

தொகுப்பு: கனி
ஜன. 20: ஆந்திரப் பிரதேசத்துக்கு மூன்று தலைநகரங்களை உருவாக்கு வதற்கான மசோதா அம்மாநிலச் சட்டப்பேரவையின் கீழவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சட்டபேரவையின் மேலவையில் நிறைவேற்றப் படவில்லை.
விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும், அமராவதியைச் சட்டப்பேரவைத் தலைநகராகவும், கர்னூலை நீதித்துறை தலைநகராகவும் மாற்ற வழிவகை செய்யும் வகையில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை
ஜன. 20: சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, 2020-ம் ஆண்டுக்கான ‘உலக வேலைவாய்ப்பு, சமூகப் பார்வை போக்குகள்’ அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், 2020-ல் உலகளாவிய வேலை வாய்ப்பின்மையின் எண்ணிக்கை 25 லட்சம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உலகில் 18.8 கோடிப் பேர் வேலைவாய்ப்பில்லாமல் இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஜனநாயகத்தில் பின்தங்கிய இந்தியா
ஜன. 22: 2019-ம் ஆண்டுக்கான ஜனநாயகப் பட்டியலைப் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு (EIU) வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியா, கடந்த ஆண்டைவிடப் பத்து இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு 51-ம் இடத்தில் இருக்கிறது.
இடைக்காலத் தடை இல்லை
ஜன.22: குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தது. இந்த மசோதா தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
விண்ணுக்குச் செல்லும் மனித ரோபோ
ஜன. 22: ‘ககன்யான்’ திட்டத்துக்கு முன்னோட்டமாக முதல்முறையாக ‘வியோம் மித்ரா’ என்னும் பெண் மனித ரோபாட் விண்ணில் செலுத்துவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ‘வியோம் மித்ரா’ என்றால் வானில் இருக்கும் நண்பன் என்று அர்த்தம். 2020 டிசம்பர், 2021 ஜூலை என இரண்டு முறை இந்த மனித ரோபாட் பரிசோதனைக்காக விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது.
கிரேக்க நாட்டின் புதிய அதிபர்
ஜன.22: கிரேக்க நாட்டின் முதல் பெண் அதிபராக கத்ரீனா சக்கெல்லரோபோலு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரேக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 294 பேரில் 261 பேரின் வாக்குகளைப் பெற்று அவர் அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல், அரசியலமைப்புச் சட்ட நிபுணரான இவர், வரும் 2020, மார்ச் 13 அன்று கிரேக்க அதிபராகப் பதவியேற்கிறார்.
உலகளாவிய திறன் போட்டி பட்டியல்
ஜன.22: 2020, உலகளாவிய திறன் போட்டி பட்டியலை உலகப் பொருளாதா அமைப்பு (WEF) வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டைவிட எட்டு இடங்கள் முன்னேறி, தரவரிசையில் 72-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
நீட்: குறையும் அரசுப் பள்ளி மாணவர்கள்
ஜன. 24: தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு (நீட்) விண்ணப்பிக்கும் தமிழ்நாட்டின் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கடுமையாகச் சரிந்துள்ளது. 2019-ல் 17,630 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 7,000 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கின்றனர்.