Published : 04 Jun 2025 07:26 AM
Last Updated : 04 Jun 2025 07:26 AM
மனநலப் பிரச்சினையால் பாதிக்கப் பட்டவர் மீது காட்டப்படும் எதிர்மறை மனப்பான்மை, கற்பிதங்கள், தவறான கருத்துகள் ஆகியவை ‘சமூகக் களங்கம்’ (social stigma) எனப்படுகிறது. இது பாகு பாட்டுக்கு வழிவகுப்பதோடு, பாதிக்கப்பட்டவர் உதவி நாடுவதற்கும் சிகிச்சை பெறுவதற்கும் தடையாக இருக்கிறது. இதனால் பாதிக்கப் பட்டவர் மட்டுமல்லாது அவரைச் சார்ந்த வர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
உரையாடல் வேண்டும்: இந்தக் காலத்தில் கல்வியில், விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்பதைத் தாண்டி சமூக ஊடகங்களில், டிஜிட்டல் தளங்களில் திறமைகளை வெளிப்படுத்துவதில் ஒருவர் சிறந்து விளங்க வேண்டு மென்கிற கட்டாயத்துக்கு இளம் வயதினர் தள்ளப்படுகின்றனர்.
பள்ளி, கல்லூரி வயதைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் இந்த அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். தன் வயதைச் சேர்ந்த ஒருவரால் முடியும்போது, நம்மால் ஏன் முடியவில்லை என்கிற கேள்வி ஒரு மாணவருக்கு எழலாம். அதை வெளியே சொல்ல முடியாமல் தனக்குள்ளேயே சண்டை போட்டுக் கொண்டிருந்தால் மன அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியமே அதிகம்.
ஒருவேளை தன்னுடைய தயக்கத்தை விலக்கி ஒருவர் பகிர்ந்துகொள்கிறார் எனும்போது, அவரை இன்னொருவரோடு ஒப்பிட்டுப் பேசாமல், கிண்டல் செய்யாமல் இருக்க வேண்டும். இது பெற்றோர், ஆசிரியர், நண்பர்களின் கடமை. மனநலப் பிரச்சினையால் பாதிக்கப் பட்ட பெரும்பாலானோர் தன்னுடைய பிரச்சி னையை இன்னொருவர் எப்படி அணுகுவார் என்கிற தயக்கத்தினாலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்து விடுகிறார் கள். தெரிந்தோ தெரியாமலோ ஒருவரின் மனப் போராட்டத்துக்குச் ‘சமூகக் களங்கம்’ ஏற்படுத்துபவரும் காரணமாகிறார்.
எனவே, இளம் தலைமுறையினர் மனநலம் சார்ந்த அறிவியல்ரீதியான கருத்துகளைப் பற்றித் தெரிந்துகொண்டு நண்பர்களோடும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் உரையாடலைத் தொடங்க வேண்டும், அதைப் பரவலாக்க வேண்டும். இதன் மூலம் சமூகக் களங்கம் ஏற்படுத்தும் சவால்களைப் பற்றிப் பொது வெளியில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.
மீண்டுவர முடியும்: வேலைக்குச் செல்லும்போது பொருளாதார நெருக்கடி, பணியிடம் சார்ந்த நெருக்கடிகள் ஆகியவை ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படா மல் இருக்கும் காலக்கட்டமே கிடையாதா எனக் குழம்பிப்போக வேண்டாம். மனநலச் சிக்கல் ஏற்படுவதற்குத் தனி ஒருவர் மட்டுமே காரணமாகிவிட முடியாது. தனிமனிதர் ஒருவர் மனநலத்தோடு இருப்பதற்கும் பாதிக்கப்படுவதற்கும் சமூகத்தின் பங்கு பெரியது. மனக் கவலை, மனப்பதற்றம், வாழ்க்கை பற்றிய எதிர்மறை எண்ணங்கள் உள்ளிட்ட மனநல பாதிப்புக்கான அறி குறிகள் தொடர்ந்து இருக்கும்போது, தயங்காமல் மனநல மருத்துவரை நாட வேண்டும்.
மனநலப் பிரச்சினைகளில் இருந்து மீண்டுவர முறையான - அறிவியல் பூர்வமான மருத்துவச் சிகிச்சை முறைகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர் எவ்விதத்தயக்கமும் இல்லாமல் அருகில் உள்ள பொது மருத்துவரையோ குடும்ப மருத்துவரையோ அல்லது மனநல மருத்துவரையோ சந்தித்து தங்களுடைய மனநலப் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொண்டு சிகிச்சையைப் பெறலாம். பாதிக்கப்பட்ட ஒருவரை உங்களது நட்பு வட்டத்திலோ, கல்லூரியிலோ, பணி இடத்திலோ பார்க்க நேரிட்டால் அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முயற்சி செய்யலாம்.
தவறான நம்பிக்கைகள் காரணமாக அறிவியலுக்குப் புறம்பான வழிகளைப் பின்பற்றி பிரச்சினையின் தீவிரத்தை அதிகரித்து விடாமல், இதர உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவரீதியான சிகிச்சையை அணுகுவது போல மனநலப் பிரச்சினைகளுக்கும் மனநல மருத்துவர்களை அணுகி, உரிய சிகிச்சை மூலம் முழுமையாக மீண்டுவரலாம்!
(நிறைந்தது)
- addlifetoyearz@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT