

மேலாண்மை உயர்கல்வி என்பது இளம் தலைமுறையினர் மத்தியில் எப்போதும் தனி ஈர்ப்பைப் பெற்றிருப்பது. இளநிலைப் படிப்புகளான கலை, அறிவியல் மட்டுமன்றிப் பேரளவிலான பொறியியல் பட்டதாரிகளும் மேலாண்மை உயர்கல்வியில் சேர்ந்துவருகின்றனர்.
எம்.பி.ஏ. படிப்புகளில் விருப்பத் தேர்வாக மார்க்கெட்டிங், மனிதவள மேம்பாடு, இண்டர்நேஷனல் பிசினஸ், ஆபரேஷன்ஸ் மேனேஜ்மென்ட் எனப் பல பிரிவுகள் முன்னணியில் இருந்தாலும், ஏராளமானோரின் தேர்வாக ‘ஃபினான்ஸ்’ உள்ளது. ஆனால், நவீன மேலாண்மைக் கல்வியானது, புதிய மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் விதமாய் ‘ஃபினான்ஷியல் அனலிடிக்ஸ்’, ‘ஃபின்டெக்’ போன்ற நிதி சார்ந்தவற்றிலும் மையம் கொண்டுள்ளது.
மாறும் மேலாண்மைக் கல்வி
கடந்த தலைமுறை நிறுவனங்களின் நிர்வாக உயர்பொறுப்புகளில், துறைசார் அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டுமே அலங்கரித்தனர். ஆனால், தாராளமயமாதலில் மாற்றம் கண்ட பொருளாதார - தொழில்துறையின் போக்கால், நிர்வாகிகளின் தேவை அதிகரித்தது. எம்.பி.ஏ முடித்த இளைஞர்கள் அந்தப் பொறுப்புகளை ஏற்று கைநிறையச் சம்பாதித்தனர். மூத்தவர்களின் சிந்தனைகளை மட்டுமே கண்ட நிர்வாகத் துறை, இளம் ரத்தங்களால் புது வேகம் கண்டது. இதன் தொடர்ச்சியாக எம்.பி.ஏ. முடித்தவர்களுக்கான எதிர்பார்ப்பு அனைத்துத் துறைகளிலும் எகிறத் தொடங்கியது.
அசோசம் அறிக்கை ஒன்றின் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளில் எம்.பி.ஏ. கல்லூரிகளின் எண்ணிக்கையும் அவற்றின் மாணவர் சேர்க்கையும் மூன்று மடங்காக உயர்ந்துள்ளன. ஆனால், அதிகளவிலான மேலாண்மைப் பட்டதாரிகளால் அவர்களில் சுமார் 10 சதவீதத்துக்கும் குறைவானோருக்கு மட்டுமே தகுதியான பணி வாய்ப்புகள் கிட்டின. ஏனைய மேலாண்மைப் பட்டதாரிகள், கிடைத்த வேலையைப் பார்த்துச் சமாளிக்கிறார்கள்.
தரமான கல்வி நிறுவனம்
எனவே, மேலாண்மை உயர்கல்வி படிக்க விரும்பும் பட்டதாரிகள் முதலில் தங்களுடைய ஆர்வத்தை உறுதிசெய்ய வேண்டும். அதன் பின்னர் தரமான நிறுவனங்களை நாடி எம்.பி.ஏ. படிப்பைத் தொடங்க வேண்டும். எம்.பி.ஏ.வில் என்ன சேரலாம் என்பதிலும் கவனம் தேவை. அடுத்து வரும் ஆண்டுகளில் அதிகத் தேவை, எதிர்பார்ப்புள்ள புதிய நிதிசார் படிப்புகளைத் தேர்வுசெய்யலாம்.
அந்த வகையில் ஃபினான்ஷியல் அனலிடிக்ஸ், ஃபின்டெக் போன்றவற்றைத் தங்களுடைய விருப்பத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து முடிவுசெய்யலாம்.
தரவு சூழ் உலகு
தற்போதைய உலகம் தரவுகளின் அடிப்படையில் இயங்குகிறது. அந்தத் தரவுகளில் நிதி சார்ந்தவை முக்கிய இடம்பெறுகின்றன. நிறுவனமானாலும், சமூக அமைப்பானாலும் இந்த நிதிசார் தரவுகளை அலசி ஆராய்ந்து, சரியானவற்றைத் தொகுத்து தேவையான நோக்கங்களுக்காக பயன்படுத்தி வெற்றி காண்பது அவசியமாகிறது. மிகப்பரந்த தரவுகளைக் கொண்ட நிதிசார் ஆய்வும், தொழில்நுட்பமும் இந்த இடத்தில் முக்கியமாகின்றன.
