Published : 07 Jul 2020 09:07 AM
Last Updated : 07 Jul 2020 09:07 AM

பாட்டிலைத் தொடாமல் கிருமிநாசினி பயன்படுத்தலாம்

ரோஹின்

நாம் வாழும் சமூகத்துக்குப் பயனுள்ள எதையாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு பலருக்கும் இருக்கும். அப்படியொரு துடிப்பு கொண்டவர் பேராசிரியர் முத்துராஜ். திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு சமூகத்துக்குப் பயனளிக்கும் வகையிலான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டிருப்பதில் இவருக்குப் பேரார்வம் உண்டு. தகுந்த மாணவர்கள் கிடைக்கும் நேரத்தில் சரியான வழிகாட்டுதலைத் தந்து, புதுப்புதுக் கருவிகளை இவர் உருவாக்கிவருகிறார்.

இவர் பணியாற்றும் கல்லூரி ஆய்வகத்துக்காக ஒரு சோலார் பேனல் செய்துவைத்திருக்கிறார். இதன் உதவியால் ஆய்வகத்தில் மின்சாரம் தடைப்பட்டாலும், அங்கே இருக்கும்... சில கருவிகள் இயங்குவதற்கு இந்த சோலர் பேனலிலிருந்து கிடைக்கும் மின்னாற்றல் பயன்படுகிறது.

சமூகத்துக்குப் பயனுள்ள கருவிகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர், இவரது கல்லூரியில் படித்த இரண்டு மாணவிகளுக்கு வழிகாட்டி, சூரிய ஆற்றலால் இயங்கும் மொபைல் சார்ஜரை உருவாக்கியுள்ளார். இந்த சார்ஜர் ஹைகிரவுண்ட் மருத்துவமனை உள்ளிட்ட சில இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தது. ‘காலேஜ் டூ காமன் மேன்’ என்னும் எண்ணத்துடன் அது உருவாக்கப்பட்டது. கல்லூரியில் கற்கும் கல்வி, சாமானியர்களுக்கு உதவும் வகையில் அமைய வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

பேராசிரியர் முத்துராஜ், “செக்யூரிட்டி பணியாளர்களது நலனுக்காக ‘ஃபைவ் இன் ஒன் செக்யூரிட்டி சிஸ்ட’த்தை உருவாக்கினேன். இது எனக்கு மிகவும் திருப்தியைத் தந்த ஒன்று” என்கிறார். அதில் எஃப்.எம். ரேடியோ, மொபைல் சார்ஜர், எமர்ஜென்சி லைட், அலாரம், கொசுவிரட்டி ஆகியவை இணைக்கப்பட்டிருந்தன.

இந்த ஐந்துக்கும் தேவையான மின்னாற்றலும் அந்தக் கருவியுடன் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல் உதவியுடன் உருவாக்கப்படும். இதைப் பகலில் ஆற்றலேற்றி வைத்துக்கொண்டால் இரவுப் பாதுகாவல் பணியின்போது பெரிதும் உதவியாக இருக்கும். இந்தக் கருவியை உருவாக்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டதாகக் கூறும் முத்துராஜ், அப்போது எனக்குச் சரியான மாணவர்கள் கிடைத்ததால் இதை உருவாக்க முடிந்தது என்கிறார்.

தானியங்கி சானிடைஸர்

கரோனா காலத்தில் செல்லும் இடங்களில் சானிடைஸர் பாட்டிலை எல்லோரும் கையால் தொட்டோ, சில இடங்களில் காலால் மிதித்தோ பயன்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு மாற்றாக ஏதாவது செய்ய முடியுமா என பேராசிரியர் முத்துராஜ் யோசித்துள்ளார். அதன் விளைவாகத் தானியங்கி சானிடைஸரை உருவாக்கலாம் என்ற எண்ணம் இவருக்கு எழுந்துள்ளது. கல்லூரி மாணவர்களான தர்சன், அரவிந்த் ஆகியோர் இந்த எண்ணத்தைச் செயல்படுத்த முன்வந்துள்ளனர். இவரது மேற்பார்வை, வழிகாட்டுதலில் ஐ.ஆர். சென்சார் உதவியுடன் இயங்கும் இந்தத் தானியங்கி சானிடைஸர் கருவியை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

இந்தக் கருவியின் முன்பு கையை நீட்டினால் போதும், கையைச் சுத்தம் செய்யும் அளவுக்கான சானிடைஸர் வந்து விழும். உணவு விடுதிகளில் கையைக் கழுவுவதற்காக சென்சார் மூலம் இயங்கும் தண்ணீர்க் குழாய் உள்ளதல்லவா, அதைப் போல் இது செயல்படுகிறது. கரோனா தொற்றுப் பரவல் அதிகமாக உள்ள இந்தக் காலத்தில் பொதுமக்கள் அதிகமாகப் புழங்கும் இடங்களில் பிறர் தொட்ட சானிடைஸர் பாட்டிலைத் தொட்டுப் பயன்படுத்துவதால் ஏற்படும் அச்சம், இதன் மூலம் நீங்கிவிடுகிறது.

இந்தக் கருவியை வெறும் ஐந்நூறு ரூபாய் செலவுக்குள் உருவாக்கிவிடலாம் என்கிறார் பேராசிரியர் முத்துராஜ். ஐ.ஆர். சென்சார் பயன்படுத்தியுள்ளதால் நேரடியாகச் சூரிய ஒளி படும் இடங்களில் இந்தக் கருவியைப் பயன்படுத்த முடியாது. இதற்கான ஆற்றலை ஒரு மொபைல் சார்ஜர் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம் என்பதால், பயன்படுத்த இலகுவானது இந்தத் தானியங்கி சானிடைஸர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x