

தொகுப்பு: கனி
அக். 21: சமூக ஊடகச் செயல்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கான சட்டங்கள் 2020 ஜனவரிக்குள் இறுதிச் செய்யப்படும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சமூக ஊடகச் செயல்பாடுகளை ஒழுங்கமைப்பது தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்ற அமர்வு விசாரிக்க உள்ளது.
குறையும் ஓசோன் துளை
அக்.22: அண்டார்டிகா பகுதியில் இருக்கும் ஓசோன் படல மெலிவு 1982-ம் ஆண்டிலிருந்து கண்காணிக்கப்படுகிறது. இந்த மெலிவு, செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் 1 கோடி சதுர கிலோமீட்டராகக் குறைந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பி.எஸ்.என்.எல். - எம்.டி.என்.எல். இணைப்பு
அக்.23: பொதுத்துறை டெலிகாம் நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்.- எம்.டி.என்.எல். ஆகிய இரண்டு நிறுவனங்களையும் இணைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இந்த இரண்டு நிறுவனங்களையும் மீட்பதற்காக ரூ.70,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தொழில் செய்வதற்கு
ஏதுவான நாடுகள்
அக்.23: தொழில் செய்வதற்கு ஏதுவான நாடுகளின் 2019-ம் ஆண்டுப் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. 77-ம் இடத்திலிருந்து 63-ம் இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. நியூசிலாந்து, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்ளிலும்; சீனா 31-ம் இடத்திலும் உள்ளன.
உலகச் செல்வந்தர்கள்
அக். 23: 2019 உலகளாவியச் செல்வ அறிக்கையை ‘கிரெடிட் சுவிஸ்’ நிதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், உலகின் 10 கோடிப் பெருஞ்செல்வந்தர்களைக் கொண்ட நாடாகச் சீனா உருவெடுத்துள்ளது. 9.9 கோடி பெருஞ்செல்வந்தர்களுடன் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது.
இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி
அக்.24: தமிழ்நாட்டின் நடைபெற்ற இடைத்தேர்தலில் விக்கிரவாண்டியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ. ஜான் குமார் வெற்றிபெற்றுள்ளார்.
மகாராஷ்டிரம்: பா.ஜ.க. - சிவசேனா வெற்றி
அக்.24: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பா.ஜ.க. 105, சிவசேனா 56, காங்கிரஸ் 44, என்.சி.பி. 54, சுயேச்சை 29 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.
ஹரியாணா: தொங்குச் சட்டப்பேரவை
அக்.24: 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஹரியாணாவில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. 40 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
இடைத்தேர்தல் முடிவுகள்
அக்.24: நாடு முழுவதும் 17 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 51 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 26 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணியும், 12 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிபெற்றுள்ளன.