உதாரணத்துக்கு, நுகர்வோரின் வாங்கும் திறனை அவர்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் அடிப்படையில் கணக்கிடுவது, சமூக ஊடகங்களின் வாயிலாக நுகர்வோரின் எதிர்பார்ப்புகளை மோப்பம் பிடிப்பது, குறிப்பிட்ட கால இடைவெளியில் விற்பனையாகும் பொருட்களின் அடிப்படையில் உற்பத்தி - சந்தையை இணைக்கும் சமன்பாடுகளைக் கணிப்பது உள்ளிட்டவை மலையளவு தரவுகளைக் கொண்டிருக்கும். மேலாண்மை நுட்பங்களின் அடிப்படையில் இந்தத் தரவுகளை ஆராய்ந்தறிந்து முடிவுகளை எட்டுவதற்கு ஃபினான்ஷியல் அனலிடிக்ஸ், ஃபின்டெக் பிரிவுகள் உதவிகரமாக அமையும்.
ஏற்றம் தரும் மாற்றம்
கிரிப்டோகரன்சி பயன்பாடுகள், பிளாக்செயின், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பரிந்துரைகள், பங்குசந்தை - காப்பீட்டுத் துறையை ஆக்கிரமிக்க உள்ள நவீன மாற்றங்கள், தனிநபர் முதலீடு - சேமிப்புக்கான புதிய போக்குகள் ஆகியவற்றைக் கையாளவும் ஆராயவும், இந்தத் துறைகள் உதவ இருக்கின்றன. வழக்கமான நிர்வாக மேலாண்மைப் பாடங்களுடன், நிதி - பொருளாதாரம் தொடர்பான புதிய பாடங்களைத் தற்போதைய எம்.பி.ஏ. படிப்புகள் உள்ளடக்கி இருக்கும்.
பணிசார் தகுதிகளை மேம்படுத்த
தரவுகளைக் கையாள்வதற்கான கணினி அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த அறிவும் கூடுதல் அனுகூலமாக அமையும். எனவே, பொறியியலுக்குப் பின்னர் எம்.பி.ஏ. படிக்கும் கனவில் உள்ளவர்கள், இந்த நிதிசார் துறைகளையும் பரிசீலிக்கலாம். வணிகவியல், பொருளாதாரம் உள்ளிட்ட இதர கலைப்படிப்புகளை முடித்து எம்.பி.ஏ. படிப்பில் சேருபவர்கள், கூடுதலாக அடிப்படைக் கணினி அறிவை வளர்த்துக்கொள்வது அவசியம். விருப்பமுள்ளவர்கள் எக்ஸெல் பயன்பாடு, நிரல்களை வடிவமைப்பது எனத் தொடங்கி டீப் லேர்னிங், மெஷின் லேர்னிங் - பிக் டேட்டா வரையிலான கூடுதல் அறிவை வளர்த்துகொள்வதும் பணிசார் தகுதிகளை அதிகரிக்கும்.
புதிய கைகோப்பு
இந்த வகையில் தொழில்நுட்பமும் மேலாண்மையும் கைகோக்கும்போது புதிய தலைமுறைக்கான நிர்வாகத் திறன்கள் கூர்மைபெறுகின்றன. வளாகக் கல்விக்கு அப்பால் தனியாகப் படிப்பது மட்டுமன்றி, வாய்ப்பிருந்தால் எலக்டிவ் தாள்களில் ஒன்றாக இது போன்ற கணினி அறிவியல் சார்ந்தவற்றைத் தேர்வுசெய்வதும் எம்.பி.ஏ.வில் சாத்தியமாகும்.
ஏற்கெனவே எம்.பி.ஏ. முடித்தவர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களின் வாயிலாகவும் மேற்காணும் கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ளலாம். ஃபினான்ஷியல் அனலிடிக்ஸ் - ஃபின்டெக் படிப்பவர்களும், புதிய துறையின் வேகமான மாற்றங்களுக்கு ஈடுகொடுத்துத் தங்களை மேம்படுத்திக்கொண்டே இருப்பதும் அவசியம்.
| ஆன்லைனிலும் படிக்கலாம் ஆன்லைன் மூலமும் ஃபினான்ஷியல் அனலிடிக்ஸ், ஃபின்டெக் படிப்புகளைப் பெற முடியும். மெஷின் லேர்னிங் வாயிலாக பங்குச்சந்தை கணிப்புகள், பயன்பாடுகள், ’பைதான்’ - ’ஆர்’(R) மூலம் நிதிசார் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் நடைமுறைப் பயன்பாடுகளை அறிய இவை உதவும். எம்.பி.ஏ. பட்டதாரிகள் மட்டுமன்றி, பிளஸ் 2வுக்குப் பின்னர் ஏதேனும் ஒரு பட்டம் அல்ல, பட்டயம் முடித்தவர்களும் ஆன்லைன் படிப்புக்குத் தகுதிபெறுகிறார்கள். கட்டணமாக ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம்வரை வசூலிக்கிறார்கள். ஜாம்ஷெட்பூரில் இயங்கும் சேவியர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட் போன்ற பாரம்பரியமிக்க தனியார் மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் இந்த ஆன்லைன் படிப்புகளை வழங்குகின்றன. அருகில் தரமான கல்வி நிறுவனம் இல்லாதவர்களும் உயர்கல்வி, போட்டித்தேர்வு அல்லது பணியின் பொருட்டு முழு நேரமாகச் சிக்கிக்கொண்டவர்களும் இந்த ஆன்லைன் அனுகூலங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். |