Last Updated : 04 Jun, 2025 07:34 AM

 

Published : 04 Jun 2025 07:34 AM
Last Updated : 04 Jun 2025 07:34 AM

ஓவியத் திறமையும் தொழில்நுட்பத் திறனும் கொண்டோருக்கான படிப்பு | புதியன விரும்பு 2.0 - 7

அறிவியலும் கலைத்திறனும் இணைந்து பரிமளிக்கும் துறை ‘Architecture’ எனப்படும் கட்டிட வடிவமைப்பு. கலை ரசனையும் ஓவியத் திறமையும் கூடவே தொழில்நுட்ப அறிவும் ஆர்வமும் கொண்டவர்களுக்கு ஏற்ற படிப்பு பி.ஆர்க். கட்டுமான இடத்தில் என்னென்ன புதுமை களைப் புகுத்த முடியும், அதற்கு எவ்வளவு செலவாகும், எவ்வளவு இடம் தேவைப்படும், எவ்வளவு பொருள்கள் தேவைப்படும், கட்டிடத்துக்கு எவ்வளவு காற்றோட்டமும் வெளிச்சமும் கிடைக்கும் என்று பல்வேறு விஷயங்களையும் கருத்தில் கொண்டு கட்டு மான வடிவமைப்பைத் திட்டமிட வேண்டியது கட்டிட வடிவமைப்பாளர்களின் வேலை. புராதனக் கட்டிடங்களைப் பாதுகாப்பது, ‘கிரீன் பில்டிங்’ என்கிற சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கட்டிட வடிவமைப்பு, நகரங்களைத் திட்டமிடுதல், திறந்தவெளி வடிவமைப்பு போன்றவையும் கட்டிட வடிவமைப்பாளரின் பணிகளில் அடங்கும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகத் திகழும் கிண்டி வளாகத்தில் உள்ள ‘ஸ்கூல் ஆஃப் ஆர்கி டெக்சர் அண்ட் பிளானிங்’ கல்வி நிலையத்தில் பி.ஆர்க் படிக்கலாம். இது தவிர, பி.ஆர்க். படிக்க நாடு முழுவதும் 350க்கும் மேற்பட்ட பொறியியல் கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஐந்து ஆண்டு படிப்பில் சேர பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கட்டாயமாகப் படித்திருக்க வேண்டும்.

தனி கலந்தாய்வு: பி.ஆர்க் படிப்புகளில் சேருவதற்கு ‘Council of Architecture’ நடத்தும் நேட்டா (National Aptitude Test in Architecture - NATA) என்கிற திறனறித் தேர்வை எழுத வேண்டியது அவசியம். இந்தப் படிப்பில் சேர தேசியத் தேர்வு முகமை நடத்தும் ஜே.இ.இ. மெயின் நுழைவுத் தேர்வையும் எழுதலாம். பாலிடெக்னிக்குகளில் ஆர்கிடெக்சர் அசிஸ்டென்ஷிப் டிப்ளமோ படித்தவர்களும் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்த மாணவர்களும் பி.ஆர்க். படிப்பில் முதல் ஆண்டில் சேரலாம். தமிழ்நாட்டில் பி.ஆர்க். படிப்பில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க தனியே கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

பி.ஆர்க். படிப்பை முடித்தவர்கள் ‘கவுன்சில் ஆஃப் ஆர்கிடெக்சர்’ அமைப்பில் பதிவுசெய்துகொண்ட பிறகு, கட்டிடக் கலை வடிவமைப்பாளராகப் பணிபுரியலாம். கட்டிட நிர்மாண நிறுவனங்களிலும் பொதுப்பணித் துறை போன்ற அரசுத் துறை நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும். சில ஆண்டுகள் அனுபவத்துக்குப் பிறகு இத்துறையின் நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டு சொந்தமாகக் கட்டிடக்கலை நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்துபவர்களும் உள்ளனர்.

