Published : 08 Sep 2020 09:45 am

Updated : 08 Sep 2020 09:45 am

 

Published : 08 Sep 2020 09:45 AM
Last Updated : 08 Sep 2020 09:45 AM

கோவிட் காலத்தில் கல்வியை மீட்டெடுப்பது எப்படி?

covid-19

கோவிட்-19 காலத்தில் நிலவுவதுபோல் நீண்ட அசாதாரண சூழ்நிலையை நாம் இதுவரை சந்தித்ததில்லை. ஜனவரியில் தொடங்கிய கரோனாவின் கோர தாண்டவம், நம் அனைவரின் வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. மக்களின் இன்னல்களை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கரோனாவின் கடுமையான சவால்களைச் சந்திக்க வழியில்லாமல் இந்தியா மட்டுமல்ல; உலக நாடுகள் அனைத்தும் திணறித் தவிக்கின்றன.

முழுமையாக முடங்கிவிட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வழிகுறித்து அரசுகள் தீவிரமாக ஆலோசித்துவருகின்றன. மக்களின் வளமான வாழ்வுக்கு, பொருளாதாரத்தை மீட்டெடுப்பது அவசியமே. அதேநேரம் தரமான, வளமான கல்வியே வலுவான பொருளாதாரத்தை உருவாக்கும் என்பதால், கரோனாவால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கல்வியை மீட்டெடுப்பது அதைவிட முக்கியம்.


பாதிப்புக்குள்ளான கல்வி

கரோனாவால் 160 கோடிக்கும் அதிகமான மாணவர்களின் படிப்பு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், கல்வி அமைப்பு பெருமளவு சிதைந்துவிட்டதாகவும், கல்வியின் நிலை குறித்த ஐ.நா.வின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார வீழ்ச்சியால், வரும் ஆண்டில் 3 கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்குப் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படச் சாத்தியமுள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, பள்ளிகளும் கல்லூரிகளும் மார்ச் மாதமே மூடப்பட்டுவிட்டன. இதன் காரணமாக, 32 கோடிக்கும் அதிகமான குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்பட்டிருப்பதாக யுனெஸ்கோ தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், கரோனாவின் காரணமாக 62 சதவீதக் குடும்பங்களில் பள்ளிப்படிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது என்கிறது ஓர் ஆய்வு. ஸ்மார்ட்போனோ இணையவழி வகுப்புகளுக்குத் தேவையான வேகமான இணைய இணைப்போ இந்தியாவின் பெருமளவு வீடுகளில் இல்லை என்பதால், இணையவழியில் கல்வியை மீட்டெடுக்கும் முயற்சியும் பெருமளவு பலனளிக்கவில்லை.

கற்றல் குறைபாடுகள்

பள்ளிகளில் வழங்கப்படும் தரமற்ற கல்வி, கற்றல் குறைபாடுகள் போன்றவற்றால் இந்தியக் கல்விமுறை ஏற்கெனவே நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. 4 முதல் 8 வயதுக்கு உட்பட்ட பள்ளிக் குழந்தைகளில், 25 சதவீதத்தினருக்கு அந்த வயதுக்கு ஏற்ற அறிவாற்றலும் எண்ணறிவும் இல்லையென்று 2019-ம் ஆண்டின் கல்வி நிலை குறித்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சிறுவயதிலேயே கற்றல் பற்றாக்குறையை எதிர்கொள்வதைத் தவிர, கல்வியமைப்பில் கரோனா ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பும் சேரும்போது, அந்தக் குறைபாடுகள் தீவிரமடைந்துவிடுகின்றன. பாதிப்பும் தீவிரமானதாக மாறுகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக முயற்சியெடுக்க வேண்டும். கவனக்குறைவாக இதைப் புறக்கணித்தோம் என்றால், கடந்த சில தசாப்தங்களாகப் பள்ளி சேர்க்கையிலும் பள்ளி நிறைவு அடிப்படையிலும் அடைந்த முன்னேற்றத்தின் பலன்கள் விரைவில் நீர்த்துப்போய்விடும்.

வளர்ச்சிக்கு அடித்தளம்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் மனிதவளத்தின் தரமே உந்துசக்தி. உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கும் அதுவே ஆதாரம். எந்த ஒரு நாடாக இருந்தாலும் அதன் பொருளாதார வளர்ச்சி, அந்த நாட்டு மக்களின் திறனாலேயே தீர்மானிக்கப்படுகிறது. தரமான கல்வியை அந்த நாட்டின் கல்வி நிலையங்கள் வழங்கும்பட்சத்தில், குழந்தைகளின் கல்வியில் பெற்றோர் அதிக முதலீடு செய்வார்கள். குழந்தைகளின் கல்வியில் அதிக முதலீடு என்பது, அந்த நாட்டின் மனிதவளத்தின் திறனையும் தரத்தையும் அதிகரிக்கும். இவை அந்த நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்கும். அபரிமிதமான பொருளாதார ஏற்றத்துக்கு வழிவகுக்கும்.

