

தொகுப்பு: கனி
மார்ச் 1: இலவசப் பொதுத் போக்குவரத்து சேவையை அமல் படுத்தியிருக்கும் உலகின் முதல் நாடாக லக்ஸம்போர்க் மாறியிருக்கிறது. அந்நாடு எதிர்கொண்டுவரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும்விதமாக இந்த இலவசப் பொதுப் போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மசோதாவுக்கு எதிராக ஐ.நா. வழக்கு
மார்ச் 2: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். மனித உரிமை களைப் பாதுகாப்பதற்காக இந்த மசோதாவில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு ஐ.நா.வுக்கு உரிமையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சுதந்திரத்தில் கடும் பின்னடைவு
மார்ச் 3: உலகின் ஜனநாயக நாடுகளில், நிலவும் சுதந்திரத்தில் இந்தியா கடும் பின்னடைவைச் சந்தித்திருப்பதாக அமெரிக்காவில் ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ அமைப்பில் ‘2020 உலகின் சுதந்திரம்’ என்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமான ஜனநாயக நாடுகள் பட்டியலில் கடுமையாகப் பின்தங்கியுள்ள இந்தியா, 83-ம் இடத்தில் உள்ளது. இது கடைசியிலிருந்து ஐந்தாம் இடம்.
காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370-யை நீக்கியது, குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா, தேசிய குடியுரிமைப் பதிவு போன்றவற்றால் ஜனநாயக நிலையில் இந்தியா பின்னடைவைச் சந்தித்துள்ளது. பின்லாந்து, நார்வே, ஸ்வீடன், நெதர்லாந்து, லக்ஸம்போர்க் ஆகியவை ஜனநாயக நிலையில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.
உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்கள்
மார்ச் 3: 2020-ம் ஆண்டில் உலகின் சிறந்த நூறு பல்கலைக்கழகங்களின் பட்டியலை உலகளாவிய உயர்கல்வி அமைப்பான ‘க்யூஎஸ்’ (Quacquarelli Symonds) வெளியிட்டுள்ளது. இந்தத் தரவரிசைப் பட்டியலுக்காக 1,368 கல்வி நிறுவனங்களின் 48 பாடங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 12 பாடங்களில் சிறந்து விளங்கும் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் ஐஐடி மும்பை (44), டெல்லி (47), கரக்பூர் (86), மெட்ராஸ் (88), கான்பூர் (96) ஆகியவை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
2021-ல் சந்திரயான் 3 திட்டம்
மார்ச் 4: சந்திரயான்-3 திட்டம் 2021-ம் ஆண்டின் முதல் பாதியில் நிறைவேற்றப்படும் என்று மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார். சந்திரயான்-2 திட்டம் 2019 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. சந்திரயான்-2-வில் ஏற்பட்ட சிக்கல்கள் சந்திரயான்- 3-ல் ஏற்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
10 வங்கிகள் இணைப்பு
மார்ச் 4: பத்து பொதுத்துறை வங்கிகள் நான்கு வங்கிகளாக இணைக்கப்படும் இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 1 அன்று இந்த இணைப்பு அமலுக்கு வந்தபிறகு, நாட்டின் பொதுத்துறை வங்கிகள் 12-ஆகக் குறைந்துவிடும். பஞ்சாப் தேசிய வங்கியுடன் ஓரியண்டல் யுனைடட் வங்கியும், கனராவுடன், சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், யுனைடட் இந்திய வங்கியுடன், ஆந்திர, கார்பரேட் வங்கிகளும் இணைக்கப்படுகின்றன.
இந்தியாவில் கரோனா பாதிப்பு
மார்ச் 6: இந்தியாவில் கரோனா வைரஸால் (கோவிட்-19) 39 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸால் இதுவரை உலகில் 98,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,330 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.