

அறிவன்
அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை ஆய்வுக் கட்டுரைகளாக ஆய்விதழ்களில் வெளியிடப்படுகின்றன.
அறிவியல் மொழியில் துறை சார்ந்த வல்லுநர்களுக்கு மட்டுமே புரியும் வகையில் எழுதப்படும் இதுபோன்ற ஆய்வுகளை, பொதுமக்களுக்குப் புரியும் வகையில் எளிமைப்படுத்தி வெளியிடும் அறிவியல் இதழ்கள் உலகம் முழுக்க இருக்கின்றன. ஆய்வின் உள்ளடக்கம், ஆய்வு முறை, அதன் பயன், அந்த ஆய்வுக்கும் மற்ற துறைகளுக்குமான தொடர்பு ஆகியவை இந்தக் கட்டுரைகளில் விளக்கப்படுகின்றன.
மதிப்பு வாய்ந்த ஆய்விதழ்களில் வெளியிடப்படும் ஆய்வுக்கட்டுரைகள் சம்பந்தப்பட்ட துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் சாத்தியங்களும் உண்டு; அவற்றைக்கொண்டு முன்னெடுக்கப்படும் ஆய்வுகள், அதன் முடிவுகள் ஆகியவற்றுக்கு உலகின் உயரிய விருதான நோபல் பரிசும் கிடைக்கக்கூடும்.
தொகுத்துத் தரும் தளங்கள்
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகளை நாமும் வாசிக்க முடியும். ஆயிரக்கணக்கான ஆய்விதழ்களில் பல்வேறு துறைகள் சார்ந்த நூற்றுக்கணக்கான கட்டுரைகளை தொகுத்து வழங்கும் தளங்கள் பல உள்ளன. JSTOR, ScienceDirect, Scopus, Google Scholar அவற்றுள் சில.
உறுப்பினர் கட்டணம் செலுத்தி உறுப்பினரான பிறகே, இந்தத் தளங்களில் உள்ள ஆய்வுக் கட்டுரைகளை முழுமையாக வாசிக்க முடியும். ஆனால், அனைத்துக் கட்டுரைகளின் ஆய்வுச் சுருக்கம் இலவசமாக வாசிக்கக் கிடைக்கும். மேலும் அந்த ஆய்வுக் கட்டுரையை எழுதிய அறிவியலாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரியும் அறிமுகக் குறிப்பில் இடம்பெற்றிருக்கும். ஆய்வுச் சுருக்கத்தை வாசித்து, மேற்கொண்டு அது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் அவர்களைத் தொடர்புகொண்டு கூடுதல் விளக்கத்தைப் பெற முடியும்.
விவாதத்துக்கு வழி
அறிவியல் மாணவர்கள், ஆர்வலர்கள் இடையே இதுபோன்ற ஆய்வுக்கட்டுரைகள் குறித்து விவாதிக்கும் இணையதளங்கள் உள்ளன; சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த உரையாடல் தொடர்கிறது. தாங்கள் பயிலும் துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகும்போது அதுகுறித்து உலகம் முழுக்க இருக்கும் மற்ற மாணவர்கள், பேராசிரியர்கள், ஆர்வலர்கள் ஆகியோருடன் கலந்துரையாடி அதுகுறித்த புரிதலை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் தளங்களில் அநேகமாக அனைத்துமே உறுப்பினர் கட்டணம் கேட்பவை என்றாலும், அவை அனைத்தும் Open Access, Public Domain என்ற வழிமுறைகள் மூலம் சில கட்டுரைகளை இலவசமாக வாசிக்கவும், தரவிறக்கிக்கொள்ளவும் வழிசெய்கின்றன. இப்படியாக ஆராய்ச்சி அறிவு கொட்டிக் கிடக்கிறது; அள்ளிக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமைதானே!
