மார்க்கெட்டிங் துறையில் பணியாற்ற... | வெற்றி உங்கள் கையில்

மார்க்கெட்டிங் துறையில் பணியாற்ற... | வெற்றி உங்கள் கையில்
Updated on
2 min read

பொறியியல் படித்தவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் உரிய வேலைவாய்ப்பு கிடைக்காமல் சிரமப்படுகிறார்களே ஏன்? - கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி

தமிழ்நாட்டில் 460க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. பொறியியல் பட்டப்படிப்பினைப் படித்து உயர் மதிப்பெண் பெற்றும் வேலை வாய்ப்பு பெற இயலவில்லை என்கிற ஆதங்கம் புரிகிறது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் வேலை வாய்ப்பினைப் பெற மதிப்பெண் மட்டுமே இன்றைய காலக்கட்டத்தில் போதாது. வேலையளிக்கும் நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் உள்படத் தெரிவுசெய்யப்படும் நபர்கள் தனித் திறன்களைப் பெற்றுள்ளனரா என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவேதான், இண்டஸ்ட்ரி 4.0 அடிப்படையில் பொறியியலின் பல்வேறு பிரிவுகளில் ‘நான் முதல்வன்’ திட்டத் தின்கீழ் மாணவர்களுக்குச் சிறப்புத் திறன் பயிற்சிகள் கல்லூரிகளிலேயே வழங்கப்படுகின்றன. மேலும் இளை ஞர்கள் வளாகத் தேர்வினை மட்டுமே நம்பி இல்லாமல், பல்வேறு தேர்வுகளையும் எழுத வேண்டும். உதாரணமாக GATE தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் மத்திய அரசு சார்ந்து பொதுத் துறை நிறு வனங்கள் வேலை அளிக்கின்றன.

மேலும் இந்தியன் இன்ஜினியரிங் சர்வீசஸ் உள்பட அனைத்து போட்டித் தேர்வுகளையும் எழுதவும் தாம் படித்த பாடப்பிரிவில் உயர் தொழில் திறன் பயிற்சி பெற வேண்டும். அது மட்டுமின்றி 360 டிகிரியில் வாழ்வினில் உயர்வினைப் பார்க்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் தொழில் முனைவோர்க்கு மிகப் பெரிய அளவில் ஊக்கமும் ஆக்கமும் வழிகாட்டுதலும் வழங்குகின்றன. நாம் வேலை தேடுவதைவிட நாம் ஏன் பலருக்கு வேலையளிப்பவராக உயரக் கூடாது? இது ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கோலோச்சும் காலம். எனவே, அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து தெரிவுசெய்யுங்கள்.

மார்க்கெட்டிங் துறையில் பணியாற்ற எந்தப் படிப்பைப் படிக்க வேண்டும்? - ராஜேஷ், திருச்சி

மார்க்கெட்டிங் என்பது ஒவ்வொரு தயாரிப்புக்கும் உயர்நாடியாகும். அதன் சிறப்பம்சங்களை மக்களிடையே எப்படி கொண்டுசேர்ப்பது என்பது மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் மிகப்பெரிய சவால். இன்றைய டிஜிட்டல் உலகில் மார்க்கெட்டிங் துறையானது பல பரிமாணங்களைக் கொண்டு ‘ஜெட்’ வேகத்தில் செல்கிறது. இத்துறையில் பிரகாசிக்க பட்டப்படிப்பு முதல் ஆய்வுப்படிப்பு வரை உள்ளது.

உதாரணமாக பி.ஏ. மார்க்கெட்டிங், பி.ஏ. அட்வர்டைஸ்மெண்ட் அண்ட் மார்க்கெட்டிங், பி.பி.ஏ. மார்க்கெட்டிங் ஆகிய படிப்புகள் உள்ளன. பின்னர் முதுகலைப் பாடமாக எம்.எம்.எம். (மாஸ்டர் ஆஃப் மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட்), எம்.ஏ. மார்க் கெட்டிங், எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் போன்ற படிப்புகள் இருக்கின்றன. இவை தவிரவும் நீங்கள் மார்க்கெட்டிங் துறையின் இணையான விளம்பரத் துறையையும் தெரிவு செய்யலாம். இதற்காக எம்.ஏ. கம்யுனிகேஷன், எம்.ஏ. மாஸ் கம்யுனிகேஷன், எம்.ஏ.அட்வர்டைஸ்மெண்ட், எம்.பி.ஏ. டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற வற்றைப் படிக்கலாம்.

எக்சிகியூடிவ் புரோகிராம் இன் டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பினை ஐ.ஐ.எம். இந்தூர், ஐ.ஐ.எம். மும்பை, ஐ.ஐ.எம். காசிபூர் போன்ற கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. மார்க்கெட்டிங் துறையில் பணி புரிபவர்களின் திறன்களைச் செம்மைப் படுத்த தமிழ்நாட்டிலுள்ள ஐ.ஐ.எம். திருச்சியில் ஐந்து மாத டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிப்பு வழங்கப்படுகிறது. இதனைத் தவிர சில தனியார் கல்வி நிறுவனங்கள், சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் துறையை சார்ந்து சிறப்புச் சான்றிதழ் அல்லது பட்டயப் படிப்புகளை வழங்குகின்றன.

- கட்டுரையாளர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் திட்ட இயக்குநர்.

நீங்களும் கேட்கலாம்!

வேலைவாய்ப்பு, உயர் கல்வி தொடர்பான கேள்விகளை, கல்வி & வேலை வழிகாட்டி சிறப்புப் பக்கத்துக்கு நீங்கள் அனுப்பலாம். கேள்விகளுக்கு இரா.நடராஜன் பதில் அளிப்பார். மின்னஞ்சல்: kalvivelai@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in