

ஆக.18: மேகாலய மாநிலத்தின் புதிய ஆளுநராக கோவா ஆளுநராகப் பதவிவகித்த சத்ய பால் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். மேகாலய ஆளுநராக இருந்த ததாகத் ராயின் பதவிக்காலம் முடிவடைந்ததால் புதிய ஆளுநராக சத்ய பால் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, கோவாவின் ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
41 லட்சம் இளைஞர்கள் வேலையிழப்பு
ஆக.18: கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, நாட்டில் 41 லட்சம் இளைஞர்கள் வேலையிழக்க நேரிடும் என்று சர்வதேசத் தொழிலாளர் அமைப்பும் (ILO), ஆசிய மேம்பாட்டு வங்கியும் (ADB) இணைந்து நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ‘ஆசிய, பசிஃபிக்கில் கோவிட்-19 இளைஞர் வேலைவாய்ப்பு நெருக்கடியைச் சமாளித்தல்’ என்ற தலைப்பில் வெளியான இந்த அறிக்கையில், 13 ஆசிய-பசிஃபிக் நாடுகளில், 1 முதல் 1.5 கோடி இளைஞர்கள் வேலையிழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை எதிர்க்கும் விநியோக முயற்சி
ஆக.19: சீனாவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக இந்தியா-ஜப்பான்-ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து ‘விநியோகச் சங்கிலி மீண்டெழும் முயற்சி’யை (Supply Chain Resilience Initiative) முன்னெடுத்துள்ளன. சீனாவின் ஆக்கிரமிப்பு அரசியல் நடத்தை, இடையூறு காரணமாக ஜப்பான் இந்த முயற்சியை முன்மொழிந்தது. வரும் நவம்பரில் இந்தத் திட்டம் தொடங்கப்படலாம்.
அதிகரிக்கவிருக்கும் பெண் விகிதம்
ஆக.19: 2011 முதல் 2036 வரையிலான மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையைத் தேசிய மக்கள்தொகை ஆணையம் வெளியிட்டுள்ளது. நாட்டில் 2011-ல், 1,000 ஆண்களுக்கு 943 பெண்களாக இருக்கும் பாலின விகிதம், 2036-ல், 1,000 ஆண்களுக்கு 957 பெண்களாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2036-ல் இந்தியாவின் மக்கள்தொகை 152 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தூய்மையான நகரம்
ஆக.20: இந்தியாவின் தூய்மையான நகரமாக நான்காம் முறையாக 2020 ‘சர்வேக்ஷன்’ ஆய்வில் மத்திய பிரதேசத்தின் இந்தோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாம் இடத்திலும் மகாராஷ்டிரத்தின் நவி மும்பை மூன்றாம் இடத்திலும் இடம்பெற்றுள்ளன. இந்த ஆய்வறிக்கை தரவரிசைப் பட்டியலில் சென்னை 45-ம் இடத்தைப் பிடித்துள்ளது.