

தொகுப்பு: யுகன்
கல்லூரி, பள்ளிகளுக்கான வகுப்புகள் தொடங்கி பத்திரிகை, ஊடகங்கள், வணிகம், பொருளாதாரம், வங்கிச் சேவை, கலைகளுக்கான மெய்நிகர் மேடை எனப் பலவற்றுக்கும் இணைய சேவை இன்றைக்கு முக்கியமானதாக இருக்கிறது. இணையம்வழி கற்பிப்பதற்கு தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், இணையம் வழியாக வழங்கப்படும் கல்வி குறித்து நிலவும் தவறான கற்பிதங்களையும் உண்மைகளையும் காந்திகிராம் ரூரல் இன்ஸ்டிடியூட்டில் செயல்பட்டுவரும் ஆங்கிலம், அயலக மொழிகள் பள்ளியின் முதல்வரான ஜோஸப் துரைராஜ் விளக்கியுள்ளார்:
தவறான கற்பிதம்
1. இணையவழிக் கற்பித்தலில் கல்வி கற்பது இளைஞர்களுக்கு மட்டுமே சாத்தியம்.
2. இணையவழிக் கல்வி என்பது வெறுமனே குறுகிய கால ஏற்பாடாகவே மதிக்கப்படும்.
3. இணையவழிக் கற்பித்தலில் சமத்துவம் இருக்காது.
4. போகிற போக்கில் ஆசிரியருக்கு பதிலாக தொழில்நுட்பம்தான், அடுத்த ஆசிரியர் என்னும் நிலை உருவாகிவிடும்.
5. மாணவர்கள் இணையவழிக் கற்றலைவிட, ஆசிரியரிடம் நேரடியாகக் கற்பதையே விரும்புகிறார்கள்.
6. இணையவழிக் கற்றல் நேருக்கு நேர் கற்பதுபோல் திறன்வாய்ந்தது அல்ல.
7. இணையவழிக் கற்றல் மூலம் பெறும் டிகிரி, டிப்ளமோ சான்றிதழ்கள் செல்லுபடி ஆகாது.
உண்மை என்ன?
1. வயது ஒரு பொருட்டல்ல. சிறியவரோ முதியவரோ தற்போதைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தெரிந்துகொண்டால் இணையவழிக் கல்வி எல்லோருக்கும் சாத்தியமே.
2. நமது பாடத்திட்டத்திலேயே இணையவழிக் கற்பித்தல் தற்போது முக்கியமான பங்கை வகிக்கிறது.
3. சமத்துவம் இல்லை என்பதில்
உண்மை இல்லாமல் இல்லை. அதேவேளை, ஒரு ஸ்மார்ட் போனும் இணைய வசதியும் இருந்தால் போதும். இணையவழிக் கற்பித்தலை எல்லோருக்கும் சமத்துவமாகக் கொடுக்கலாம். இணையவழிக் கற்பித்தல் அனைவருக்கும் தேவை.
4. ஆசிரியர்களுக்கு நிகர் யாரும் இல்லை. இதற்கு முன்னர் ஆசிரியர்கள்தான் அறிவின் களஞ்சியங்கள். ஆனால், வரும் காலத்தில் அவர்களுடைய பன்முகத் திறன், பாடத்திட்டம், வடிவமைப்பாளர், உள்ளடக்கம், அறிவைப் பகிர்கின்றவர் எனப் பல நிலைகளிலும் வெளிப்பட வேண்டும்.
5. இளைஞர்கள் புதுப் புது சிந்தனை, புதிய தேடல்களில் விருப்பம் கொண்டவர்கள். எனவே, இணையவழிக் கற்றலை பெரும்பாலான மாணவர்கள் விரும்புகின்றனர்.
6. நேரடிக் கற்பித்தல், இணையவழிக் கற்றல் இரண்டிலுமே அது அதற்கு உரிய நன்மை, தீமைகள் இருக்கின்றன. சூழ்நிலை, மாணவர் மனநிலைக்கு ஏற்ப ஒரு நல்ல ஆசிரியர் பாடத்தை வடிவமைப்பார். எனவே, இவை இரண்டில் எது சிறந்தது என்ற கேள்விக்கே இடமில்லை.
7. இணையவழிக் கற்றல், ஆசிரியரிடம் நேரடியாகக் கற்பது போலவேதான் செயல்படுகிறது. எனவே இணையம் வழியாகக் கற்றுத் தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் டிகிரி, டிப்ளமோ சான்றிதழ்களின் மதிப்பு குறைவானது அல்ல. இரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுதான்.
ஆசிரியர்கள் தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொண்டு, மாணவர்களுக்கான இணையவழி புத்தாக்கக் கல்வியை உருவாக்கித் தரவேண்டியது தற்போதைய கரோனா ஊரடங்கு காலத்தின் கட்டாயம். அதேநேரம் இணைய வசதி, கணினி, தடையற்ற மின்சாரம், இவற்றுக்கான செலவு போன்ற அம்சங்கள் அனைவருக்கும் கிடைக்கும்போது - அரசு கிடைக்கச் செய்யும்போது மட்டுமே இந்த அம்சங்கள் முழுமையான உண்மையாக மாறும்.