

யாழினி
பள்ளி, கல்லூரி ஆண்டு இறுதித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் எல்லாம் விரைவில் நடைபெறவிருக்கின்றன. எப்படிப்பட்ட தேர்வாக இருந்தாலும் அதைப் பயமின்றி, திறமையுடன் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம். தேர்வுகளைத் திறமையுடன் எதிர்கொள்வதற்கான பல்வேறு புதுமையான உத்திகளை எளிமையாகக் கற்றுக்கொடுக்கிறது ‘சேட்சாட்’ (ChetChat) என்னும் யூடியூப் அலைவரிசை. 2015-லிருந்து யூடியூப்பில் இயங்கிவரும் இந்த அலைவரிசையைக் கல்வியாளர் சேத்னா வசிஷ்ட் நிர்வகித்துவருகிறார்.
இந்த அலைவரிசையில் தேர்வுகளில் எளிதாக வெற்றிபெறுவதற்கான உத்திகளுடன், மாணவர்கள் வெற்றிகரமான பணிவாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறார் சேத்னா. அத்துடன், துறைசார் சிறப்பு நிபுணர்களுடன் கல்வி விவாத நிகழ்ச்சிகளையும் இவர் நடத்துகிறார்.
இருநூற்றுக்கும் மேற்பட்ட காணொலிகள் இடம்பெற்றிருக்கும் இந்த அலைவரிசை, இந்திய மாணவர்களிடம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. தேர்வுக்குப் படிப்பதற்கான அன்றாட நேர அட்டவணையைத் தயாரிப்பதில் தொடங்கி, தேர்வுக்குக் கடினமாகப் படிப்பதைவிடத் திறமையாகப் படித்து வெற்றிபெறுவது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு சுவாரசியமான ஆலோசனைகள் இந்த அலைவரிசையில் இடம்பெற்றிருக்கின்றன.
‘நீட்’, ‘சாட்’, ‘யுபிஎஸ்சி’, ‘கேட்’, ‘ஜேஇஇ’ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராவதற்கான விரிவான ஆலோசனைகள் இந்த அலைவரிசையின் சிறப்பம்சங்களாக உள்ளன. அத்துடன் கனடா, பிரிட்டன், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மேற்படிப்பை எப்படித் தொடரலாம் என்பதற்கான துறைசார் நிபுணர்கள், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களின் வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் அடங்கிய காணொலிகளும் இடம்பெற்றுள்ளன. பத்து நிமிடத்திலிருந்து 30 நிமிடங்கள் வரையிலான காணொலிகளில் ஒவ்வொரு தலைப்பும் விரிவாக, எளிமையாக விளக்கப்பட்டிருக்கிறது.
தேர்வுகள், மேற்படிப்பு வழிகாட்டுதல்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு துறையில் தொழில்முனைவோர் ஆவதற்கான சிறப்பு ஆலோசனையும் இந்த அலைவரிசையில் இடம்பெற்றிருக்கிறது. ‘ஆங்கிலத்தில் எளிதாக உரையாடுவது எப்படி?’, ‘பணி நேர்காணலில் வெற்றிபெறுவது எப்படி?’, ‘கல்லூரிக்கு எந்த உடையை அணிந்து செல்லலாம்?’, ‘தோல்வி ஏன் முக்கியம்?’, சமூக ஊடகங்களில் தொழிலை விளம்பரப்படுத்துவதற்கான ஆலோசனைகள் என்பது போன்ற தலைப்புகளிலும் இந்த அலைவரிசையில் காணொலிகள் இடம்பெற்றுள்ளன.
‘சேட்சாட்’ சேனலைக் காண: https://bit.ly/3aGiNtN