Published : 28 Apr 2020 08:46 am

Updated : 28 Apr 2020 08:46 am

 

Published : 28 Apr 2020 08:46 AM
Last Updated : 28 Apr 2020 08:46 AM

கூடுதல் திறன்களால் தகவமைத்துக்கொள்ளலாம்: பெருந்தொற்றால் சவாலாகும் வேலைவாய்ப்பு கூடுதல் திறன்களால் தகவமைத்துக்கொள்ளலாம்

corona-virus

எஸ்.எஸ். லெனின்

உயிரச்சத்துக்கு நிகராக வேலைவாய்ப்புகளின் ஊசலாட்டத்தை, கரோனா பெருந்தொற்று பரவலாக்கியுள்ளது. இதிலிருந்து மீள நீண்ட காலமாகும் என்பதால், அடுத்துவரும் ஆண்டுகளில் பணிதேடும் வாய்ப்புள்ளவர்களும், அதற்கான பாதையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களும் இப்போதிருந்தே புதிய திறன் மேம்பாடுகளில் தகவமைத்துக்கொள்வது, சிறப்பான தொலைநோக்குத் திட்டமாக அமையும்.

மாற்றங்களுக்கு ஈடுகொடுப்போம்

தொழிற்புரட்சி காலத்தில் தலைமுறைகள்தோறும் மாற்றம் கண்டுவந்த திறன் மேம்பாடுகளின் தேவை, பின்னர் பத்தாண்டுகளுக்கு ஒரு முறையாக மாறியது. புத்தாயிரத்தில் இதுவே சில ஆண்டுகளுக்கு ஒரு முறையாக வேகமெடுத்தது. தற்போதைய பெருந்தொற்றுப் பாதிப்பில் சிக்குண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால், வேலைநாடுவோரிடம் தொழில்துறை எதிர்பார்க்கும் திறன்களும் திடீர் மாறுதல் காண்கின்றன. செயற்கை நுண்ணறிவு, அதையொட்டிய அறிவியல் கரங்களின் ஆக்கிரமிப்பால் பணி வாய்ப்பில் அனைத்தும் தானியங்கி மயமாகும் சூழலில், தற்போதைய புதிய மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்தாக வேண்டும்.

கற்றலில் மாற்றங்கள்

கரோனா பாதிப்புகள் கோரும் உடனடிப் பணி வாய்ப்புகளில் முன்னிற்பவை, இணையவழிக் கல்வி - வேலைவாய்ப்பு சார்ந்தவை. வீட்டிலிருந்தபடியே கற்றலைத் தொடரும் மாணவர்கள், அலுவலகப் பணிகளை முடிக்கும் பணியாளர்களுக்கான டிஜிட்டல் உலகத் தேவைகள் அதிகரித்துள்ளன. கல்வி நிலையங்களும், அலுவலக நிர்வாகங்களும் அதற்கான ஏற்பாடுகளில் ஏற்கெனவே இறங்கியுள்ளன. ஆன்லைனில் கற்கவும், ஐயம் தீர்க்கவும், மாதிரித் தேர்வுகள் எழுதுவதற்கான தேவை மாணவர்களுக்கு இனி அதிகரிக்கும்.

இவை உட்பட கல்வி நிலையத்தையும் மாணவர்களையும் இணைக்கும் இதர தகவல்தொடர்பு சார்ந்த தொழில்நுட்பங்களுக்கும் உடனடித் தேவை எழுந்துள்ளது. பாடம் கற்பிக்கவும், ஐயம் போக்கவும் தகுதிபெற்ற இணையவழி ஆசிரியர்கள், வழிகாட்டிகளின் தேவை அதிகரிக்கும். முழுநேர, பகுதிநேரப் பணியாக, பெரும் முதலீடு இன்றிச் சம்பாதிக்கவும் புதிய வாய்ப்புகள் விரிகின்றன.

வீடடங்கிய அலுவலகம்

அதேபோன்று வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கும், பணிகளை ஒருங்கிணைப்பதற்குமான தொழில்நுட்பத் தேவைகளும் புதிய முகம் காணுகின்றன. இவற்றுக்கான தொழில்நுட்பத் தேவைகளை வழங்கும் சேவையாளர்கள் அடுத்துவரும் ஆண்டுகளில் அதிக அளவில் தேவைப்படுவார்கள். எனவே, அவை சார்ந்த தொழில்நுட்ப அடிப்படைப் பயிற்சிகள், திறன்களை மேம்படுத்திக்கொண்டால் உடனடி பணிவாய்ப்புக்கு உத்தரவாதமாகும். உரிய தொழில் நிறுவனத்தில் பணியாற்றுவது மட்டுமின்றிச் சொந்தமாக ஒரு டிஜிட்டல் நிறுவனத்தைத் தொடங்கி சேவைகளை வழங்குவதும் பயனளிக்கும்.

சவால்களும் வாய்ப்புகளும்

கரோனா பெருந்தொற்றின் பாதிப்பு வேலைவாய்ப்பு சந்தையில் நீண்டகாலத் தத்தளிப்புகளையும் உருவாக்கும். பொருளாதார நெருக்கடியில் தங்கள் தற்காப்புக்கென இரண்டு அஸ்திரங்களைத் தொழில் நிறுவனங்கள் கையிலெடுக்கும். பணியாளர் குறைப்பு - ஊதியக் குறைப்பு ஆகிய அந்த இரண்டும், தற்போதைய பணியாளர்கள் மட்டுமன்றிப் புதிதாக வேலை தேடுவோருக்குமான பூதாகர சவாலாகும். களையெடுப்பில் புதிய மாற்றங்களுக்குத் தங்களைத் தகவமைத்துக்கொள்ளாத பணியாளர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள்.

