

தொகுப்பு: கனி
ஜூன் 16: கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே நடைபெற்ற மோதலில் இருபது இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். மூன்று நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஜூன் 18 அன்று பத்து இந்திய வீரர்களை சீனா விடுதலை செய்துள்ளது. இது தொடர்பாக விவாதிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
43-ம் இடத்தில் இந்தியா
ஜூன் 16: உலகப் போட்டித்திறன் பட்டியலை (World Competitiveness Index) மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் (IMD) வெளியிட்டுள்ளது. இந்தத் தரவரிசைப் பட்டியலில், இந்தியா 43-ம் இடத்தில் உள்ளது. சிங்கப்பூர், டென்மார்க், சுவிட்சர்லாந்து ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
ஐ.நா.பாதுகாப்பு அவை உறுப்பினர்
ஜூன் 17: ஐ.நா. பாதுகாப்பு அவையின் (U.N.S.C.) நிரந்தரமற்ற உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், 192 வாக்குகளில் 184 வாக்குகளைப் பெற்று இந்தியா வெற்றிபெற்றது. 2021, ஜனவரி 1 முதல் தொடங்கும் இந்தியாவின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும். சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஐ.நா. பாதுகாப்பு அவையின் தலைவராக ஆகஸ்ட் 2021 வரை இந்தியா பதவிவகிக்கும்.
மாநிலங்களவைத் தேர்தல்
ஜூன் 19: மாநிலங்களவையில் பத்து மாநிலங்களைச் சேர்ந்த 19 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், பா.ஜ.க. எட்டு இடங்களிலும், காங்கிரஸ் நான்கு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
வளைய சூரிய கிரகணம்
ஜூன் 21: வளைய சூரிய கிரகணம் நடைபெற்றது. இந்தச் சூரிய கிரகணத்தின்போது, நிலவானது சூரியனை 98.8 சதவீதம் மட்டும் மறைத்து விளிம்புப் பகுதி நெருப்பு வளையம் போல் தெரிந்தது. நான்கு மணி நேரம் நிகழ்ந்த இந்தச் சூரிய கிரகணம், இந்தியாவில் ராஜஸ்தான், ஹரியாணா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் முழுமையாகத் தெரிந்தது.