

தொகுப்பு: கனி
ஜூன் 8: நியூசிலாந்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாகப் புதிதாக யாரும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படாததால், அந்நாடு கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து மீண்டுவிட்டதாக அறிவித்துள்ளது. பெருந்தொற்றின் காரணமாக விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆடெர்ன் தெரிவித்துள்ளார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
ஜூன் 9: மாநிலத்தில் கோவிட்-19 பரவல் அதிகமாகி வருவதால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துசெய்யப்படுவதாகவும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். அத்துடன், பதினொன்றாம் வகுப்புக்கு நடத்தப்படாமல் இருந்த சில தேர்வுகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
ராமன் மகசேசே விருது ரத்து
ஜூன் 9: ஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ராமன் மகசேசே விருது கோவிட்-19 காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே நினைவாக அறுபது ஆண்டுகளாக வழங்கப்பட்டுவரும் இந்த விருது இதுவரை இரண்டு முறை (1970, 1990) ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது, கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக மூன்றாம் முறை ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐ.ஐ.டி. மெட்ராஸ் முதலிடம்
ஜூன் 11: தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு (NIRF) 2020-ம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த உயல்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், ஐ.ஐ.டி.-மெட்ராஸ், ஐ.ஐ.எஸ்சி.-பெங்களூரு, ஐ.ஐ.டி.-டெல்லி ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. பல்கலைக்கழகங்களின் பட்டியலில், ஐ.ஐ.எஸ்சி., ஜே.என்.யூ., பனாரஸ் பல்கலைக்கழகம் ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. நாட்டின் சிறந்த 100 கல்லூரிகளின் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.
உலக உணவுப் பரிசு அறிவிப்பு
ஜூன் 11: விவசாயத்தின் நோபல் பரிசாகக் கருதப்படும் உலக உணவுப் பரிசை (World Food Prize 2020) இந்திய - அமெரிக்க மண் விஞ்ஞானி டாக்டர் ரத்தன் லால் பெற்றுள்ளார். ஐம்பது ஆண்டுகளாக நான்கு கண்டங்களில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக மண் வளத்தை மேம்படுத்தும் உத்திகளை 50 கோடி சிறுவிவசாயிகளிடம் கொண்டுசேர்த்ததற்காக அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.