Published : 19 May 2020 08:33 am

Updated : 19 May 2020 08:33 am

 

Published : 19 May 2020 08:33 AM
Last Updated : 19 May 2020 08:33 AM

இப்போது தேர்வுக்கு என்ன அவசரம்?

what-is-the-hurry-for-exam-now

தமிழகத்தில் நாவல் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேசிய ஊரடங்கால் தள்ளிப்போனது. இந்தத் தேர்வை ஜூன் 1 முதல் நடத்துவதற்கான தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அரசியல் கட்சிகள், அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர் குழுக்கள், மருத்துவர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இந்த முடிவை கடுமையாக எதிர்த்துவருகின்றனர். இந்த எதிர்ப்புக்கான காரணங்களை அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவரும் அரசு மருத்துவர் ஒருவரும் விளக்குகிறார்கள்.

“தேர்வுகளைத் தாண்டி சிந்திக்க வேண்டும்”

உமா மகேஸ்வரி

(அரசுப் பள்ளி ஆசிரியர், அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்)

தமிழ்நாட்டில் நாவல் கரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் அதிரித்துக்கொண்டே போகிறது. சென்னையில் எத்தனையோ தெருக்களை தடுப்புகள் போட்டு முற்றிலும் முடக்கிவைத்திருக்கிறார்கள். இந்த தெருக்களில் வசிக்கும் மாணவர்கள் எப்படித் தேர்வெழுத வருவார்கள்? தேர்வு மையங்களில் வழக்கமாக ஒரு அறையில் இருபது மாணவர்களை அமர வைக்க முடியும் என்றால், இப்போது பத்து மாணவர்களைத்தான் அமர வைக்க முடியும். எனவே, தேர்வுக் கண்காணிப்புப் பணிக்கு நிறைய ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள்.

சென்னை போன்ற நகரங்களுக்கு திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற அண்டை மாவட்டங்களிலிருந்து ரயிலிலும் பேருந்திலும் வந்துசெல்லும் ஆசிரியர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இப்படித் தொலை தூரத்துலிருந்து பொதுப் போக்குவரத்து மூலமாக ஆசிரியர்கள் எப்படி வருவார்கள்? மாணவர்களின் பிரச்சினைகள் இதைவிடத் தீவிரமானவை.

அரசுப் பள்ளி மாணவர்களில் கிட்டத்தட்ட 80-90 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய பெற்றோருக்கு இரண்டு மாதமாக எந்த வருமானமும் இருந்திருக்காது. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில், மாணவர்கள் உடல்ரீதியாக சோர்வுக்கும் மனரீதியான அழுத்தத்துக்கும் ஆளாகியிருப்பார்கள். இந்த நேரத்தில் எப்படி அவர்களால் தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்?

தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு சிறப்புப் பேருந்து அனுப்பி தேர்வு மையத்துக்கு அழைத்துவருவோம் என்று அரசு சொல்கிறது. இவ்வளவு குறுகிய காலத்தில் இது சாத்தியமே இல்லை.

உமா மகேஸ்வரி

மாநிலம் விட்டு மாநிலம் சென்றுகொண்டிருக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் படித்திருப்பார்கள். அவர்கள் இப்போது எங்கே இருப்பார்கள் என்றே தெரியாது. அவர்கள் எல்லோரையும் தேர்வு மையத்துக்கு அழைத்துவந்துவிட முடியுமா?

எல்லாவற்றையும்விட முக்கியமாகப் பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் இரண்டு மூன்று மாதங்களாவது பள்ளிச் சூழலில் பயிற்சி பெற வேண்டும். மார்ச் மாதத்திலிருந்தே ஊரடங்கு வந்துவிட்டது. தேர்வுக்கான பயிற்சிக்கு நேரம் கொடுக்காமலும் குழந்தைகளை மனத்தளவில் தயார்படுத்தாமலும் இதுபோன்ற தேர்வுகளை நடத்தவே கூடாது.

இந்தச் சூழலில்தான் தேர்வுகளுக்கு அப்பாற்பட்ட மாற்று வழிகளை நாம் சிந்திக்க வேண்டும். ஏற்கெனவே எட்டாம் வகுப்புவரை தொடர் - முழுமையான மதிப்பீடு (CCE) நடைமுறையில் இருக்கிறது. பொதுத் தேர்வைவிட இதுவே சிறந்த மதிப்பீட்டு முறை. இதை பத்தாம் வகுப்புக்கும் நீட்டிக்கலாம். இல்லை, தேர்வு வைத்தே ஆக வேண்டும் என்றால் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு 15-20 நாட்கள் பள்ளியில் ஆசிரியர்களுடன் மாணவர்கள் இருந்து ஒரளவு பயிற்சி, வழிகாட்டல் ஆகியவற்றைப் பெற்ற பிறகு நடத்த வேண்டும்.

