

ரெ.சிவா - பள்ளி ஆசிரியர், ஒருங்கிணைப்பாளர், ‘கலகல வகுப்பறை’.
கரோனா ஊரடங்குக் காலத்தில் ஸூம் (Zoom) உள்ளிட்ட செயலிகள் வழியே நாள்தோறும் நிறைய காணொலிக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. ஆசிரியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் தொடர்பாகவே பல காணொலிக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
‘குழந்தை நேயப் பள்ளி’ அமைப்பு மாலை 3 முதல் 5 மணி வரையும், பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தினர் மாலை 5 முதல் 7 மணி வரையும் கல்வி தொடர்பான பல்வேறு தலைப்புகளில் காணொலிக் கூட்டங்களை நடத்துகிறார்கள். இவை தவிர பொதுவான விஷயங்கள் தொடர்பான கூட்டங்களும் நடைபெறுகின்றன. எனவே, மாலை நேரம் முழுவதும் இந்தக் கூட்டங்களிலேயே கழிந்துவிடுகின்றன.
கல்வியில் கலை
‘கலகல வகுப்பறை' என்னும் அமைப்பு மூலமாக கடந்த நான்கைந்து ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை ஒருங்கிணைத்துவருகிறோம். கல்வியில் கலை வடிவங்களுக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் இருக்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை. 18 வயதுக்கு உட்பட்ட அனைவரும் குழந்தைகள்தாம். எனவே, அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிக் கல்வி கற்பித்தலிலும் கலை வடிவங்களைச் சேர்க்க முடியும். இதுவரை 30-க்கும் மேற்பட்ட பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளோம்.
கலை மூலமாகக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் கலை நிபுணராக இருக்க வேண்டியதில்லை. முடிந்த அளவு பாடுவது, ஒரு சில அசைவுகளைக் கற்றுக்கொண்டு நடனமாடுவது உள்ளிட்டவற்றைப் பழகிக்கொண்டாலே போதும்.
ஆடல், பாடல் உள்ளிட்ட பல வகையான கலைகளை உள்ளடக்கிய கலவையாக இருப்பதால் நாடகம் சார்ந்தே 4-5 பயிற்சிகளை நடத்தியுள்ளோம். மாநிலம் முழுவதிலிருந்தும் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் வருவார்கள். மூன்று நாள் ஒரே இடத்தில் தங்கி, இந்த முகாம்களை நடத்துவோம். இந்த முகாம்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை நாங்களே செய்துகொள்வோம். செலவை அனைவரும் பகிர்ந்துகொள்வோம். ஒரு முகாமில் 30 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதிப்பதில்லை. அப்போதுதான் அனைவருக்குமிடையே கலந்துரையாடல் முறையாக நடக்கும்.
இந்தப் பின்னணியில் இந்த கரோனா ஊரடங்குக் காலத்தில் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தோம். ஆசிரியர்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் இணையம் வழியாகத்தான் கலந்துரையாட முடியும். இந்த கட்டுப்பாடுகளுக்கு இடையே என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான், கல்வியில் நாடகம் என்ற திட்டத்தை உருவாக்கினோம்.
எப்படி நடத்தலாம்?
நானும் தேசிய நாடகப் பள்ளியில் படித்த சந்திரமோகனும் இணைந்து ஆசிரியர்களுக்கான பயிற்சியை ஏற்பாடுசெய்திருக்கிறோம். கல்வியில் நாடகம் (Theatre in Education) என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் பயிற்சி, கற்றலிலும் கற்பித்தலிலும் நாடகங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதற்கானது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் வீதம் பத்து நாட்களுக்கு இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பங்கேற்பாளர்கள் அனைவரும் பத்து நாளும் தவறாமல் பங்கேற்பதை உறுதிசெய்வதற்காக ஒரு நபருக்கு ரூ.500/- கட்டணம் வசூலிக்கிறோம். வகுப்பறைக்குள் எப்படியெல்லாம் நாடகத்தைக் கொண்டுவர முடியும் என்பதற்கே இந்தப் பயிற்சி.
கதாபாத்திரத்தை உருவகப்படுத்தி நடிப்பது (Role-play), கதாபாத்திரங்களை எப்படி வடிவமைப்பது (Characterization), குரலைக் கட்டுப்படுத்துவது (Voice control), உடல்மொழி (Body-language) என அனைத்தையும் உள்ளடக்கி கல்வியில் நாடகத்தை சேர்ப்பதற்கான முழுமையான பயிற்சியை அளிக்கிறோம். ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் கதை சொல்பவர்கள், பெற்றோர் என மற்றவர்களும் பங்கேற்கிறார்கள்.