சிவில் என்ஜினியரிங்: பொறியியல் படிப்புகளில் முன்னோடிப் படிப்பான சிவில் பொறியியல் படிப்புக்கும் கட்டிட வடிவமைப்பு படிப்புக்கும் இடையே தொடர்பு இருந்தாலும்கூட, இரண்டுக்கும் வித்தியாசங்களும் உண்டு. கட்டிடங்களின் ஸ்திரத்தன்மையை உத்தரவாதப்படுத்த வேண்டியது சிவில் பொறியியலாளரின் பணி. அதற்கேற்ப பொறியியல் தொழில்நுட்பங்கள் சிவில் பொறியியல் மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படுகின்றன. குடியிருப்போரின் தேவைக்கும் ரசனைக்கும் ஏற்ப கட்டிடங்களை வடிவமைத்துக் கொடுக்கவேண்டியது கட்டிட வடிவமைப்பாளரின் பணி.

நாட்டில் கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள், கால்வாய்கள், அணைகள், வடிகால்கள், துறைமுகங்கள், விமானத் தளங்கள், ரயில் போக்குவரத்து வசதிகள் போன்ற உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் சிவில் பொறியாளர்களின் பங்கு முக்கியமானது. இந்தப் படிப்பைப் படித்தவர்களுக்கு அரசுத் துறைகளிலும் பொதுத் துறை நிறுவனங்களில் மட்டுமல்லாமல் தனியார் துறைகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

நேவல் ஆர்க்கிடெக்சர்: கப்பல்களின் வடிவமைப்பு, உருவாக்கம், பராமரிப்பு, பழுதுபார்த்தல் போன்ற பணிகளுக்கு நேவல் ஆர்கிடெக்ச்சர் (Navalarchitecture) படித்தவர்கள் தேவைப்படுகி றார்கள். இந்தத் துறையில் திறமையாளர்களை உருவாக்கும் வகையில் இந்தப் படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. நேவல் ஆர்கி டெக்சர், ஆஃப்சோர் பொறியாளர், மரைன் பொறியாளர், புராஜெக்ட் மேலாளர், மரைன் சர்வேயர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பி.டெக். நேவல் ஆர்கிடெக்சர் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் (Indian Maritime University) விசாகப்பட்டினம் வளாகத்தில் நேவல் ஆர்கிடெக்சர் அண்ட் ஓஷன் என்ஜினியரிங், நேவல் ஆர்கிடெக்சர் அண்ட் ஷிப் பில்டிங் ஆகிய பாடப்பிரிவுகளில் நான்கு ஆண்டு பி.டெக். படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்பில் சேருவதற்கு பிளஸ் டூவில் கணித்தை ஒரு பாடமாகப் படித்திருப்பதுடன் இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வையும் (Common Entrance Test- IMU CET) எழுத வேண்டும். அத்துடன் உடற்தகுதியும் அவசியம்.

ஷிப் பில்டிங் என்ஜினியரிங் டிப்ளமோ, நேவல் ஆர்கிடெக்சர் அண்ட் ஆஃப்சோர் என்ஜினியரிங், மெக்கானிக்கல், சிவில் என்ஜினியரிங் டிப்ளமோ, பிஎஸ்சி (ஷிப் பில்டிங் அண்ட் ரிப்பேர்) போன்றபடிப்புகளில் 60 சதவீத மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் பி.டெக். நேவல் ஆர்கிடெக்சர் படிப்புகளில் லேட்டரல் என்ட்ரி மூலம் இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படிக்கலாம்.

பாரம்பரியக் கட்டிடக்கலைப் படிப்பு: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை - கவின்கலைப் பல்கலைக்கழகத் தின் கீழ் மகாபலிபுரத்தில் இயங்கி வரும் அரசு கட்டிடக்கலை - சிற்பக் கல்லூரியில் பாரம்பரியக் கட்டிடக்கலையில் (Traditio nal Architecture) 4 ஆண்டு பி.டெக். படிப்பு உள்ளது. பிளஸ் டூ தேர்வில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்பில் சேரலாம்.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x