சேதி தெரியுமா?

சேதி தெரியுமா?
Updated on
2 min read

தொகுப்பு: கனி

ஓய்வுபெற்றார் இர்ஃபான்

ஜன.4: கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் 2003 முதல் விளையாடிவரும் இவர், இதுவரை 29 டெஸ்ட் போட்டிகள், 120 ஒரு நாள் போட்டிகள், 24 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.

பல்கலைக்கழகத்தில் வன்முறை

ஜன.5: டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் இந்து ரக்ஷா தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள், முகமூடி அணிந்து வந்து பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள்மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மாணவர்களும் பேராசியர்களும் படுகாயம் அடைந்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த வன்முறைக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த வன்முறைக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தரவுத் தொடர் செயற்கைக் கோள்கள்

ஜன.6: இந்தியத் தரவுத் தொடர் செயற்கைக்கோள் அமைப்பை (IDRSS) உருவாக்குவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்தப் புதிய தரவுத் தொடர் செயற்கைக்கோள்கள், இந்திய செயற்கைக்கோள்களுடன் தொடர்பில் இருப்பதற்காக வடிவமைக்கப்படுகின்றன. 2022-ல் ‘ககன்யான்’ திட்டத்துக்காக விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் பூமியுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதற்கு இந்தத் தரவுத் தொடர் செயற்கைக்கோள் அமைப்பு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: தேர்தல் அறிவிப்பு

ஜன.6: டெல்லியின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 8 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11 அன்று நடைபெறவிருக்கிறது. 70 சட்டப்பேரவை இடங்களுக்கு நடக்கும் இந்தத் தேர்தலில் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.

உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம்

ஜன.7: மத்திய புள்ளியியல் அலுவலகம், 2020-ம் நிதியாண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி (GDP) 5 சதவீதமாக இருக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. உற்பத்தித் துறை எதிர்கொண்டுவரும் சரிவே, உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சிக்குக் காரணம் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 2018-19-ம் ஆண்டில், 6.9 சதவீதத்தில் வளர்ச்சியடைந்த உற்பத்தித்துறை, 2019-20-ம் ஆண்டில் 2 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது.

2019: ஏழாம் வெப்பமான ஆண்டு

ஜன.7: சர்வதேச வானிலை அமைப்பு (IMO), 2019-ம் ஆண்டின் ‘பருவநிலை அறிக்கை’யை வெளியிட்டுள்ளது. 2019-ல், பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் 1,659 பேர் உயிரிழந்திருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. 1901-ம் ஆண்டுக்குப் பிறகு, ஏழாம் வெப்பமான ஆண்டாக 2019 அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரியில் மத்திய பட்ஜெட்

ஜன.9: 2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் காலக் கூட்டத்தொடர், ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரையும் மார்ச் 2 முதல் ஏப்ரல் 3 வரையும் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி தன் டிவிட்டர் பக்கத்தில் மக்களிடம் கோரியுள்ளார்.

உலகப் பொருளாதார வளர்ச்சி

ஜன.9: உலகப் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கியின் ‘உலகளாவிய பொருளாதார வளர்ச்சி’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008-9-ம் ஆண்டில் 3.1 சதவீதமாகப் பொருளாதார வளர்ச்சி கணிக்கப்பட்டிருந்தது.

அதற்குப் பிறகு, இந்த நிதியாண்டில்தான் குறைவான பொருளாதார வளர்ச்சி கணிக்கப்பட்டுள்ளது. வளரும் நாடுகளில் மூன்றில் ஒரு சதவீத நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in