

கரோனா ஊரடங்கால் அவதிப்படும் மக்களை ஆற்றுப்படுத்தவும் நம்பிக்கையான எதிர்காலத்துக்கான வாழ்த்தைத் தெரிவிக்கும் வகையிலும் புன்னகையை முகத்தில் தேக்கிய துணி பொம்மைகளை, வீணான துணிகளைக் கொண்டு உருவாக்கி அதற்கு `கோவிடா’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். யார் தெரியுமா? லம்பாடி பழங்குடியினப் பெண்கள்.
தர்மபுரி மாவட்டத்தின் சிட்டிலிங்கி பள்ளத்தாக்கில் வசிப்பவர்கள் லம்பாடி பழங்குடியினர். நாடோடிப் பழங்குடியினரான இவர்கள் மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய இடங்களில் குடியேறியிருக்கின்றனர். லம்பாடி பழங்குடியினரின் கைவினைக் கலை, பண்பாட்டுப் பெருமைகளையும் அவர்களின் உடல்நலனைப் பாதுகாக்கவும் டாக்டர் லலிதா ரெஜியால் 1992இல் சிட்டிலிங்கி பள்ளத்தாக்கில் தொடங்கப்பட்ட தன்னார்வ அமைப்பு `பொற்கை’.
லம்பாடி மொழியில் இந்த சொல்லுக்கு `பெருமை’ என்று அர்த்தம். இந்த அமைப்பின் கீழ் 60-க்கும் மேற்பட்ட லம்பாடிப் பழங்குடியினப் பெண்கள் ஆடைகள், வீட்டை அலங்கரிக்கும் துணியால் செய்யப்படும் பொருள்கள், கைப்பை, காது-கை-மூக்கில் அணியும் அணிகலன்களைச் செய்கின்றனர். லம்பாடிப் பழங்குடிப் பெண்களால் செய்யப்படும் கைவினைப் பொருள்களை பொற்கை இணையதளத்தின் வழியாக வாங்க முடியும்.
அவர்கள் தயாரிக்கும் பெரிய போர்வை, சால்வை உற்பத்தியின்போது வெட்டப்படும் துண்டுத் துணிகளை இந்த ஊரடங்குக் காலத்துக்குப் பொருந்தும் வகையில் ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்தோம். அதன் விளைவாக உருவானதுதான் இந்த நம்பிக்கையான புன்னகை சிந்தும் துணியினாலான பெண் எம்பிராய்டரி பொம்மைகள் `கோவிடா’! இந்த பொம்மைகள் 10 ரூபாய் முதல் 100 ரூபாய்வரை பல அளவுகளில் கிடைக்கின்றன.
கோவிடா பொம்மைகளைப் பெற: porgai.org
வாட்ஸ்அப் எண்: 9786743223.