

தொகுப்பு: கனி
நவ. 29: நாட்டின் உள்நாட்டு உற்பத்தி, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவீதமாகச் சரிந்துள்ளது. ஆறு ஆண்டுகளில் இல்லாத சரிவை உள்நாட்டு உற்பத்தி சந்தித்துள்ளது. நாட்டின் பொருளாதாரச் சூழல் கடுமையான அச்சத்தை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
ஞானபீட விருது
நவ. 29: தேசிய அளவில் உயரிய இலக்கிய விருது ஞானபீடம். இதன் 55-ம் விருது மலையாள கவிஞர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள இலக்கியத்துக்கு பங்களித்ததற்காக ஞானபீட விருது பெறும் ஆறாம் நபர் இவர்.
சிறப்புப் பாதுகாப்புக் குழு மசோதா
டிச. 3: சிறப்புப் பாதுகாப்புக் குழு (எஸ்.பி.ஜி.) சட்டத் திருத்த மசோதா, 2019 மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டது. மக்களைவையில் நவ. 27 அன்று நிறைவேற்றப்பட்டது. பிரதமர், அவருடைய குடும்பத் தினருக்குச் சிறப்புப் பாதுகாப்பு வழங்கும் இந்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருத்தத்தின்படி, முன்னாள் பிரதமர்களுக்கு ஐந்து ஆண்டுகள் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும்.
விக்ரம் தரையிறங்கு கலம் கண்டுபிடிப்பு
டிச. 3: சந்திரயான்-2 விண் கலத்தின் விக்ரம் தரையிறங்கு கலம் நிலவில் விழுந்த இடத்தின் படத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. இந்திய பொறியாளர் சண்முக சுப்ரமணியம் ‘விக்ரம் தரையிறங்கு கலத்தின்’ உடைந்த பாகங்களை அடையாளம் கண்டுபிடித்ததாக நாசா தெரிவித்தது.
ப. சிதம்பரத்துக்கு ஜாமீன்
டிச. 4: முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரத்துக்கு ஐ.என்.எக்ஸ். மீடியா நிதி மோசடி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த சிதம்பரம், 106 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
பருவநிலை பாதிப்பில் 5-ம் இடம்
டிச. 4: 2020 உலகளாவிய பருவ நிலை ஆபத்தை எதிர்கொள்ளும் பட்டியலை ‘ஜெர்மன் வாட்ச்’ என்ற சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பருவ நிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாம் நாடாக இந்தியா உள்ளது. முதல் நான்கு இடங்களில் ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, மடகாஸ்கர் ஆகிய நாடுகள் உள்ளன.
வரிவிதிப்பு மசோதா நிறைவேற்றம்
டிச. 5: வரிவிதிப்பு சட்டத்திருத்த மசோதா, 2019 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் டிச. 2 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதா பெரு நிறுவன வருமான வரி விகிதத்தை 22 சதவீதமாகக் குறைத்துள்ளது. அத்துடன், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை 15 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
வெங்காய விலை உயர்வு
டிச. 5: நாடு முழுவதும் வெங்காயம் கடுமையான விலையேற்றத்தைச் சந்தித்துள்ளது. நாட்டின் வேறு சில பகுதிகளில் ரூ. 180-யை எட்டியுள்ளது. வெங்காய விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த 35,000 டன் இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலகின் இளம் பிரதமர்
டிச.8: பின்லாந்து நாட்டின் சமூக ஜனநாயகக் கட்சி முன்னாள் போக்குவரத்து அமைச்சரான 34 வயது சன்னா மரினைப் பிரதமராகத் தேர்வுசெய்தது. இதன்மூலம் அந்நாட்டின் இளம் பிரதமராகவும், உலகின் இளம் பிரதமராகவும் அவர் ஆகியுள்ளார்.