இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் இஸ்ரேல் - ஈரான் போர் வரை: சேதி தெரியுமா? @ ஜூன் 16-23

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் இஸ்ரேல் - ஈரான் போர் வரை: சேதி தெரியுமா? @ ஜூன் 16-23
Updated on
2 min read

ஜூன் 16: இந்தியாவின் 16ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.

ஜூன் 16: தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி கே. சுரேந்தர் இடமாறுதலாகி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார்.

ஜூன் 16: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான நெல்லை முத்து (74) உடல்நலக் குறைவால் திருவனந்தபுரத்தில் காலமானார்.

ஜூன் 17: இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ராணுவ தளபதி அலி ஷத்மானி உயிரிழந்தார். டெஹ்ரானில் வசிப்போர் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஜூன் 17: திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களம்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஏடிஜிபி எச்.எம். ஜெயராம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயராமை உள் துறை செயலாளர் தீரஜ் குமார் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஜூன் 17: கர்நாடகத்தில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க வலியுறுத்திய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

ஜூன் 17: டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நெதர்லாந்து - நேபாளம் அணிகள் இடையே கிளாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் 3 சூப்பர் ஓவர்கள் வீசி முடிவு எட்டப்பட்டது.

ஜூன் 18: சாலையோரங்கள், பொதுஇடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை ஜூலை 2ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும் அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூன் 18: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஏடிஜிபி ஜெயராமை நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் ஏடிஜிபியின் இடை நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூன் 20: இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்காவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜூன் 21: கோவை மாவட்டம் வால்பாறை (தனி) தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. டி.கே. அமுல்கந்தசாமி (60) உடல்நலக் குறைவால் காலமானார்.

ஜூன் 21: ஈரானின் இஸ்பஹான் அணுசக்தி தளம் மீது இஸ்ரேல் விமானப் படை மீண்டும் தாக்குதல் நடத்தியது.

ஜூன் 22: அமெரிக்க போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்து சரமாரியாக குண்டுகள், ஏவுகணைகளை வீசி நடத்திய தாக்குதலில் ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன.

ஜூன் 23: இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதலில் ஈரானின் 6 விமானப் படை தளங்கள், ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இத்தாக்குதலில் நூற்றுக்கணக்கான ஈரான் வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜூன் 23: தமிழகத்தில் சைபர் குற்றத்தில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் வரவேற்பு தெரிவித்தது.

ஜூன் 23: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தை சென்னை போலீஸார் கைது செய்தனர்.

ஜூன் 23: நான்கு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 1 (கடி-குஜராத்), ஆம் ஆத்மி 2 (விஸவாதர் - குஜராத், மேற்கு லூதியானா - பஞ்சாப்), காங்கிரஸ் 1 ( நிலாம்பூர் - கேரளம்), திரிணாமூல் காங்கிரஸ் 1 (காளிகஞ்ச் - மேற்கு வங்கம்) தொகுதிகளில் வெற்றி பெற்றன.

தொகுப்பு: மிது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in