

தொகுப்பு: கனி
ஜன.27: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் மேற்கு வங்கச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவை திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து மேற்கு வங்கம் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
வெளியுறவுத் துறை புதிய செயலர்
ஜன. 29: நாட்டின் வெளியுறவுத் துறையின் புதிய செயலராக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்கலா பதவியேற்றார். வெளியுறவுத் துறை செயலராக இருந்த விஜய் கோகலேவின் பதவிக்காலம் நிறைவடைந்ததையொட்டி தற்போது புதிய செயலராக ஹர்ஷ் வர்தன் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும்.
உலகளாவிய சுகாதார நெருக்கடி
ஜன.30: கரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய சுகாதார நெருக்கடியை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலகத்துக்கு முக்கியமான ஆபத்தாக கரோனா வைரஸ் உருவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. யாரும் சீனாவுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அனுமதி
ஜன.30: சபரிமலை உள்ளிட்ட பல்வேறு மத வழிபாட்டுத் தலங் களுக்குப் பெண்கள் செல்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் பாலின சமத்துவமின்மை குறித்த வழக்குகள் அனைத்தையும் இந்த அமர்வு பிப்.3 முதல் விசாரிக்கத் தொடங்கியுள்ளது.
போக்குவரத்து நெரிசலில் முதலிடம்
ஜன.30: உலகில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நகரங் களில் பெங்களூரு முதலிடத்தில் இருக்கிறது. ‘2019 உலகளாவிய போக்குவரத்து நெரிசல் பட்டியலை’ நெதர்லாந்தைச் சேர்ந்த டாம்-டாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 57 நாடுகளைச் சேர்ந்த 416 உலக நகரங்கள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில், முதல் பத்து இடங்களில் நான்கு இந்திய நகரங்கள் (மும்பை, புனே, டெல்லி) இடம்பெற்றுள்ளன.
குறைந்த செலவில் 500 ஏவுகணைகள்
ஜன.31: ரூ.30-35 கோடி செலவில், 500 கிலோகிராம் எடையில் செயற்கைக்கோள்களைத் தாங்கிச்செல்லும் ஏவுகணைகளை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. வரும் நான்கு மாதங்களுக்குள் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. அடுத்த ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின்கீழ் 500 பிஎஸ்எல்வி ஏவுகணைகள் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியேறியது பிரிட்டன்
ஜன. 31: ஐரோப்பிய யூனியனிலிருந்து 47 ஆண்டுகளுக்குப் பிறகு, வெளியேறியிருக்கிறது பிரிட்டன். 2016-ல் கொண்டுவரப்பட்ட பிரெக்ஸிட் வாக்கெடுப்பு, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனிலிருந்த இரண்டாம் பெரிய பொருளாதார நாடான பிரிட்டன் வெளியேறியிருப்பது உலகில் பல்வேறு தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் வெளியீடு
பிப்.1: 2020-21-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த நிதியாண்டில் கல்விக்காக ரூ. 99,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கல்வித் துறையில் அந்நிய நேரடி முதலீடும் அறிமுகமாகவிருக்கிறது. தேசிய காவல்துறை பல்கலைக்கழகம், தேசிய தடவியல் பல்கலைக்கழகம் ஆகியவை புதிதாகத் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.