

தொகுப்பு: மிது
செப். 5: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே இலந்தகரையில் கீழடியைப் போன்று பண்டைத் தமிழ் நகர நாகரிகம் இருந்துள்ளதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இலந்தகரையில் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய வெள்ளி, முத்திரை நாணயம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழகர் கால நாணயம் போன்றவை கிடைத்துள்ளன.
செப். 6: இந்தியாவில் எளிதாகத் தொழில் நடத்துவதற்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில் 2019ஆம் ஆண்டில் தமிழகம் 14ஆவது இடத்துக்கு முன்னேறியது. 2018ஆம் ஆண்டில் இந்தப் பட்டியலில் தமிழகம் 15ஆவது இடத்தில் இருந்தது. முதல் ஐந்து இடங்களை முறையே ஆந்திரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், தெலங்கானா, மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்கள் உள்ளன.
செப். 7: ‘உயர்கல்வியை மேம்படுத்துவதில் தேசியக் கல்விக் கொள்கையின் பங்கு’ என்ற தலைப்பில் புதிய கல்விக் கொள்கை குறித்த ஆளுநர்கள் மாநாடு காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில ஆளுநர்கள், கல்வி அமைச்சர்கள், பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செப். 9: இந்தியாவில் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, எழுத்தறிவு விகிதத்தில் கேரளம் 96.2 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 2 முதல் 5 இடங்களில் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. மிகக்குறைந்த எழுத்தறிவு விகிதம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரம், ராஜஸ்தான், பிஹார், தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகியவை உள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த எழுத்தறிவு வீதம் 77.7 சதவீதம்.
செப். 10: பிரான்சில் இருந்து வரவழைக்கப்பட்ட 5 ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் முறைப்படி இணைக்கப்பட்டன. ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் இந்த 5 விமானங்களும் இணைக்கப்பட்டன.
செப். 10: உலக மக்கள்தொகை 2100ஆம் ஆண்டில் 1,100 கோடியைத் தாண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற இடத்தை 2100-ல் இந்தியாவும் இரண்டாவது, மூன்றாவது இடங்களில் நைஜீரியாவும் சீனாவும் இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது.