

தொகுப்பு: கனி
மே.12: கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நான்காம் கட்டமாகப் புதிய விதிகளுடன் நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை
மே.12: 2020 - உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையில், 2025-ம் ஆண்டுக்கான ஊட்டச்சத்து இலக்குகளை எட்டாத நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாக உள்ள நாடாகவும் இந்தியா உள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கட்டுப்படுத்தாத நைஜீரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் வளர்ச்சி 1.2%
மே.13: 2020–ல், இந்தியாவின் வளர்ச்சி சதவீதம் 1.2 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா.வின் ‘உலகப் பொருளாதாரச் சூழல், வாய்ப்புகள் அறிக்கை’ தெரிவிக்கிறது. உலகப் பொருளாதார வளர்ச்சி 2020-ல் 3.2 சதவீதமாக இருக்கும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. வளர்ந்த நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி -0.5 சதவீதமாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 நீண்ட காலம் நீடிக்கும்
மே.13: கோவிட்-19 வைரஸ் நீண்ட காலத்துக்கு உலகில் நிலைபெற்றிருக்கும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் மைக்கேல் ரயான் தெரிவித்துள்ளார். இந்த வைரஸைக் கட்டுப்படுத்தத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், உலக மக்களிடம் இந்த நோய்க்கான எதிர்ப்பாற்றல் உருவாகச் சில ஆண்டுகள் பிடிக்கும் என்று அவர் தெரிவித்தார். ‘எச்.ஐ.வி.' போன்ற பிற வைரஸ்களைப் போல இந்த கரோனா வைரஸும் நம் சமூகங்களில் நிலைபெற்றிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
விஜய் மல்லையா ஒப்படைப்பு?
மே.14: இந்திய அரசிடம் தான் ஒப்படைக்கப்படுவதை எதிர்த்து பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட அனுமதி கோரியிருந்த இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மனுவை லண்டன் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதன்மூலம் 28 நாட்களுக்குள் மத்திய அரசிடம் விஜய் மல்லையா ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மல்லையாவின் மீது மத்திய அரசு, பணமோசடி வழக்குப் பதிவுசெய்துள்ளது.
உலக வங்கிக் கடன்
மே.15: உலக வங்கி, கோவிட்-19 சூழலை எதிர்கொள்ள இந்திய மருத்துவத் துறைக்கு ஏற்கெனவே 1 பில்லியன் டாலர் (ரூ.7,549 கோடி) கடன் வழங்கியிருந்தது. தற்போது இரண்டாம் கட்டமாக நாட்டின் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மீண்டும் 1 பில்லியன் டாலர் கடனை உலக வங்கி இந்தியாவுக்கு வழங்கியுள்ளது.