“மருத்துவர்களுக்கே தொற்று ஏற்படும்போது மாணவர்கள் என்ன செய்வார்கள்?”

மதன் குணசேகரன்

(மருத்துவர், அவசர மருத்துவப் பிரிவு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி)

இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்த சூழலும் இப்போது இருக்கும் சூழலும் முற்றிலும் வேறானவை. மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், கோவிட்19 நோயாளிகளுக்கான கண்காணிப்பு மையங்களாக்கப்பட்ட மூன்று கல்லூரிகள் நோயாளிகளால் நிறைந்துவிட்டன. வரும் வாரங்களில் தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கையும் தீவிர சிகிச்சை தேவைப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க சாத்தியம் அதிகம். இதையெல்லாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுவதுதான் இப்போதைய அத்தியாவசியப் பணி. தேர்வு நடத்துவதல்ல.

கோவிட்19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களான நாங்கள் அடிக்கடி கைகளைக் கழுவுகிறோம். கண்களுக்கு காகிள்ஸ் (Goggle) உடல் முழுவதும் மறைக்கும் தனிநபர் பாதுகாப்பு ஆடை (PPE) ஆகியவற்றை அணிந்துகொண்டுதான் மருத்துவம் செய்கிறோம். மிகத் தீவிரமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். அவற்றையெல்லாம் மீறியும் பல மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களுக்கும் நாவல் கரோனா தொற்று ஏற்படுகிறது.

மருத்துவர்களுக்கே இந்த நிலை என்றால் விவரம் தெரியாத மாணவர்கள் என்ன செய்வார்கள்? அதுவும் பலருக்கு நாள்தோறும் மாஸ்க் வாங்குவதே பொருளாதாரரீதியாகக் கடினமானது.

மதன் குணசேகரன்

தேர்வு மையத்துக்கு வருபவர்களில் யாருக்கு தொற்று இருக்கிறது என்று நமக்குத் தெரியவே தெரியாது. ஒரு தேர்வு மையத்தில் 250 பேராவது தேர்வு எழுத வேண்டியிருக்கும். இவர்களில் ஒருவருக்கு தொற்று இருந்தாலும் மீதமுள்ள 249 பேரும் தேர்வு எழுத முடியாது. இதனால் கோயம்பேடு சந்தை போல் இன்னொரு நோய் மையம் (Cluster) உருவாகும் ஆபத்து உள்ளது. என்னைப் பொறுத்தவரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்வதே சிறந்த முடிவு. மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் பாடப்பிரிவைக் கொடுத்து உயர் வகுப்புகளுக்கு அனுப்புவதால் ஒன்றும் கெட்டு விடாது. அப்படி முடியாதென்றால் ஆண்டு இறுதிவரை அல்லது குறைந்தபட்சம் அக்டோபர் வரைக்குமாவது தள்ளிவைக்க வேண்டும்.

தேர்வுகளை எப்போது நடத்தினாலும் மாணவர்கள் அனைவரின் உடல் வெப்பநிலை, சளி, இருமல் போன்றவை இருக்கின்றனவா என்று பரிசோதித்துவிட்டுதான் தேர்வறைக்குள் அனுப்ப வேண்டும். கைகளை நன்கு கழுவிய பிறகு மாஸ்க் அணிந்துகொண்டுதான் உள்ளே அனுமதிக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் இடைவெளிவிட்டு மாணவர்கள் அமரவைக்கப்பட வேண்டும்.

தேர்வு எழுத வருபவர்களில் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்குத் தேர்விலிருந்து விலக்கு அளித்துவிட்டு, சிகிச்சை/தனிமைப்படுத்தல் காலம் முடிந்த பிறகு தனியாகத் தேர்வு நடத்த வேண்டும். அதேபோல் தேர்வுக் கண்காணிப்புப் பணிக்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பிற உடல்நலப் பிரச்சினைகள் (co-morbidities) இருப்பவர்களை நியமிக்கக் கூடாது. 25-40 வயதுப் பிரிவில் இருப்பவர்களைதான் நியமிக்க வேண்டும். இது மிக மிக முக்கியம்.

தொகுப்பு- கோபாலகிருஷ்ணன்


தேர்வுஅவசரம்தமிழகம்கரோனா வைரஸ்நாவல் கரோனாகொரோனாசென்னைஆசிரியர்கள்மருத்துவர்கள்தீவிர சிகிச்சை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author