

தனியார் கல்லூரிகள் பொறியியல் படிப்பில் எப்படி ஒரு தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தினவோ, அதேபோல் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவ படிப்பில் தற்போது மாற்றத்தை ஏற்படுத்திவருகின்றன. அறிவு, திறன், மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை ஆகியவை இருந்தால்போதும், அதை நிறைவேற்றத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் வரிசையில் நிற்கின்றன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்க அதிக செலவாகுமே, அவ்வளவு வசதி என்னிடம் இல்லையே என்று மலைத்து நிற்பவர்களுக்கு, அசர்பைஜான் அரசு மருத்துவப் பல்கலைக்கழகம் வழிகாட்டுவதுடன், அவர்களின் மருத்துவக் கனவையும் நனவாக்குகிறது.
இந்தியத் தொடர்பு
இந்தியாவுக்கும் அசர்பைஜானுக்குமான பந்தம் 300 ஆண்டுகளுக்கு மேலானது. 17-ம் நூற்றாண்டிலேயே இந்தியர்கள் அசர்பைஜானுக்குச் சென்று வணிகம் செய்துள்ளனர் என்கின்றன வரலாற்றுத் தரவுகள். அந்த நாட்டின் தலைநகர் பாகுவிலிருக்கும் அடேஸ்கா எனப்படும் நெருப்புக் கோயில், இதற்குச் சான்றாகவுள்ளது. மார்ச் மாதத்தில் வரும், 'நவ்ராஸ்' எனப்படும் பாரசீகப் புத்தாண்டு நாளில், இந்த நெருப்புக் கோயிலில் வழிபடுவதற்கு இந்தியர்கள் இன்றும் செல்கின்றனர். அசர்பைஜானின் முதன்மை வருவாய், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் ஏற்றுமதியிலிருந்தே கிடைக்கிறது. கல்வியின் தரத்தை மேம்படுத்தி வடிவமைப்பதன் மூலம், பாகு நகரை சர்வதேச அளவில் கல்விக் கேந்திரமாக மாற்ற, அசர்பைஜான் முயன்றுவருகிறது. இதனால்தானோ என்னவோ, உயர்கல்வித் துறையை அந்நாட்டு அரசு தனது வசம் வைத்திருக்கிறது,
அசர்பைஜானில் படிக்கலாம்
”1991ல், அசர்பைஜான், சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்யப்பட்ட உடனேயே, நம் நாடு அதை அங்கீகரித்து, 1999-ல் பாகுவில் இந்தியத் தூதரகம் திறக்கப்பட்டது. அதன் பிறகு கல்விக்காகவும் வேலைக்காகவும் வணிகத்துக்காகவும் இந்தியர்கள் அங்கே செல்லும் போக்கு அதிகரித்தது" என்கிறார் ராகேஷ் குமார் சிவன். கோயம்புத்தூரைச் சேர்ந்த ராகேஷ் (rakesh@getdirectionglobal.com), தன்னுடைய ‘கெட் டைரக்ஷன் குளோபல் சொல்யூஷன்ஸ்’ எனும் நிறுவனத்தின் மூலம், கடந்த 12 ஆண்டுகளாக மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு மாணவர்களை அனுப்பிவருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அசர்பைஜானின் இந்தியத் தூதரகம், அசர்பைஜான் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இவருடைய நிறுவனம் நெருக்கமாகச் செயல்பட்டு, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்புகளுக்காக இந்திய மாணவர்களை அனுப்பிவைக்கிறது.
அசர்பைஜான் மருத்துவப் பல்கலைக்கழகம், பாகு ஆயில் அண்ட் கேஸ் யுனிவர்சிடி, அசர்பைஜான் ஸ்டேட் மரைன் அகாடமி, அடா யுனிவர்சிடி, வெஸ்டர்ன் காஸ்பியன் யுனிவர்சிடி ஆகியன அந்த நாட்டின் பெரிய பல்கலைக்கழகங்கள்.
சிறப்பம்சங்கள்
அசர்பைஜான் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள் மருத்துவம் பயில்வதற்கு, விடுதி கட்டணத்துடன் 27 லட்ச ரூபாய். இந்திய உணவுக்கு ஆறு ஆண்டு காலத்துக்கு, மூன்றிலிருந்து நான்கு லட்ச ரூபாய். மொத்தம் 31 லட்ச ரூபாயில், மருத்துவர் பட்டம் வாங்கிவிடலாம். இந்தியாவில் தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க குறைந்தபட்சம் 1.5 கோடி ரூபாய் ஆகும்.
அசர்பைஜானில் மருத்துவம் படிப்பதற்கு, பிளஸ் 2வில் முதல் குரூப்பில் முதல் வகுப்பில் பாஸ் செய்திருக்க வேண்டும்; அடுத்து 'நீட்' தேர்விலும் 'பாஸ்' செய்திருக்க வேண்டும். பாகு மெடிக்கல் பல்கலைக்கழத்தில் 85 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் ஐந்து பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கே மருத்துவப் படிப்பை முடித்ததும், மாணவர்கள் இந்தியா திரும்பி 'நெக்ஸ்ட்' தேர்வு எழுதி, 'பிராக்டீஸ்' செய்யலாம்.
பாகு ஆயில் அண்ட் கேஸ் யுனிவர்சிடி, மரைன் அகாடமி ஆகியவற்றில் பொறியியல் படிப்புகளை படித்து முடிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு, அசர்பைஜானிலேயே வேலை கிடைத்துவிடுகிறது.
மாணவர்களுக்கு வரப்பிரசாதம்
தகுதியும் திறனும் இருந்தும்கூட, போதிய மதிப்பெண் இல்லையென்ற ஒரே காரணத்துக்காக பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கான வாய்ப்பு பல மாணவர்களுக்கு நிராகரிக்கப்பட்டுவந்துள்ளது. அத்தகைய மாணவர்களுக்கான வரப்பிரசாதமாக அசர்பைஜான் படிப்புகள் திகழ்கின்றன.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in