சேதி தெரியுமா? - சீனச் செயலிகள் 59-க்குத் தடை
தொகுப்பு: கனி
ஜூன். 29: நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, பொது ஒழுங்கு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு சீனாவின் 59 மொபைல் செயலிகளைத் தடைசெய்வதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு வெளியிலிருக்கும் சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம், சில செயலிகள் அதிகாரம் பெறாமல் பயனர்களின் தரவுகளைத் திருடியதாகப் புகார்கள் எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
பதவிக் காலம் நீட்டிப்பு
ஜூன். 29: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக கே.கே. வேணுகோபாலை மீண்டும் ஓராண்டு காலத்துக்கு மறுநியமனம் செய்துள்ளார். சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தாவின் பதவிக்காலம் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைதி குறைந்த பகுதி
ஜூன்.30: நாகாலாந்து மாநிலம் முழுவதையும் மேலும் ஆறு மாதங்களுக்கு அமைதி மட்டுப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அறுபது ஆண்டுகளாக ஆயுதப்படைச் சிறப்பு அதிகார சட்டம் நாகாலாந்தில் அமலில் இருக்கிறது. தற்போது, அம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்குச் சூழல் மோசமடைந்து வருவதால், மேலும் ஆறு மாதங்களுக்கு இந்தச் சட்டம் அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
2036 வரை அதிபர் பதவி
ஜூலை 1: அடுத்த பதினாறு ஆண்டுகளுக்கு ரஷ்ய அதிபர் பதவியில் விளாதிமிர் புதின் நீடிப்பதை அங்கீகரிக்கும் அரசியலமைப்பு மாற்றங்களை ரஷ்யர்கள் ஏற்றுக்கொண்டதாக முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக அந்நாடு முழுவதும் நடைபெற்ற வாக்கெடுப்பில், 2036 வரை விளாதிமிர் புதின் அதிபர் பதவியில் இருப்பதற்கு அம்மக்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா.வுக்கான நிரந்தரப் பிரதிநிதி
ஜூலை.1: ஐ.நா.வுக்கான இந்தியாவின் அடுத்த நிரந்தரப் பிரதிநிதியாக இந்திரமணி பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக இருக்கும் அவர், விரைவில் ஐ.நா.வுக்கான பிரதிநிதியாகப் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