சீரமைப்பின் தொடர்ச்சியாகவும், புதிய அலை தொழில்நுட்பங்களை எதிர்கொள்வதற்காகவும் புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதும் நடக்கும். அத்தகைய பணி வாய்ப்புகளை ஆர்வமுள்ள இளைஞர்கள் குறிவைக்கலாம். இவர்கள் தற்போதைய ஊரடங்குக் காத்திருப்பில், தங்களுடைய உயர்கல்வி, ஆர்வமுள்ள தொழில்துறையின் மாற்றங்களுக்கு உவப்பான புதிய திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம்.

இணையத்தில் திறன் வளர்ப்போம்

கரோனாவால் கிடைத்திருக்கும் விடுமுறைக் காலத்தை, மாறும் காலத்துக்கேற்ற திறன் மேம்பாட்டுக்குப் பயனுள்ள வகையில் இணையத்தில் வளர்த்துக்கொள்ளலாம்.

தங்களது தற்போதை உயர்கல்வி - அது தொடர்பான வேலைவாய்ப்புச் சந்தையை இணைக்கும் திறன்களாக அவை அமைவதும் அவசியம். Content creation, Mobile optimization, Information security, Graphic designing, Social selling, Data analytics, Machine learning, Internet of Things ஆகியவற்றிலிருந்து தங்களுக்கு விருப்பமானதை அடையாளம் காணலாம்.

வழக்கமான வலைத்தள வடிவமைப்புடன், செயலிகள் மூலம் கற்றல் -பணிச் செயல்பாடுகள் பெருமளவு வளரக்கூடும். எனவே, கைபேசியை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைச் செயலி உருவாக்கம் - பராமரிப்பு சார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் சந்தைக்கு அடிப்படையான Digital marketing, Social media marketing, Viral marketing போன்றவற்றையும் இணையம் மூலமாகவே கற்கலாம்.புதிய திறன்களை கற்றுக்கொள்வதுடன், ஏற்கெனவே உயர்கல்வி வழங்கிய அடிப்படைத் திறன்களை மேம்படுத்திக்கொள்வதும் அவசியம்.

மத்திய அரசின் ‘ஸ்வயம்’ (https://swayam.gov.in/) தளத்தின் மூலமாக 9-ம் வகுப்பு முதல் முதுநிலைக் கல்வி பெறும் மாணவர்கள், பணி தேடுவோர் என அனைத்துத் தரப்பினரும் பல்வேறு அடிப்படைத் திறன்களுக்கான எளிமையான இணையவழிப் பயிற்சிகளைப் பெறலாம்.

உயர்கல்வி பெறும் மாணவர்கள் தேசிய டிஜிட்டல் நூலகம் (https://ndl.iitkgp.ac.in/) மூலமாகவும் தங்களைப் பட்டை தீட்டிக்கொள்ளலாம். ‘edapt: Futuristic Learning App’ முதலான கைபேசிச் செயலிகள் மூலமே வீட்டிலிருந்தபடியே புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

புதிய திறப்புகள்

இந்தியக் கல்விச் சந்தையில் பல நூறு தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த எண்ணிக்கை இனி வரும்காலத்தில் அதிகரிப்பதுடன், ஒட்டுமொத்தமாக இவற்றின் வேலைவாய்ப்பு எகிறவும் வாய்ப்புள்ளது. கற்பித்தல் - சிறப்புப் பயிற்சி மட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாதிரித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் - பணி நாடுவோருக்கான போட்டித்தேர்வுக்கான பயிற்சிகளும், ஆய்வுப் பணிகளும் ஆன்லைனில் அதிகரிக்க உள்ளன. கற்றல், கற்பித்தல் தொடர்பாக எளிமையான உத்திகளுடன் பாடக்கருத்துகளை விளக்கும் டிஜிட்டல் உதவிகளுக்கான சந்தையும் பெரும் வளர்ச்சி காணும்.

கரோனா விடுமுறைகள் மின்-நூல் வாசிப்புக்கான வாசல்களைத் திறந்துவிட்டிருக்கின்றன. மேலும், இணைய விளையாட்டுகள் பக்கம் பெருந்திரள் சேர்ந்துள்ளது. இவையிரண்டின் அடிப்படையிலும் இணையம் சார்ந்த புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளலாம். ஏற்கெனவே, மேற்கொண்டுவரும் ஆன்லைன் பணிகளுடன் இவற்றை இணைத்துக்கொள்வதும் உசிதமானது. கரோனா அனுபவத்தின் அடிப்படையில் ஆன்லைன் முன்னெடுப்புகளை ஊக்குவிக்க அரசு முன்வந்துள்ளதால் வங்கிக் கடன், சந்தை எதிர்பார்ப்புகளுக்கான நடைமுறைகளும் இனி எளிதாகும்.

தொடர்புக்கு: leninsuman4k@gmail.com


மாற்றங்கள்கரோனா பாதிப்புகள்வீடடங்கிய அலுவலகம்சவால்கள்கல்விச் சந்தைஇந்தியக் கல்விகொரோனாCorona VirusCorona

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author