சேதி தெரியுமா? - மேலும் 47 சீனச் செயலிகளுக்குத் தடை

சேதி தெரியுமா? - மேலும் 47 சீனச் செயலிகளுக்குத் தடை
Updated on
1 min read

ஜூலை 24: ஏற்கெனவே 59 சீனச் செயலிகளுக்கு தடை விதித்திருந்த நிலையில், மேலும் 47 சீனச் செயலிகளுக்குத் தடைவிதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள மேலும் 275 செயலிகள், தேசியப் பாதுகாப்பு, பயனர் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியிருக்கின்றனவா என்பதை ஆராய்ந்துவருவதாகவும் தெரிவித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை அறிமுகம்

ஜூலை 29: 'தேசிய கல்விக் கொள்கை 2020' மத்திய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. நாட்டின் கல்விமுறையை மாற்றியமைக்கும் இந்தக் கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழிவழிக் கல்வி பின்பற்றப்பட வேண்டும், ஏ.ஐ.சி.டி.இ. (AICTE), பல்கலைக்கழக மானியக் குழு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் இந்தக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐந்து ரஃபேல் விமானங்கள் வருகை

ஜூலை 29: பிரான்ஸிலிருந்து ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவின் அம்பாலா விமானத் தளத்தை வந்தடைந்தன. இந்த ரஃபேல் விமானங்கள் உடனடியாக முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்று இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. 2016-ல் பிரான்ஸ் நாட்டின் 'டஸ்ஸோ ஏவியேஷன் ஆஃப் பிரான்ஸ்' நிறுவனத்துடன் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் இட்டிருந்தது.

மெஹ்பூபா முஃப்தியின் காவல் நீட்டிப்பு

ஜூலை 31: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முஃப்தியின் காவல், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐம்மு கஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370 சட்டப்பிரிவு 2019 ஆகஸ்ட்டில் நீக்கப்பட்டவுடன் காஷ்மீர் அரசியல் தலைவர்கள் பலர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டனர். ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா இருவரும் 2020 மார்ச் மாதம் காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், மெஹ்பூபா முஃப்தியின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இறுதியாண்டுத் தேர்வுகள் அறிவிப்பு?

ஜூலை.31: கல்லூரிகளில் மார்ச் மாதம் நடைபெறவிருந்த இறுதியாண்டுத் தேர்வுகள் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நடைபெறவில்லை. இந்நிலையில் மீண்டும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் என்று நினைக்காமல் செப்டம்பரில் தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராக வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இறுதியாண்டுத் தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தாக்கல் செய்திருந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 10-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. n தொகுப்பு: கனி n

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in