வகுப்பறைகளில் நாடகங்களை நடத்தலாம். பாடத்தையும் ஒரு நாடகமாக மாற்றி நடத்தலாம். ஆசிரியர்கள் தாமும் மாணவர்களையும் நாடகத்தின் கதாபாத்திரங்களாக்கிக்கொண்டு பாடத்தின் உள்ளடக்கத்தை கதையாக மாற்றிப் பாடங்களைக் கற்பிக்கலாம். கணிதத்தைக்கூட இவ்வாறு கற்பிக்க முடியும். இப்படியாக வகுப்புகளிலும் கூட்டங்களிலும் நாட்கள் கழிந்துவிடுகின்றன.
மாணவர்களுக்கு என்ன செய்யலாம்?
தமிழ்நாட்டில் கல்வி என்பது வசதியானவர்களுக்கானது, வசதி இல்லாதவர்களுக்கானது என்று இரண்டு பிரிவாக உள்ளது. தனியார் பள்ளிகள் பல்வேறு காரணங்களுக்காக ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன. அரசுப் பள்ளி மாணவர்கள் பலருக்குக் கல்வி தடைபடுவது, பிரச்சினையின் ஒரு பகுதி மட்டுமே. அவர்களுக்கு இப்போது வாழ்க்கையே சிக்கலாக உள்ளது. இப்போதைக்கு அவர்களுடன் பேசுவதே மிகவும் முக்கியம். ஆசிரியர்கள் பலர் மாணவர்களைத் தொடர்புகொண்டு பேசுகிறார்கள். தங்களால் இயன்ற உதவிகளைச் செய்கிறார்கள். அவர்களிடம் பேசி, அவர்களின் மனநிலையை தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களுடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகுதான் கல்வி கற்பிப்பதைப் பற்றியே யோசிக்க முடியும்,
தமிழக அரசு தொலைக்காட்சி அலைவரிசை வழியே பாடம் கற்பிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது குறிப்பிட்ட அளவு மாணவர்களைச் சென்றடையும். வகுப்புகளில் நடத்தும் பாடத்தை ஆசிரியர்கள் தொலைக்காட்சியில் தோன்றி நடத்தப் போகிறார்கள். இதை எவ்வளவு நேரம் நடத்துகிறார்கள் என்பது முக்கியம். நேரடியாக வகுப்பில் அமர்ந்து கேட்கும் பாடங்களையே, தொடர்ந்து 40 நிமிடங்களுக்கு மாணவர்களால் கவனிக்க முடிவதில்லை.
\தொலைக்காட்சியில் செய்திகள்கூட, தொடர்ந்து 40 நிமிடங்கள் வாசிக்கப்படுவதில்லை. காட்சித் தொகுப்புகள், விளம்பரங்கள் என கலந்து கொடுக்கிறார்கள். அதுபோல் பாடத்தை சின்ன சின்னப் பகுதிகளாக பிரித்துக்கொண்டு நடத்துவது நல்ல பயனளிக்கும். பாடம் தொடர்பான காட்சிகளை (Visuals) இவற்றில் சேர்க்கலாம். பாடம் கற்பிக்கக் காட்சி ஊடகத்தைப் பயன்படுத்தும்போது, அதன் சாத்தியங்களை முழுமையாக விரிவாக்க முடியும்.
அது மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகூட சென்றடையாத குடும்பங்களும் இருக்கின்றன. அந்த குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதைப் பற்றியும் யோசிக்க வேண்டும். புதிய விஷயங்களை யோசிக்கலாம். வழக்கமான பாடங்களுக்கு பதில், வாழ்க்கைமுறை சார்ந்த கல்வியைக் கற்பிக்கலாம். ஊருக்குள் உரையாடலை ஊக்குவிக்கலாம். அந்தந்த ஊர்களில் இருப்பவர்களையே இதில் ஈடுபடுத்தலாம். சூழலுக்குத் தகுந்தபடியான திட்டங்களை வடிவமைக்கலாம். அரசு நினைத்தால் இதையெல்லாம் செய்ய முடியும். இதைச் செயல்படுத்துவதற்கு ஆசிரியர்கள், கல்வி செயற்பாட்டாளர்களின் ஆலோசனைகளை கேட்டுப் பெற வேண்டும்.
தொகுப்பு: கோபால்
‘கலகல வகுப்பறை' சிவா தொடர்புக்கு: artsiva13@gmail.com