

டாக்டர் ஆர். கார்த்திகேயன்
நம் ஒவ்வொரு அணுவிலும் கடந்த காலம் உள்ளது. அதைத் துறக்காமல் மாற்றங்கள் இல்லை. நல்ல நினைவுகள் உரமாகும். நஞ்சான நினைவுகள் ஆழ்மனதில் அழுத்தி வைக்கப்பட்டு, மாறுவேடத்தில் தப்பித்து வந்து தொல்லை கொடுக்கும். தீர்க்கப்படாத நெருக்கடிகள் வாழ்க்கை முழுதும் தொடர்ந்து வரும். நினைவுகள் எண்ணங்களே. ஆனால் நிஜம்போல் உணர வைக்கும் ஆற்றல் கொண்டவை. அதனால்தான் பழைய நினைவுகளை அசைபோடுகையில் மனமும் உடலும் அதற்கு ஏதுவாக மாறிக்கொள்ளும்.
ஞாபகம் வருதே…
பள்ளித் தோழரை சந்தித்த வேளையில் பேச்சு “அந்த காலத்தில..” என்று தொடங்கி பழைய நினைவுகளுக்குப் போகும். நல்ல நகைச்சுவை என்றால் மீண்டும் நினைக்கையில், அது பழைய சம்பவத்தை கூட்டி குறைத்து நினைத்தாலும் ஒரு கொண்டாட்ட நிலைக்கு தயாராகிறது.
“இவன் என்ன பண்ணான் தெரியுமா? எங்க மாஸ்டர்கிட்ட செம்ம அடி வாங்கிட்டே சிரிக்கிறான்!” இப்போது மனம் அடுத்த கட்டத்தில் வரப்போகும் நகைச்சுவைக்குத் தயாராகிவிடும். கண்ணில் நீர் வழிய சிரித்தவாறு தொடரச் செய்யும்.
“அடி வாங்கிட்டு ஏண்டா சிரிக்கறேன்னு கேட்டா... மாஸ்டர் அடிக்கும் போதுதான் கவனிச்சேன். அவர் பேன்ட்டுக்கு ஜிப் போடலைன்னு சொல்லி சிரிக்க ஆரம்பிக்க, மாஸ்டர் திரும்ப வந்து அடிச்சார். அப்பவும் சிரிச்சான்!” இப்போது உடலும் மனமும் சம்பவம் நடந்த வயதுக்கு சென்று, அதை வாழ்ந்து பார்க்கின்றன.
தத்ரூபத் துன்பம்
இதுவே ஒரு துயரச் சம்பவம் என்றாலும், இதேபோல மனமும் உடலும் பழைய நினைவுகளில் வாழ்ந்து பார்க்கும். அதே வலியும் அதே துன்பமும் தற்போது நிகழ்வதாக நினைத்து அந்த வேதனையை வாழ்ந்து பார்க்கும். இன்பத்தைவிடத் துன்பம் தத்ரூபமாக இருக்கும்.
“இப்ப நினைச்சாலும் மனசில அப்படி இருக்கு!” என்று சொல்லக் காரணம், இந்த அனுபவம் மீண்டும் மீண்டும் ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளதுதான். “அத்தனை பேரும் சும்மா இருந்தாங்க. ஒருத்தர்கூட வாயத் திறக்கல. இவங்களுக்கு நான் எவ்வளவு செஞ்சிருப்பேன்?. ‘ஒண்ணும் கிடையாது’ன்னு அவன் சொல்றான். எல்லாரும் பேசாம திரும்பிகிட்டாங்க. அந்த ஆத்திரம்தான் அவங்கள நினைக்கறப்ப எல்லாம் வரும்!” நடந்தது ஒரு முறையாக இருந்தாலும், அதை வாரம் ஒரு முறை முழுவதுமாக வாழ்ந்து பார்த்தால் எப்போது இந்த ரணம் ஆறுவது?
மனித மனதின் சாபம் கற்பனை ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்துவதுதான்! ரொம்ப கவலை என்று யாராவது சொன்னால் ரொம்ப கற்பனை செய்கிறார்கள் என்று பொருள்.
“நடக்காதுன்னு தெரியும். ஒரு வேளை நடந்துட்டா?” என்பது ஒரு `கிளாசிக்’ கவலை. கடந்த காலக் கவலைகளை பட்டியல் போட்டால் தெரியும், 90% அநாவசியமான கற்பனையே என்று.
ஒரு கவலை போனால் அடுத்த கவலை வந்து நிற்கும். ஏனென்றால் அது பழக்கம். கவலையின் தரம் உயரும். ஆனால், பழக்கம் தொடரும். சின்ன கவலைகள் போய் பெரிய கவலைகள் வரும். அதுவே முன்னேற்றம்.
“வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை!” என்ற கண்ணதாசன் பாடலைவிட, இதை அழகாகச் சொல்ல முடியுமா?
குறை ஒன்றுமில்லை
நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தெருவில் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவப் பெண் என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார். மிகுந்த வறுமையுடன் போராடிக்கொண்டிருந்த குடும்பம் அவர்களுடையது.
“எப்படி இருக்கம்மா?” என்று என் அம்மா கேட்க, அந்தப் பெண் சிரித்துக்கொண்டே சொன்ன பதில்: “ஆண்டவன் கிருபையில ரொம்ப நல்லா இருக்கோம். அவருக்கு வேலை கிடைக்கலைன்னு ஒரு சின்ன கவலை. மத்தபடி சந்தோஷமா இருக்கோம்!” குடும்பத்தின் ஆதாரமான வேலையும் நிலையான ஊதியமும் இல்லாததை ‘சின்ன கவலை’ என்று சிரித்துக்கொண்டே சொல்ல என்ன பக்குவம் வேண்டும்!? என்று என் அம்மா சொல்லி சொல்லி சிலாகித்தார்.
நேற்றைய நான், நானில்லை.
இன்று புதிதாய் மலரும் ஆற்றல் உள்ளது என்று நம்புவோர்க்கு நேற்றின் கழிவு தேவையில்லை. அதன் பாடங்கள் மட்டும் போதும். கடந்த காலக் கசப்புகளே இன்றைய இனிமையை சுவைக்க விடுவதில்லை. தன்னையும் பிறரையும் சதா குற்றம் பாராட்டிக்கொண்டிருந்தால், எப்போதுதான் வாழ்வது?
தங்கள் அடைப்பட்ட உணர்வுகளை வெளியேற்றிதான் பலரும் வெற்றி கண்டனர். ‘Release Technique’ மிகவும் ஆற்றல் வாய்ந்தது. கடந்த காலம் என்பது பல ஆண்டுகள் என்று பொருளில்லை. சென்ற நொடிகூட கடந்த காலம்தானே? அப்போது வருகிற வலியையும் துயரையும் அன்றாடம் உடனுக்குடன் வெளியேற்றிவிட்டால், மனத்தில் அன்பும் அமைதியும் குடிகொள்வதற்கு எத்தனை வசதியாக இருக்கும்?
கட்டுரையாளர் தொடர்புக்கு:
gemba.karthikeyan@gmail.com