Published : 14 Jan 2020 08:44 am

Updated : 14 Jan 2020 08:44 am

 

Published : 14 Jan 2020 08:44 AM
Last Updated : 14 Jan 2020 08:44 AM

விண்ணைத் தொட்ட இஸ்ரோ அறிவியலாளர்கள்

isro-scientists

எஸ்.எஸ்.லெனின்

மயில்சாமி அண்ணாதுரை:

கோவை மாவட்டம் கோதாவாடி கிராமத்தில் பிறந்தவர் மயில்சாமி அண்ணாதுரை. தமிழ்வழியில் பள்ளிக் கல்வி பயின்று, பொறியியலில் முதுநிலைப் பட்டமும் பல்வேறு முனைவர் பட்ட ஆய்வுகளும் மேற்கொண்டவர். இஸ்ரோவில் அறிவியல் ஆய்வாளராக இவருடைய பணி தொடங்கியது. ‘இன்சாட்’ திட்டங்களின் மேலாளர், ‘சந்திரயான்-1’, ‘மங்கள்யான்’ விண்கலங்களுக்கான திட்ட இயக்குநர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார். 2018 ஜூலை வரை பணியாற்றியவர், இஸ்ரோவின் இயக்குநராக ஓய்வுபெற்றார்.

ந.வளர்மதி:

அரியலூரில் பிறந்து தமிழ்வழியில் பள்ளிப் படிப்பைப் பயின்ற வளர்மதி, பொறியியலில் முதுநிலைப் பட்டம் முடித்து, 1984இல் இஸ்ரோ பணியில் சேர்ந்தார். 2011ஆம் ஆண்டில் ‘ஜிசாட்’ 12 பணியின் திட்ட இயக்குநர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2015இல் அப்துல் கலாம் நினைவாகத் தமிழக அரசு வழங்கத் தொடங்கிய விருதைப் பெற்றார்.

அருணன்:

திருநெல்வேலியில் பிறந்த அருணன் விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளிப்படிப்பை நிறைவுசெய்தார். கோவை தொழில்நுட்ப நிறுவனத்தில் இயந்திரப் பொறியியல் முடித்து, திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி நிலையத்தில் 1984இல் சேர்ந்தார். வெற்றிகரமான ‘மங்கள்யான்’ திட்டத்தின் திட்ட இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

நம்பி நாராயணன்:

நாகர்கோவிலில் பிறந்த நம்பி நாராயணன், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியலில் பொறியியல் முடித்தார். இஸ்ரோ அறிவியலாளராகப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், கிரையோஜெனிக் இன்ஜினுக்கான திரவ எரிபொருள் நுட்பத்தை இந்தியாவில் உருவாக்கினார். ஆனால், அதை பாகிஸ்தானுக்கு விற்க முயன்றதாகக் கைதானார். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் சி.பி.ஐ. விசாரித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார்.

ஆ.சிவதாணுப் பிள்ளை:

நாகர்கோவிலில் பிறந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொறியியலும் ஹார்வார்டு வணிகப் பள்ளியில் மேற்படிப்பும் பயின்று, புனே சாவித்திரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் முடித்தார். இவருடைய 40 ஆண்டு பணி அனுபவம் இஸ்ரோ மட்டுமன்றி டி.ஆர்.டி.ஓ., பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் என நீள்கிறது. விக்ரம் சாராபாய், சதீஷ் தவான், அப்துல்கலாம் என விண்வெளி ஆய்வின் தலைமகன்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

விக்ரம் சாராபாய்:

அகமதாபாத்தில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற விக்ரம் சாராபாய், ‘இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை’.சுதந்திர இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்து இஸ்ரோவின் தாய் நிறுவனத்தை நிறுவியவர். இவருடைய மறைவுக்குப் பின்னர் விண்ணுக்கு ஏவப்பட்ட நாட்டின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டாவை வடிவமைத்ததில், இவருடைய பங்கு முக்கியமானது.

சதீஷ் தவான்:

ஸ்ரீநகரில் பிறந்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உயர்கல்வி பயின்றவர். விக்ரம் சாராபாயைத் தொடர்ந்து இஸ்ரோ அமைப்பை கட்டமைத்ததில் முக்கியப் பங்குவகித்தார். 1972இல் இஸ்ரோ தலைவராகவும் பொறுப்பேற்று, செயற்கைக்கோள் திட்டமிடலில் கல்வி, தொலைத்தொடர்புக்கு முக்கியத்துவம் தந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் ஸ்ரீஹரிகோட்டா செயற்கைக்கோள் ஏவும் மையத்துக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது.

கி.கஸ்தூரி ரங்கன்:

திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட கஸ்தூரி ரங்கன், கேரளத்தின் எர்ணாகுளத்தில் பிறந்து, பள்ளிக் கல்வியை முடித்தார். மும்பைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுகலைப் பட்டமும் குஜராத் பல்கலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்டமும் பெற்றார். இஸ்ரோவில் இன்சாட், ஐ.ஆர்.எஸ்., பாஸ்கரா எனப் பல வரிசை செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.வி ஏவூர்திகள் பலவற்றில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். இஸ்ரோ தலைவராகப் பத்தாண்டுகள் பணியாற்றியுள்ளார்.

முத்தையா வனிதா:

சென்னையை சேர்ந்த முத்தையா வனிதா, கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்று இளநிலைப் பொறியாளராக இஸ்ரோவில் சேர்ந்தார். முப்பதாண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்துவரும் வனிதா, சந்திரயான்-2 திட்ட இயக்குநராக பணியாற்றியதன் மூலம், இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் - கோள்களுக்கு இடையிலான திட்டப் பணிகளை முன்னெடுத்த முதல் பெண் ஆகிய சிறப்புகளுக்கு உரியவரானார். முன்னதாக இஸ்ரோ செயற்கைக்கோள் மையத்தின் பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளை வகித்துள்ள வனிதா, மங்கள்யான் திட்டத்திலும் பங்காற்றியுள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

இஸ்ரோ அறிவியலாளர்கள்ISRO scientistsஅறிவியலாளர்கள்மயில்சாமி அண்ணாதுரைஅருணன்ந.வளர்மதிநம்பி நாராயணன்ஆ.சிவதாணுப் பிள்ளைவிக்ரம் சாராபாய்:சதீஷ் தவான்கி.கஸ்தூரி ரங்கன்முத்தையா வனிதா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author