நம் கண்முன்னே இன்று ஒரு தொழில்நுட்பப் புரட்சி நிகழ்ந்துவருகிறது. கரோனா ஏற்படுத்தியிருக்கும் இன்றைய நெருக்கடி, புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் போக்கை அதிகரித்துள்ளது. சந்தேகத்துக்கு இடமின்றி, திறமையான தொழிலாளர்களுக்கான தேவையை இது அதிகரிக்கும். தரமான கல்வியே மனிதவளத்தின் திறனைத் தீர்மானிக்கின்றன .இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தரமான கல்வியை வழங்கினால், வேகமாக மாறிவரும் தொழில்நுட்பங்களுக்குத் தேவைப்படும் திறன்மிக்க மனிதவளமாக, இந்தியாவிலிருக்கும் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை மாற்ற முடியும்.

அரசின் தலையாய கடமை

இந்திய மனிதவளத்தின் திறன் குறைவாக இருப்பதாக, உலக வங்கியின் மனித முதலீட்டுக் குறியீடு (ஹெச்.சி.ஐ) உணர்த்துகிறது. இந்தியாவின் ஹெச்.சி.ஐ மதிப்பு 0.44 என்ற அளவிலேயே உள்ளது. இது சீனா(0.67), வியட்நாம்(0.67), ஏன் வங்கதேசத்தை(0.48) விடக் குறைவு. அதாவது இந்தியாவில் 2018-ல் பிறக்கும் குழந்தையின் ஆக்கவளம் 44 சதவீதம் மட்டுமே. ஆக்கவளத்தில் நிலவும் இந்தப் போதாமையை மீட்டெடுத்தோம் என்றால், நாட்டின் தனிநபர் வருவாயை அது கணிசமாக உயர்த்தும். இதனால், கல்வியின் தரத்தை வெகுவாக உயர்த்துவதும் கற்றலின் பற்றாக்குறையைக் களைவதும் அரசின் இன்றைய தலையாயக் கடமைகளாக இருக்க வேண்டும். இந்தப் பெருந்தொற்றால், தீவிர பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் கல்வியமைப்பையும் கற்றல் சார்ந்த பிரச்சினைகளையும் விவேகத்துடன் தீர்க்க முற்பட வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

குறுகிய கால நடவடிக்கையாக, மாணவர்களின் பாதுகாப்பையும் ஆசிரியர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும். இணையவழி வகுப்புகளின் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படும் கல்வியை நெறிப்படுத்த வேண்டும். இணைய வசதி எல்லோருக்கும் கிடைக்கும் ஒன்றாக மாற்றப்பட வேண்டும். ஒருவேளை கரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்படுமானால், அதன் பாதிப்புகளை எதிர்கொள்ளும் திறனை இந்த முன்னெடுப்புகள் கல்வித்துறைக்கும் அளிக்கும். படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக் கல்விநிலையங்களை விட்டு மாணவர்கள் வெளியேறுவதையும் இது தடுக்கும்.

இதற்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக, மாறிவரும் காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்களை வழங்க நாடு தயாராக வேண்டும். அடிப்படை திறன்களைக் கற்பதற்கு தேசிய கல்விக் கொள்கை (NEP) முக்கியத்துவம் அளிப்பதாக இருந்தாலும், அதன் ஏனைய குறைகளைத் திறந்த மனத்துடன் அணுகி, விவாதித்து, சரிசெய்ய அரசு முன்வர வேண்டும்.

எந்தவொரு துறையாக இருந்தாலும், போதுமான நிதியுதவியுடன் ஆதரித்தால் மட்டுமே, அந்தத் துறையில் சாதகமான மாற்றத்தை உருவாக்க முடியும். எதிர்காலத்தில் இந்தியா, ஒரு தன்னிறைவான வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால், கல்வியில் முதலீடு செய்வது இன்றைய காலத்தின் கட்டாயம்.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in


கோவிட் காலம்கல்விகோவிட்-19பாதிப்புக்குள்ளான கல்விகற்றல் குறைபாடுகள்வளர்ச்சிக்கு அடித்தளம்அரசுபொருளாதாரம்Covid 19பள்ளிகள்கல்லூரிகள்Corona virus

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author