சேதி தெரியுமா? - உணவு விலையேற்றம் அதிகரிப்பு

சேதி தெரியுமா? - உணவு விலையேற்றம் அதிகரிப்பு
Updated on
2 min read

தொகுப்பு: கனி

ஜன.13: உணவு விலையேற்றம் 2019, டிசம்பரில் 14.12 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக மத்தியப் புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2019, நவம்பரில் 10.01 சதவீதமாக இருந்த உணவு விலையேற்றம் ஒரே மாதத்தில் நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

மரண தண்டனை ரத்து

ஜன.13: முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரஃப்புக்குச் சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனை அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்த லாகூர் உயர் நீதிமன்றம், அந்தத் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநர்

ஜன. 14: இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக மைக்கேல் தேவபிரதா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மூன்று ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடிப்பார் என்று அமைச்சரவை நியமனக் குழு தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சார்யா ஜூலை மாதம் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தற்போது புதிய துணை ஆளுநராக மைக்கேல் தேவபிரதா நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகளாவிய இடர்கள் அறிக்கை

ஜன.15: உலகப் பொருளாதார அமைப்பு (WEF), உலகளாவிய இடர்கள் அறிக்கையில் பருவநிலை மாற்றம், புவிசார் அரசியல் கொந்தளிப்பு, அதிகரித்துவரும் பொருளாதாரத் தேக்கம், பாரபட்சமான டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி, மருத்துவ அமைப்புகளின் மீதான ஆழுத்தம் ஆகிய இடர்களை வரும் ஆண்டுகளில் உலக நாடுகள் சந்திக்கும் என்று அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் புதிய பிரதமர்

ஜன.15: ரஷ்யாவின் பிரதமராக இருந்த டிமிட்ரி மேத்வதேவ் தன் பதவியை ராஜினாமா செய்தார். மேத்வதேவின் அமைச்சரவை தன் இலக்குகளை அடையத் தவறிவிட்டதாக அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் புதிய பிரதமராக மிகைல் மிஷ்ஹுஸ்டின் பெயரை ரஷ்ய அதிபர் புதின் முன்மொழிந்துள்ளார்.

பா.ஜ.க.வின் தேர்தல் நிதி பத்திரங்கள்

ஜன. 15: 2018-19-ம் ஆண்டில் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பா.ஜ.க., ரூ. 1,450 கோடியை நிதியாகப் பெற்றுள்ளதாக ஜனநாயகச் சீர்திருத்த அமைப்பு (ADR) தெரிவித்துள்ளது. 2018-19-ல் பா.ஜ.க., மொத்தமாக ரூ. 2,410 கோடியை நிதியாகப் பெற்றுள்ளது. காங்கிரஸ் மொத்தமாக ரூ. 918 கோடியை நிதியாகப் பெற்றுள்ளது. இதில் தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் ரூ. 383 கோடியை நிதியாகப் பெற்றுள்ளது.

பாஸ்போர்ட்: ஜப்பான் முதலிடம்

ஜன. 16: உலகின் வலுவான பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலை ‘ஹென்லே’ வெளியிட்டுள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்புகளின் (IATA) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 199 நாடுகள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில் இந்தியா 84-ம் இடத்தில் உள்ளது. சிங்கப்பூர், ஜெர்மனி ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன.

ஜி-சாட் 30 வெற்றி

ஜன.17: இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கைக் கோள் ஜி-சாட் 30 தென் அமெரிக்காவின் கோரோவ், கினியா விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நாட்டின் தொலைக்காட்சி, தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக இந்தச் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 3,357 கிலோ எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோள் 15 ஆண்டு ஆயுட்காலத்தைக் கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in