

தொகுப்பு: கனி
ஆக.9: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, அந்நாட்டின் பிரதமராக நான்காம் முறையாக பதவியேற்றுக்கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி பெற்ற வெற்றியால், மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அவரது சகோதரரும், அதிபருமான கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சேவுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
78% கிராமப்புற இந்தியா பணியாற்றவில்லை
ஆக.10: கோவிட்-19 ஊரடங்கின்போது, கிட்டத்தட்ட 80 சதவீதக் கிராமப்புற இந்தியர்கள் பணிபுரியாமல் இருந்ததாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. நாட்டின் 179 மாவட்டங்களில் 25,300 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 20 சதவீதக் கிராமப்புற மக்களுக்கு மட்டுமே மத்திய அரசின் வேலை உறுதித்திட்டத்தின்கீழ் பணி கிடைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்றில் இரண்டு இந்தியர்கள் கிராமங்களிலேயே வசிப்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்குச் சொத்தில் சமஉரிமை
ஆக.11: பெற்றோரின் சொத்தில் மகன்களுக்கு இருக்கும் உரிமையைப் போல் மகள்களுக்கும் சமஉரிமை இருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. மகள்களுக்கும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் சொத்துரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளர்
ஆக.11: 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடென், கலிஃபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸைத் துணை-அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில், துணை அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் முதல் வெள்ளையரல்லாத, ஆசிய-அமெரிக்கப் பெண்ணாக கமலா ஹாரிஸ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
தோனி, ரெய்னா ஓய்வு அறிவிப்பு
ஆக. 15: மஹேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவரது தலைமையின்கீழ் இந்திய அணி 200 ஒருநாள் போட்டிகள், 72 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் 2022 வரை தோனி விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனியைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.