

தொகுப்பு: கனி
ஏப்.6: கோவிட்-19 காரணமாகக் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஊதியத்திலும், இப்பதவி வகித்து ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்திலும் 30 சதவீதம் பிடிக்கப்படும் என்ற அரசாணைக்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2020 ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் இந்த நடவடிக்கை ஓராண்டுக்கு நீடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் குறைவான நிதி ஒதுக்கீடு?
ஏப்.8: கரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மாநிலங்களுக்குப் பேரிடர் மேலாண்மை நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. இதில் தமிழ்நாட்டுக்கு மிகவும் குறைவாக ரூ.510 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இரண்டாம் மாநிலமான தமிழ்நாட்டுக்கு இவ்வளவு குறைவான நிதியை மத்திய அரசு ஒதுக்கியதற்கு என்ன காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வேலைவாய்ப்பின்மை 23% அதிகரிப்பு
ஏப்.7: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று காரணமாக மார்ச் 25 அன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, வேலைவாய்ப்பின்மை 23 சதவீதம் அதிகரித்திருப்பதாக இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை மார்ச் மாதம் 8.7 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், இது 43 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் அவசர நிலை
ஏப்.7: கரோனா நோய்த்தொற்று காரணமாக, உலகின் மூன்றாம் பெரிய பொருளாதார நாடான ஜப்பான் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடி நிலை 2020 மே 6 வரை நீடிக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கரோனா தொற்றுநோயால், ஜப்பான் பொருளாதாரம் 17 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
40 கோடிப் பேர் பாதிப்பு
ஏப்.8: ‘கோவிட்-19 & வேலை உலகம்' என்ற அறிக்கையை சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், கோவிட்-19 காரணமாக, இந்தியாவில் 40 கோடி பேர் ஏழைகளாவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 19.5 கோடி முழுநேரப் பணியிழப்பு இருக்கும் என்றும் இந்த அறிக்கை கணித்துள்ளது. அத்துடன், உலகம் முழுவதும் முறைசாரா துறைகளில் பணியாற்றும் 200 கோடிப் பேர் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தி 4.8%
ஏப்.9: 2020 ஆசிய பசிபிக் பொருளாதார, சமூக ஆய்வு (ESCAP) அறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஐந்து சதவீதமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.8 சதவீதமாக இருக்கும் என்று இந்த அறிக்கை கணித்துள்ளது.
18 லட்சம் பேர் பாதிப்பு
ஏப்.13: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,53,155 ஆக உயர்ந்திருக்கிறது. 1,14,270 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 4,27,801 பேர் நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இந்தியாவில் கரோனாவால் 9269 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 333 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.