Published : 21 Apr 2020 09:18 AM
Last Updated : 21 Apr 2020 09:18 AM

கரோனா ஒழிப்பில் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள்

ஜெயகுமார்

கரோனா பாதிப்பால் நாடு இதுவரை சந்தித்திராத ஒரு நெருக்கடியில் சிக்கியுள்ளது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த வைரஸ் பல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இதை எதிர்கொள்ள சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவத் துறையினர், வருவாய்த் துறையினர், தன்னார்வலர்கள், காவல் துறையினர் எனப் பலரும் ஒரு குடையின்கீழ் இணைந்து பணியாற்றிவருகிறார்கள். இந்தக் கூட்டு உழைப்பில் கல்வித் துறை சார்ந்த இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களும் (ஐ.ஐ.டி.) கைகோத்துள்ளன.

வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் நாசித் திண்மக் கரைசலை (Nasal Gel) பம்பாய் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கரைசல் மூலம் மூக்கு வழியாக வைரஸ் செல்வதைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறது பம்பாய் தொழில்நுட்பக் கழக உயிரியல் தொழில்நுட்பத் துறை.

கரோனா வைரஸ் அதிகமாக மூக்கு வழியாகத்தான் பரவுகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அதைத் தடுக்க இந்தக் கண்டுபிடிப்பு உதவக்கூடும். நுரையீரலின் தொகுப்பு செல்களைத்தான் வைரஸ் முதலில் தாக்குகிறது. அதை இந்தத் திண்மக் கரைசல் கட்டுப்படுத்தும். முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரின் பயன்பாட்டுக்காக இது தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டுக்கும் பின்னர் இது விரிவுபடுத்தப்படலாம்.

பம்பாய் இந்தியத் தொழில் நுட்பக் கழகம், ஸ்மார்ட் ஸ்டெதஸ்கோபையும் (Smart stethoscope) கண்டுபிடித்துள்ளது. இந்த ஸ்டெதஸ்கோபில் காதில் பொருத்தக்கூடிய ஸ்பீக்கர் பகுதியும் நோயாளியின் உடலில் வைத்துப் பார்க்கக்கூடிய பகுதியும் புளூடூத் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் மருத்துவர்களுக்கு இந்தத் தொற்று பரவுவது தடுக்கப்படும் என்று இதைக் கண்டுபிடித்த குழுவினர் தெரிவிக்கிறார்கள். வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவர்கள் மூச்சுவிடச் சிரமப்படும் நிலை ஏற்படுவதால், மருத்துவர்கள் ஸ்டெதஸ்கோப் மூலம் அவர்களுடைய சுவாசத்தைப் பரிசோதிக்க வேண்டியுள்ளது. அதற்கு இந்த ஸ்மார்ட் ஸ்டெதஸ்கோப் சிறந்த மாற்றாக இருக்கும். முதற்கட்டமாக 1,000 ஸ்மார்ட் ஸ்டெதஸ்கோப்கள் தயாரிக்கப்பட்டுப் பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பப் பட்டுள்ளன.

முழு உடல் கவச உடை

டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகம், மலிவு விலை கரோனா பரிசோதனைக் கருவியைக் கண்டுபிடித்துள்ளது. இப்போதுள்ள நீண்ட நேரப் பரிசோதனைக்கு இது மாற்றாக இருக்கும் என இதைக் கண்டுபிடித்த குழு தெரிவித்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்கப் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டியது அவசியம். மேலும், இப்போது பின்பற்றப்படும் கரோனா பரிசோதனைக்கு அதிக நேரம் எடுக்கிறது. செலவும் அதிகமாகிறது. இதைக் கருத்தில்கொண்டு இந்தப் பரிசோதனைக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. புனேயில் உள்ள தேசிய கிருமியியல் நிறுவனத்தின் ஒப்புதலுக்காக இந்தக் கருவி அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லி இந்தியத் தொழில்நுட்பக் கழகம், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உடல் கவச உடையையும் உருவாக்கியுள்ளது. சந்தையில் கிடைக்கும் பருத்தித் துணியில் இதற்கெனத் தனியாக உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்களைச் செலுத்தி, இந்த கவச உடைகளைத் தயாரித்துள்ளனர். இது மருத்துவமனைப் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி.

சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ஐ.வி.ஆர்.எஸ். என்னும் தொழில்நுட்ப வசதியைத் தமிழக அரசுக்காக உருவாக்கியுள்ளது. இதன்மூலம் 9499912345 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டால், உங்கள் உடல்நிலை குறித்த கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதில் தேர்வுகளும் இதில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சுகாதாரத் துறைக்கு அனுப்பப்படும். தேவையான நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள். இது மத்திய அரசின் ‘ஆரோக்கிய சேது' திட்டத்தின் ஒரு பாகமாகச் செயல்படுத்தப்படுகிறது. மேலும், இந்தத் தொழில்நுட்பக் கழகம் முகக்கவசங்களையும் உருவாக்கிவருகிறது. மருத்துவப் பணியாளர்களுக்கும் காவல் துறை யினருக்கும் இந்த முகக்கவசங்களை இலவசமாக அளித்துவருகிறது.

விலை குறைந்த வென்டிலேட்டர்

கரோனாவின் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிவரும் நிலையில், சிகிச்சைக்கான வென்டிலேட்டர் தட்டுப்பாடும் பெருகிவருகிறது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் வென்டிலேட்டர் தட்டுப்பாட்டால் இறப்புகள் அதிகரித்துவருகின்றன. இதைத் தடுக்கக் குறைந்த விலை வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில்கொண்டு கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் குறைந்த விலை வென்டிலேட்டர்களை உருவாக்கியுள்ளது. பொதுவாகச் சந்தையில் கிடைக்கும் வென்டிலேட்டரின் விலை ரூ.4 லட்சம்.

ஆனால், கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் உருவாக்கியுள்ள வென்டிலேட்டரின் விலை ரூ. 70 ஆயிரம் மட்டுமே. இது முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதை கைபேசியுடன் இணைத்து கட்டுப்படுத்தவும் முடியும். மேலும், இதற்குத் தனியாகக் காற்று வசதி தேவையில்லை. சுற்றுப்புறக் காற்றிலேயே இயங்கக்கூடியது.

ஆக்ஸிஜன் குழாயை பொருத்துவதற்கான அமைப்பும் இதில் உண்டு. மேலும் இந்த நிறுவனத்தின் உயிரியல் தொழில்நுட்பத் துறை, பாலிஎத்திலீனைக் கொண்டு மலிவு விலை கரோனா கவசத்தையும் உருவாக்கியுள்ளது. பைப்ஸ் (PIPES - Polyethylene-based Improvised Protective Equipment under Scarcity) என அழைக்கப்படும் இந்தக் கவசம் ரூ.100க்கும் குறைவான விலையில் கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.

இன்னும் பல கருவிகள்

ரூர்கி இந்தியத் தொழில்நுட்பக் கழகமும் குறைந்த விலை வென்டிலேட்டர்களை உருவாக்கி யுள்ளது. 'பிராண வாயு' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வென்டிலேட்டர், டெல்லி அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் பேட்டரியில் இயங்கக்கூடிய ஆம்புஷ் பேக்கைக் கண்டுபிடித்துள்ளது.

வென்டிலேட்டருக்கு மாற்றாக இந்தக் கருவியைப் பயன்படுத்தலாம் என முன்மொழியப்பட்டுள்ளது. இந்தக் கருவியின் விலை ரூ.5,000. கவுஹாட்டி இந்தியத் தொழில்நுட்பக் கழகம் கரோனா பரிசோதனைக்குப் பயன்படும் பி.சி.ஆர். கருவியை, கவுஹாட்டி அரசு மருத்துவமனைக்காக உருவாக்கியுள்ளது இந்தக் கருவியின் மூலம் 24 மணி நேரத்தில் 2,000 மாதிரிகளைப் பரிசோதிக்க முடியும். மேலும், அல்ட்ரா வயலட் சி எல்.இ.டி. (UVC LED) தொழில்நுட்பம் மூலம் குறைந்த விலை கிருமிநாசினி தெளிக்கும் கருவியையும் இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இன்னும் பல இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் கையைச் சுத்தப்படுத்த உதவும் திரவம், முகக் கவசம் போன்றவற்றை உருவாக்கிவருகின்றன. காந்தி நகர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தைப் போன்று பல நிறுவனங்கள், இந்தச் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x