

இணையக் குற்றங்களில் பாலியல் ரீதியாகவோ பணம் பறிக்கும் வகையிலோ மட்டும் மோசடிகள் நடைபெறுவதில்லை. மனிதர்களை சைபர் குற்றங்களில் ஈடுபடுத்த ஆட்களைப் பிடிக்கும் கூட்டமும் உலகளவில் நெட்வொர்க்குடன் செயல்படுவது உண்டு. அப்படிக் கம்போடியா, தாய்லாந்து சென்று சிக்கிக்கொண்டவர்கள் ஏராளம். ஆனால், அதே பாணியில் மும்பையைச் சேர்ந்த ஆதித்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்தியாவின் அண்டை நாட்டில் சிக்கிக் கொண்ட கதை, இளைஞர்களுக்கு ஓர் உஷார் பாடம்.
கல்லூரியில் படித்து முடித்துவிட்டு, வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்கிற கனவில் ஆதித்யா இருந்தார். தாய்லாந்து, மயன்மார் ஆகிய நாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் மும்பை நிறுவனம் மூலம் அதிக சம்பளத்துடன் கணினி சார்ந்த ஒரு வேலை அவருக்குக் கிடைத்தது. அவர் வேலை செய்யும் இடம் மயன்மார், அண்டை நாடு என்பதால் ஆதித்யாவுக்கு இன்னும் கூடுதல் மகிழ்ச்சி. படகு மூலம்தான் மயன்மாருக்குச் செல்ல வேண்டும் என்று அந்நிறுவனம் கூறியபோது ஆதித்யாவுக்குச் சந்தேகம் வரவில்லை.