Published : 11 Jun 2025 07:00 AM
Last Updated : 11 Jun 2025 07:00 AM

இப்படித்தான் ஐ.ஏ.எஸ். ஆனோம்!

தோல்புர் ஹவுஸ், ஷாஜஹான் சாலை, புதுடெல்லி. இன்று லட்சக் கணக்கான இந்திய இளைஞர்களின் மனத்தில் பசுமரத் தாணி போலப் பதிந்துள்ள முகவரி இது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான தேர்வுகளை நடத்தும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இங்குதான் இயங்கிவருகிறது.

முதல்நிலைத் தேர்விலும் முதன்மைத் தேர்விலும் வெற்றி பெற்றவர்களைத் தேர்வுசெய்யும் இறுதிக்கட்ட நேர்காணல் இங்குள்ள ‘யுபிஎஸ்சி பவ’னில் நடைபெறும். அதையும் சிறப்பாக எதிர்கொண்டு இந்த அலுவலகத்திலிருந்து மன நிறைவுடன் திரும்ப வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுவதாக இருக்கிறது, ‘இலக்கு: ஐஏஎஸ்’ நூல். குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்ற ஏழு பேரின் அனுபவங்களை ஒரு கதைபோல விவரிக்கிறது இந்த நூல்.

அனுபவம் வாய்ந்த நூலாசிரியர்: இந்த நூலை எழுதியுள்ள சஜ்ஜன் யாதவும் ஒரு குடிமைப் பணி அதிகாரி தான். இவர் 1994இல் ஐ.ஏ.எஸ். ஆனவர்; தற்போது மத்திய அரசின் நிதித்துறையில் கூடுதல் செயலாளராகப் பணி புரிந்துகொண்டிருக்கிறார். தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டதற்கான இந்தியக்குடியரசுத் தலைவர் விருது உள்படப் பல விருது களை சஜ்ஜன் யாதவ் பெற்றிருக்கிறார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய இந்நூலை பி.எஸ்.வி. குமாரசாமி தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

வெற்றியாளர்கள் என்ன செய்தார்கள்? - நூலில் வெற்றியாளர்களின் பலம் மட்டுமல்லாமல் பலவீனங்களும் கூறப்பட்டுள்ளன. தங்கள் குறைகளையும் தவறான அணுகுமுறைகளையும் அவர்கள் மாற்றிக் கொண்டதும், அதன் மூலம் முன்னேற்றம் அடைந்ததும் விவரிக்கப்பட்டுள்ளன. திருமண வாழ்க்கை, பொருளாதாரத்துக்கு உத்தரவாதம் தருகிற ஓர் அரசு வேலை என்கிற சூழலில் உள்ள பெண்கள்கூட, குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதற்கு கேரள மாநிலம் திருவனந்த புரத்தைச் சேர்ந்த மின்னு பி.எம். ஓர் உதாரணம். காவல்துறையில் ஒரு கீழ்நிலை எழுத்தராக இருந்த மின்னுவின் திறமையைக் கண்ட உயரதிகாரியின் பாராட்டும் ஆலோ சனையும்தான் அவருக்கு முதல் கதவைத் திறந்துவிட்டது.

எந்த ஆயத்தமும் இன்றி ஏற்கெனவே இந்தத் தேர்வை எழுதியிருந்த மின்னு, முறையாகப் பயிற்சி எடுத்துக்கொண்ட பின்னரும் மூன்று முறை தோல்வி அடைந்தார். நான்காம் முயற்சி அவரை மின்னு ஐ.ஏ.எஸ். ஆக்கியது. பிஹார் மாநிலத்தில் மிக ஏழ்மையான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சத்தியம் காந்தி, இயந்திரப் பொறியாளர் வேலையை விட்டு விட்டு தேர்வுக்காக உழைத்த பரத் சிங், பதினாறு வயதில் பார்வைத்திறனை இழந்தாலும் துவண்டு விடாத அஞ்சலி சர்மா, காஷ்மீரில் தேனீ வளர்க்கும் தொழிலில் ஈடுபடும் குடும்பத் தைச் சேர்ந்த வசீம் அகமது பட், தன்தாயின் உறுதுணை யோடு வெற்றி பெற்ற சுருதி சர்மா, அமெரிக் காவில் ஐடி நிறுவன வேலையை உதறி விட்டுக் குடிமைப் பணிக்கு வந்த லவீஷ் ஓர்டியா ஆகியோரின் அனுபவங்களும் இளைஞர் களுக்குச் சிறந்த வழிகாட்டுதலாக இருக்கும்.

அடிப்படைத் தேவைகள்: தேர்வுக்கான தெளிவான திட்டமிடல், நேர விரயத்தைத் தவிர்க்கும் வகையிலான கால அட்டவணை தயாரித்தல், அடுத்த தேர்வு காத்திருக்கையில் முந்தைய தேர்வு குறித்த சுய மதிப்பீட்டைத் தவிர்ப்பது, சறுக்கல்களை வெறுக்காமல் அதற்கான காரணத்தைப் புரிந்து கொண்டு அவற்றைச் சரிசெய்வது, நேர்காணலில் நம் தனித்தன்மையைத் தக்கவைத்துக்கொள்வது, இயல்பாக நடந்து கொள்வது, சமூக வலைத்தளங்களிலிருந்து ஒதுங்கி இருப்பது, வெற்றி பெற்ற பின்னர் ஊடகங்களை எச்சரிக்கையோடு கையாளுதல் எனத் தன்னுடைய, வெற்றியாளர்களுடைய அனுபவக் கருத்துகளை மிக நேர்த்தியாக சஜ்ஜன் யாதவ் இதில் தொகுத்திருக்கிறார்.

- anandchelliah@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x