

தொகுப்பு: கனி
மே 31: அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில் காவலில் எடுக்கப்பட்ட ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃப்ளாய்ட், காவல்துறை அதிகாரி ஒருவரால் இனவெறி காரணமாக மே 25 அன்று கொல்லப்பட்டார். அவரின் கொலைக்கு எதிராக, அமெரிக்கா முழுவதும் மக்கள் போராட்டங்கள் பத்து நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, வாஷிங்டன் உள்ளிட்ட 40 நகரங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இரட்டை மாநாடுகள்
ஜூன் 2: உலகப் பொருளாதார அமைப்பு (WEF), 2021 ஜனவரியில் இரட்டை மாநாடு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் இந்த இரட்டை மாநாடு், கோவிட்-19 பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்வகையில், ‘சிறந்த மீளமைத்தல்’ (‘The Great Reset’) என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெறவிருக்கிறது. இந்த 51-ம் பொருளாதார மாநாட்டில் 400 நகரங்கள் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் கலந்துகொள்கின்றன.
‘பாரத்’ பெயர்மாற்றம் அவசியமல்ல
ஜூன் 3: நாட்டின் பெயரை ‘இந்தியா’ என்பதிலிருந்து ‘பாரத்’ என்று பெயர்மாற்றம் செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, அரசியலமைப்பில் இந்தியா, பாரத் என்றே குறிக்கப்பட்டுள்ளது, அதனால் பெயர் மாற்றத்துக்கு அவசியமில்லை என்று இந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்டார். ஆனால், இந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய அரசுத் திட்டங்கள் கிடையாது
ஜூன் 5: கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2021 மார்ச் வரை எந்தப் புதிய திட்டத்துக்கும் அனுமதி வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய திட்டங்களுக்கு அனுமதி கேட்டுக் கோரிக்கைகளை அனுப்ப வேண்டாம் என்று அனைத்து அமைச்சகங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. இருக்கும் நிதியைத் திறம்படப் பயன்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்புக் குழு உறுப்பினர்
ஜூன் 5: எட்டாம் முறையாக ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் (UNSC) நிரந்தரமில்லாத உறுப்பினாராக இந்தியா தேர்ந்தெடுக்கப்படவுள்ளது. ஜூன் 17 அன்று நடைபெறவுள்ள ஐ.நா. பொதுத்தேர்தலில், இந்தியா எந்த எதிர்ப்பும் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் உள்ளது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமில்லாத உறுப்பினர் இடத்தைப் பிடிப்பதற்காக நடைபெற்ற பிரச்சாரத்தில், இந்தியாவின் முன்னுரிமைகளாக மரியாதை, பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, அமைதி, செழிப்பு ஆகியவற்றை முன்வைத்துள்ளார்.