| சயின்ஸ்டேரெக்ட் |
அறிவியல், மருத்துவ ஆய்வுக்கான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை சயின்ஸ்டேரெக்ட் தளம் வழங்குகிறது. எல்சேவியர் என்ற அறிவியல் பதிப்பகம் 1997-ல் இந்தத் தளத்தைத் தொடங்கியது. 3,500 ஆய்விதழ்கள், 34,000 மின்னூல்கள் ஆகியவற்றில் இருந்து சுமார் 1.2 கோடிக் கட்டுரைகளின் களஞ்சியமாக இந்தத் தளம் விளங்குகிறது. முழுமையான கட்டுரையைப் பெற கட்டணம் செலுத்தி உறுப்பினராக வேண்டும். என்றாலும், ஆய்வுக் கட்டுரையின் சுருக்கம் இலவசமாக வாசிக்கக் கிடைக்கிறது. வலைத்தளம்: https://www.sciencedirect.com/ |
| கூகுள் ஸ்காலர் |
கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கமான கூகுள் ஸ்காலர் என்ற இலவச தேடுபொறி, பல்வேறு துறை சார்ந்த, பல்வேறு வடிவங்களில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளை அணுக வழிசெய்கிறது. 2004-ல் தொடங்கப்பட்ட இந்தத் தளம், மதிப்பிடப்பட்ட இணைய ஆய்விதழ்கள், ஆய்வு நூல்கள், கருத்தரங்கக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள், ஆய்வுச் சுருக்கங்கள், தொழில்நுட்ப அறிக்கை, நீதிமன்றக் கருத்துகள், காப்புரிமைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. மே 2014-ல் 16 கோடியாக இருந்த தரவுகளின் எண்ணிக்கை ஜனவரி 2018-ல் சுமார் 40 கோடியாக உயர்ந்திருக்கிறது. வலைத்தளம்: https://scholar.google.com/ |
| ஜேஸ்டோர் |
ஜேஸ்டோர் என்று பரவலாக அறியப்படும் ‘ஜர்னல் ஸ்டோரேஜ்’ 1995-ல் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் ஆய்விதழ்களின் பிந்தைய இதழ்களைக் கொண்டிருந்த இந்தத் தளம், தற்போது நூல்கள், முதன்மை ஆதாரங்கள், ஆய்விதழ்களின் தற்போதைய இதழ்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. சுமார் 2,000 ஆய்விதழ்கள் இதில் உள்ளன. 2013 கணக்கின்படி, 160 நாடுகளைச் சேர்ந்த 8,000-க்கும் மேற்பட்ட கல்வி, ஆய்வு நிறுவனங்கள் ஜேஸ்டோரைப் பயன்படுத்துகின்றன. ‘ஜேஸ்டோர் டெய்லி’ என்ற வசதி இணையத்தில் உள்ள முக்கியமான அறிவியல் கட்டுரைகளைத் தொகுத்துக் கொடுக்கிறது. வலைத்தளம்: https://www.jstor.org/ |
| ஸ்கோபஸ் |
2004-ல் தொடங்கப்பட்ட ஸ்கோபஸ் தளம், 11,678 ஆய்விதழ்களின் ஆய்வுச் சுருக்கம், ஆய்வுக் கட்டுரைச் சான்றுகள் ஆகியவற்றின் களஞ்சியமாகத் திகழ்கிறது. அவற்றுள் மதிப்பிடப்பட்டு வெளியாகும் (Peer reviewed) ஆய்விதழ்களின் எண்ணிக்கை மட்டும் 34,346. புத்தகத் தொடர்கள், ஆய்விதழ்கள், வணிக ஆய்விதழ்கள் ஆகிய மூன்று ஆதாரங்களை இந்தத் தளம் கொண்டிருக்கிறது. 2016-ல் தொடங்கப்பட்ட ஸ்கோபஸ் சைட்ஸ்கோர் தளம், செயல்பாட்டில் உள்ள 25,000-க்கும் மேற்பட்ட ஆய்விதழ்கள், அறிவியல் கருத்தரங்க முடிவுகள் ஆகியவற்றை இலவசமாக வழங்குகிறது. வலைத்தளம்: https://www.scopus.com/ |