

ஆக.4: லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 135 பேர் பலியாகினர். மூவாயிரத்துக்கும் அதிகமானோர் காயமுற்றனர். கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,700 டன் அம்மோனியம் நைட்ரேட்டால், இந்த வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியாவில் ராமர் கோயில் அடிக்கல்
ஆக.5: 1992 டிசம்பர் 6 அன்று இடிக்கப்பட்ட பாபர் மசூதி அமைந்திருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் அனுமதி அளித்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். மூன்று ஆண்டுகளில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
370 சட்டப்பிரிவு நீக்கம்: ஓராண்டு நிறைவு
ஆக.5: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370, 35A ஆகிய சட்டப்பிரிவுகள் நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா 2019, ஆகஸ்ட் 5 அன்று நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இதன்மூலம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யுனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லா அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்திருந்தார். ஆனால், கூட்டத்துக்கு அரசு அனுமதியளிக்க வில்லை.
புதிய துணைநிலை ஆளுநர் நியமனம்
ஆக.6: ஜம்மு-காஷ்மீரின் புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநராக இருந்த கிரீஷ் சந்திர முர்மு ராஜினாமா செய்ததால், புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்
ஆக.6: நாட்டின் புதிய தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரீஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் ராஜிவ் மகரிஷியின் பதவிக்காலம் முடிவடைந்ததால், புதிய தலைமைக் கணக்குத் தணிக்கையாளராக கிரீஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.