Published : 18 Feb 2020 11:07 AM
Last Updated : 18 Feb 2020 11:07 AM

தேர்வுக்குத் தயாரா? - களைப்பையும் சலிப்பையும் வெல்வது எப்படி?

முகமது ஹுசைன்

எவ்வளவுதான் பிடித்த விளையாட்டாக இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அது களைப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தும். விளையாட்டுக்கே இந்த நிலை என்றால், படிப்பையும் தேர்வுக்கான தயாரிப்பையும் பற்றிக் கேட்கவா வேண்டும்? அதற்காக, விளையாட்டை நிறுத்துவதுபோல் தேர்வு நேரத்தில் படிப்பைப் பாதியில் நிறுத்த முடியாதே! அதற்குப் பதிலாக உடலுக்கும் மனத்துக்கும் புத்துணர்வூட்டக்கூடிய சில எளிய வழிகளைப் பின்பற்றலாம்.

படிப்பை ஓரங்கட்டி வையுங்கள்

பெருமளவு படித்த நாளின் மாலையில் தேர்வை, படிப்பை மறந்து, உங்களுக்கு விருப்பமான முறையில் அதைச் செலவிடுங்கள். அப்போது கூடுமானவரை மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, குழுவாக விளையாடுவது, பூங்காவில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, நல்ல இசையைக் கேட்டவாறு படுத்து இளைப்பாறுவது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

விடுமுறையை எண்ணி மகிழ்வது

படிப்புக்கு அவ்வப்போது சிறிது இடைவெளி கொடுத்து, விடுமுறையை எப்படிக் கொண்டாடலாம் என்று விரிவாகத் திட்டமிட்டு மகிழுங்கள். ஒவ்வொரு நாள் முடியும்போதும் விடுமுறைக்கு இன்னும் எத்தனை நாட்கள் மிச்சமுள்ளன என்று எண்ணி மகிழுங்கள். ஆனால், படிக்கும் நேரத்தில் முழுக் கவனத்துடன் படியுங்கள்.

படிக்கும் அறையை மாற்றுங்கள்

உங்களுடைய மனத்தை ஏமாற்றுவது மிகவும் எளிது. எனவே, தினமும் நீங்கள் படிக்கும் இடத்தையோ அறையையோ மாற்றிக்கொள்ளுங்கள். இந்த மாற்றத்தில் உங்களுடைய மனம் மயங்கிச் சலிப்பு நீங்கிப் புத்துணர்வு பெறும்.

சிறிது தூங்கலாமா?

மதிய சாப்பாட்டுக்குப் பின்னர் சிறிது நேரம் தூங்குங்கள். ஆனால், இந்த நேரம் முப்பது நிமிடத்தைத் தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில் முதலாளி முதல் தொழிலாளிவரை இவ்வழக்கத்தை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். சிறு துயில் அளிக்கும் ஆற்றல் காரணமாகத்தான் அது ‘power nap’ என்று அழைக்கப்படுகிறது.

குஷியாகக் குளியுங்கள்

படிக்கும் நாட்களில் காலையும் மாலையும் குளியுங்கள். காலைக் குளியல் அன்று படிப்பதற்கும் மாலைக் குளியல் அடுத்த நாள் படிப்பதற்கும் புத்துணர்வு அளிக்கும். நீண்ட தலைமுடி கொண்டவர்கள் மாலையில் தலைக்குக் குளிப்பதைத் தவிர்க்கலாம்.

கதை கேளுங்கள்

வீட்டில் தாத்தா - பாட்டியிடமோ அப்பா – அம்மாவிடமோ அவர் களுடைய சிறுவயது கதைகளை கூறச் சொல்லிச் சிறிது நேரம் தூங்கும்முன் கேளுங்கள். அது அவர்களுடைய படிப்பு சம்பந்தமான கதையாக இருந்தால் அங்கிருந்து ஓடிவிடுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x