுட்பங்களை முறைப்படி கற்றறிய இந்தப் படிப்பு உதவுகிறது. அழியும் நிலையிலும், பராமரிப்பின்றியும் உள்ள நினைவுச் சின்னங்கள், தொல்லியல் எச்சங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மக்களின் துணையுடன் அவற்றைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவும் இந்தப் படிப்பு வழிவகைசெய்கிறது.
சமமான படிப்பு
பல்வேறு மாநில அரசுகளின் தொல்லியல் துறை, மத்திய அரசின் தொல்லியல் துறை, தமிழகத்தைப் பொறுத்தவரை இந்து சமய அறநிலையத் துறை, சுற்றுலாத் துறை போன்றவற்றில் தொல்லியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம். தேசிய அளவில் கர்நாடக திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மத்தியபிரதேச போச் திறந்தநிலைப் பல்கலைக்கழகம், கர்நாடகத்தின் ஷிமோகாவிலுள்ள குவெம்பு பல்கலைக்கழகம், மகாராஷ்டிரத்தின் கோலாபூரிலுள்ள சிவாஜி பல்கலைக்கழகம் ஆகியவை தொல்லியல் கல்வியைத் திறந்தநிலை வழியில் வழங்குகின்றன.
நேரடியாகக் கற்கும் படிப்புக்குச் சற்றும் குறையில்லாத வகையில் தொலைநிலைக் கல்வி வழங்கப்படுகிறது. தொல்லியல் ஆய்வு என்பது மறைக்கப்பட்ட, மறந்துபோன வரலாற்றின் இருண்ட பக்கங்களை நம் வருங்கால சந்ததியினருக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவது. அத்தகைய தொல்லியல் கல்வியைத் தொலைநிலையில் கற்பதற்கான வாய்ப்பு சமீப காலத்தில் அதிகரித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரையாளர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்
தொடர்புக்கு: initnou@gmail.com