

தொகுப்பு: கனி
மே.27: கரோனா வைரஸ் பெருந்தொற்றால் உருவாகியிருக்கும் பொருளாதாரப் பின்னடைவுச் சூழலை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு 750 பில்லியன் யூரோ நிதியை ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது. 27 நாடுகளை அங்கமாகக் கொண்ட ஐரோப்பிய யூனியன், கோவிட்-19 பொருளாதாரப் பின்னடைவை எதிர்கொள்ளப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
வெட்டுக்கிளிகளின் தாக்குதல்
மே. 27: இந்தியாவின் ஐந்து வடமாநிலங்களின் வேளாண் நிலங்கள் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, மத்திய பிரதேசத்தின் வேளாண் பயிர்கள், காய்கறிகளைக் கடும் பாதிப்புக்குள்ளாக்கிய வெட்டுக்கிளிகள், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரத்தைத் தொடர்ந்து கர்நாடகத்தின் பயிர்களைத் தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெட்டுக்கிளிகளின் தாக்குதலைச் சமாளிப்பதற்கான 15 வகைப் பூச்சிக்கொல்லிகள் பிரிட்டனிலிருந்து வரவழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
மே.28: கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 65 நாட்களுக்குப் பிறகு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் கட்டணமின்றிப் போக்குவரத்து வசதிகள், உணவு வசதிகளை ஏற்பாடு செய்துதர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அஜித் ஜோகி காலமானார்
மே.29: சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதல்வராக இருந்த அஜித் ஜோகி (74) உடல்நலக் குறைவால் ராய்ப்பூரில் காலமானார். அவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதல் அமைச்சராக 2000, நவம்பர் 1 முதல் 2003, டிசம்பர் 4 வரை பதவிவகித்துள்ளார்.
விப்ரோவின் புதிய நிர்வாக இயக்குநர்
மே.29: விப்ரோ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக தியர்ரி டேலபோர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜூலை 6 அன்று அவர் பதவியேற்பார் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
62 லட்சம் பேர் பாதிப்பு
ஜூன்.1: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,67,657ஆக உயர்ந்திருக்கிறது. 3,73,961 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 28,47,571 பேர் நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இந்தியாவில் கரோனாவால் 1,90,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 5,394 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 91,819 பேர் நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள்