

கோபால்
மார்ச் 6 அன்று வெளியான இயக்குநர் ராஜுமுருகனின் ‘ஜிப்ஸி’ திரைப்படத்தில் பல நிஜவாழ்க்கைப் பொதுவுடைமைப் போராளிகளும் செயற்பாட்டாளர்களும் தோன்றினர். அவர்களில் இரண்டு கைகளும் ஒரு காலும் இல்லாத சிவப்புத் தலைப்பாகை அணிந்த பஞ்சாபியரும் ஒருவர்.
தமிழக மக்கள் அதிகம் பேர் அறிந்திராத அவரது பெயர் பாந்த் சிங். விவசாயக் கூலித் தொழிலாளியும் பாடகருமான அவர் மார்க்ஸிய - லெனினிய அமைப்பு ஒன்றுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருந்தார். அவருடைய கைகளும் காலும் இல்லாமல் போனது பிறவிக் குறைபாடோ சொத்துத் தகராறால் விளைந்த தாக்குதலோ அல்ல. அவர் தன் மகளுக்கு நியாயம் கேட்டுப் போராடி வென்றதற்காக ஆதிக்க சாதியினர் கொடுத்த ‘பரிசு’.
பஞ்சாபைச் சேர்ந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான நிருபமா தத் எழுதிய தி பாலட் ஆஃப் பாந்த் சிங்: அ கிஸா ஆஃப் கரேஜ்’ (The Ballad of Bant Singh: A Qissa of Courage) என்ற நூல், பாந்த் சிங்கின் வாழ்க்கையை, அவரது நீதிப் போராட்டத்தை, கொலைவெறித் தாக்குதலை எதிர்கொண்ட பிறகும் அவர் போராட்டக் குணத்தைக் கைவிடாமல் தொடர்ந்து தன்னைப் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடிக்கொண்டும் போராடிக்கொண்டும் இருப்பதைப் பதிவு செய்கிறது. அந்த நூலை ‘துணிவின் பாடகன் பாந்த் சிங்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் கமலாலயன்.
பஞ்சாபின் பூர்ஜ் ஹப்பார் கிராமத்தைச் சேர்ந்த பாந்த் சிங் ஒரு மாக்ஹபி சீக்கியர். நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டுவரும் தலித் பிரிவு அது. தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து சுயமரியாதையுடன் வாழ விரும்பிய பாந்த் சிங் ஆதிக்கசாதி நிலவுடைமையாளர்களின் அடக்குமுறையை எதிர்த்துக் குரலெழுப்பினார். பருவ வயதை எய்திராத அவருடைய மகள் ஆதிக்கம் மிக்க நபர்கள் சிலரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்.
இதை எதிர்த்து பாந்த் சிங் நிகழ்த்திய சட்டப் போராட்டத்தின் மூலம் மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதைச் சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதியினர் பாந்த் சிங் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். அவரது இரண்டு கைகளையும் ஒரு காலையும் நீக்கிய பிறகுதான் அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகும் தொடர்ந்து ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை மீட்பதற்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார் பாந்த் சிங்.
படித்தவர்களும் உயர் பதவிகளில் இருப்பவர்களும்கூட நண்பர்களுடனான தனிப்பேச்சில் எந்தக் கூச்சமும் குற்றவுணர்வும் இல்லாமல் தலித் பெண்களுக்கெதிராகத் தாங்கள் நிகழ்த்திய பாலியல் குற்றங்களைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் அளவில்தான் பஞ்சாபிய கிராமங்கள் உள்ளன. இந்தச் சூழலை உள்வாங்கினால்தான் பாந்த் சிங்கின் சட்டப் போராட்டத்தின் மகத்துவத்தை உணர முடியும்.
அதற்கேற்ப இந்த நூல் பாந்த் சிங்கின் கதையைச் சொல்வதனூடாக பஞ்சாபின் அரசியல், சமூக, பொருளாதாரச் சூழலையும் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் நிருபமா தத். உண்மைச் சம்பவங்களைப் பதிவுசெய்யும் நூல் என்றாலும் ஒரு நாவலுக்குரிய செம்மையான மொழிநடையுடனும் கட்டமைப்புடனும் எழுதியிருக்கிறார். கமலாலயனின் தேர்ந்த மொழிபெயர்ப்பில் தமிழில் நேரடியாக எழுதப்பட்ட நூலைப் போல் இதைச் சரளமாக வாசிக்க முடிகிறது.
துணிவின் பாடகன் பாந்த் சிங் -
நிருபமா தத்
(தமிழில்- கமலாலயன்)
வெளியீடு- காம்ரேடு டாக்கீஸ், பாரதி புத்தகாலயம்
சென்னை-600018.
தொடர்புக்கு - 044-2433 2924